இறைத்தந்தையின் பேரன்பில் நம்பிக்கை கொண்டு வாழ, வழிகாட்டும் ஒளியாக ஒளிரும் இயேசு ஆண்டவர், அக ஒளியாக உறைந்து நம்மில் அருள் ஒளி பொழிகின்றார். அவரது வழிநடத்துதலில் செய்யும் நற்செயல்கள் நம்மைப் பேறுபெற்றவர்களாக உருவாக்கும். சுடரொளியாக நாம் உரையாடி உறவாடும் அனைவரும் ஒளியின் மக்களாக விளங்குவர். இறைத் தந்தையின் பேரன்பில் நம்பிக்கைகொண்டு அவரை மாட்சிப்படுத்துவர். “உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது, அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” (மத் 5:16) என்று இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் அருளைப் பெற்றுக்கொள்கின்றோம்.
நம்பிக்கையாளர்கள்
நிலைவாழ்வை நோக்கிப் பயணிக்கும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ வல்லமை பெற்றுக்கொள்கின்றோம். இவ்வாறு நாம் நற்செயல் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். “ஏனெனில், நாம் நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நாம் நற்செயல் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்...” (எபே 2:10) என்பதையும் நாம் நினைவில்கொள்ளவேண்டும்.
நமக்காக
ஏற்பாடு செய்துவிட்டு ஒதுங்கி நிற்பவர் அல்லர் நம் ஆண்டவர். நம் உடனிருந்து அவரே செயலாற்றுகின்றார். அவரின்றி நாமாக எதுவும் செய்ய இயலாது என்பதை, தூய பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் மிகச் சிறப்பாக உணர்த்துகின்றார்: “கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார்; அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்”
(பிலி 2:13). நமக்கு நன்மை மட்டுமே செய்யும் நல்ல ஆண்டவர், நாமும் பிறருக்கு நன்மை செய்வதில் ஆர்வம் கொண்டு, அன்பு உறவை வளர்க்க நம்மைத் தூண்டுவதோடு, தம் அளப்பரிய அருளால் நிரப்பிச் செயல்படுகின்றார். அக ஒளியால் நிரப்பப்பட்ட
அனைவரும் ஒளியின் மக்களாக, அன்புறவில் இயேசுவின் சீடர்களாக நிறைவுடன் வாழ முடியும். இது அனுபவத்தில் நாம் உணர்ந்து, அனுபவித்த பேருண்மை.
2026, பிப்ரவரி மாதம்
2-ஆம் நாள், ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல் விழா.
11 மணிக்கு ஓர் அடக்கத் திருப்பலியில் கலந்துகொள்ளும்
கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், திருவிழா திருப்பலியில் கலந்துகொள்ளும் ஆர்வத்துடன் பங்கேற்ற பின், உரிய இடத்தில் அடக்கத் திருப்பலியில் கலந்துகொள்ள விரைந்தேன். பேருந்து கால தாமதமாகப் புறப்பட்டது. பேருந்தில் என்னுடன் பயணம் செய்த ஒரு தாய் தன் வேதனை நிறைந்த வாழ்வினை விவரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் மன்னிப்பின் மாண்பினையும், நன்றியுடன் செபிப்பதன் மகத்துவத்தையும் எடுத்துரைத்தேன்.
இது ஒரு நற்செய்தி அறிவிக்கும் வாய்ப்பாக அமைந்தது.
சிறிது
தூரம் நடந்துசெல்லவேண்டும். வேகமாக நடக்கவேண்டும், ஆனால் இயலவில்லை. அந்த நிலையில் அறிமுகம் இல்லாத ஒருவர், ‘எங்கே செல்லவேண்டும்?’ என்று கேட்டார். நான் ‘ஆனந்தா இல்லம்’ என்று கூறியதும், ‘நானும் அங்குதான் செல்கின்றேன்’ என்று
பைக்கில் அழைத்துச் சென்றார். நன்றியுடன், அவர் நலனுக்காகச் செபிக்கின்றேன் என்று கூறிவிட்டு நான் விரைவாக நடந்த போது, அவர் மீண்டும் என்னிடம் வந்து தன் பிரச்சினைகளைக் கூறி செபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அங்கிருந்து
திரும்பியபோது என் நண்பர் ஒருவர் தன் வாகனத்தில் என் இல்லம் கொண்டு வந்து சேர்த்தார். இங்கு குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளில் ஆண்டவரின் பேரன்பு சிறப்பாக வெளிப்பட்டதையும், என்னைத் தம் மீட்பின் கருவியாக்கி ஆண்டவரே செயலாற்றியதையும் உணர்ந்து நன்றிப்
பெருக்குடன் அவரிடம் சரணடைந்தேன். பேரொளியாம் ஆண்டவரிடம் அனைத்தையும் ஒப்படைத்துச் சரணடையும்பொழுது, அவர் அளவற்ற பேரன்பு காட்டி நம் சார்பாகச் செயலாற்றுவார்.
திபா
37:5-இல் நாம் காண்கின்றோம்: “உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு. அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.” இந்தச்
செபம் நம் வாழ்வாகும்பொழுது நாம் பேரொளியின் ஒளியாகச் சுடர்விடுவோம். தூய ஆவியாரின் வல்லமையால், இயேசுவின் நெருக்கமான தோழமையை அனுபவித்து, அவரின் அன்புச் சீடராவோம், இறைத்தந்தையை மாட்சிப்படுத்துவோம்.
இயேசுவைக் காணிக்கையாக
ஒப்புக்கொடுத்த
தின
செபம்:
என்றும்
வாழும் இறைவா! உம் திருமகன் இயேசு மனிதராகி இன்று ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதை நாங்கள் நினைவுகூர்கிறோம். மரியாவும் யோசேப்பும் இயேசுவை உமக்கு அர்ப்பணித்ததுபோல, நாங்களும் இந்த நாளில் எங்கள் உள்ளம், உடல், எண்ணம், சொல், செயல் அனைத்தையும் உமக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறோம். நாங்கள் பாவத்தின் இருளில் வாழாமல், ஒளியின் பிள்ளைகளாக வாழவும், கிறிஸ்துவின் ஒளியை உலகிற்கு எடுத்துச்செல்லவும் வரமருளும். எங்களுடைய வாழ்வு, எங்கள் குடும்பங்கள், எங்கள் பணிகள் அனைத்தும் உமக்கு உகந்த காணிக்கையாக மாற அருள்புரியும்.
என்றும்
வாழும் தந்தையே! நீர் எனக்குத் தந்த இந்த வாழ்வை மீண்டும் உமது கரங்களிலேயே அர்ப்பணிக்கிறேன். சிமியோனைப் போல நானும் இயேசுவை என் வாழ்வில் கண்டு, இறைவனின் மீட்பை உணர்ந்து, என் இறுதி மூச்சுவரை உமக்கு உண்மையுள்ளவனாக வாழ அருள் தாரும். ஆண்டவரே, இந்த நாளை உமக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த நாளில் நான் செய்யும் நன்மைகள், சந்திக்கப் போகும் துன்பங்கள், மகிழ்வுகள் அனைத்தையும் உமது திருப்பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். ஆமென்!