கேமரூன் நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஆங்கிலம் பேசும் நகரமான பாமெண்டாவிற்குத் திருத்தந்தை லியோ வருகை புரிந்தபோது, அங்கு நடைபெற்ற அமைதி சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசியல் மற்றும் இராணுவ ஆதாயங்களுக்காக மதத்தைப் பயன்படுத்துபவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார் திருத்தந்தை லியோ. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்களின் துயரங்களைக் கேட்டறிந்த திருத்தந்தை, “அழிப்பதற்கு ஒரு நிமிடம் போதும்; ஆனால், கட்டியெழுப்ப ஒரு வாழ்நாளே போதாது என்பதை ‘யுத்தப் பிரபுக்கள்’ உணர மறுக்கின்றனர்” என்று சாடினார். ஆயுதங்களுக்காகப் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிடும் நாடுகள், மக்களின் காயங்களைக் குணப்படுத்தவும், கல்விக்கும் நிதி ஒதுக்க மறுப்பதைக் கண்டு தனது வேதனையைத் தெரிவித்தார்.