news-details
கவிதை
கவிதை கீற்றுகள்

நெகிழ்ச்சி!

கடைசி காலத்தில்

அழுவதற்கு மட்டுமே

அவகாசம்

கொடுத்த மகன்

சில நேரங்களில்

சிரித்தபடியே காட்சிதரும்

தாய்-தந்தையின்

பிளாஸ்டிக் மாலை மாட்டிய

புகைப்படத்தைப் பார்த்து

நெகிழ்ந்துதான் போகிறான்

மனைவிக்குத் தெரியாமல்!

 

பக்தி!

அந்திமாலை நேரம்

ஆலய மணி ஒலித்தது

அடித்துப் புரண்டு

எழுந்தேன்

ஆடைகள் மாற்றினேன்

ஆறு மணிக்கெல்லாம்

ஆலயத்தில்

இருக்கவேண்டும்

அங்கே என் காதலி

எனக்காகக்

காத்துக்கொண்டிருப்பாள்!

 

உள்ளேன் ஐயா!

பல்லு வெளக்கி

குளிக்க வைத்து

தயார்படுத்தினாள் அம்மா!

ஸ்கூலுக்குப் போக

வேணாமா?

சீக்கிரம் கௌம்பு

அவசரப்படுத்தினார் அப்பா!

தூக்குச்சட்டிய

தேய்ச்சுக்கழுவி

கையில் திணித்தாள்

விவரம்புரியாத தங்கை!

சத்துணவு மிஞ்சிச்சின்னா

சாயங்காலம்

கொண்டுவாண்ணே

சாப்பிடுவோம்!’

 

சுமை!

பிறக்கும்முன்

வயிற்றில் சுமந்த

அம்மாவும்,

பிறந்த பின்

தோளில் சுமந்த

அப்பாவும்

பிள்ளையிடம் சொல்லி

வைத்திருந்தார்கள்

சுமை

சுகமாயிருந்ததென்று!

வளர்ந்தவுடன்

அக்குழந்தை

யாரிடம் சொல்வான்

முதுகு வலிக்கிறதென்று

புத்தகப்பையைச்

சுமக்கிறபோதெல்லாம்!

 

ஞானோதயம்!

வயதான காலத்தில்

பிள்ளைகள் காப்பாற்றுவார்கள்

என நம்பி நம்பி வாலிப வயதில்

ஓய்வின்றி உழைத்து உழைத்து

சொத்துகள் சேர்த்து

இறுதியில் அனைத்தையும்

பறித்துக்கொண்டு அவர்களாலேயே

துரத்தப்பட்ட தந்தை

இப்போதுதான் தனக்காகவும்

தன் வயதான மனைவிக்காகவும்

கொஞ்சமான சொத்தைப்

பெற்றுத் தர ஆண்டவனைத்

தேடிக்கொண்டிருக்கிறார்

ஆறடி நிலத்திற்காக!

 

முதல் சம்பளம்!

காலையில் எழுப்பி

மூஞ்சிக் கழுவி

குளிக்க வச்சு, டிபன் ஊட்டி

சாப்பாடு கட்டி, ஷூ மாட்டி

பள்ளிக்கு அனுப்பிய

தெரசா பாட்டிக்கும்,

அடாது மழை பெய்தாலும்

விடாது என்னைப்

பள்ளிக்குக் கூட்டிப்போய்

பத்திரமாய்க் கூட்டி வந்த

ஆட்டோ தாத்தா

ஆறுமுக ஐயாவுக்கும்,

மதிய உணவு வேளையில்

பிரியாணிச் சோறு

பகிர்ந்து உண்ட

பள்ளித் தோழன்

ஜமால் பயலுக்கும்,

மாலை வேளையில்

வீடு திரும்பியதும்

வயது பார்க்காமல்

என்னுடன் கிட்டி

விளையாடிய

எதிர் வீட்டு

சந்திரன் மாமாவுக்கும்

மறக்காமல் பரிசுப்பொருள்

வாங்கி வைத்திருக்கிறேன்

இன்று எனது

முதல் சம்பளம்!