news-details
ஆன்மிகம்
மரியா கடவுளின் இரக்கத்தினைப் புகழ்ந்து பாடுகின்றார்! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 35)

“மனுவுருவான இறைமகனின் தாயாக இருப்பதற்குத் தாழ்ச்சி மிகுந்த அடியவளை அழைத்த இறைவனின் பெருந்தன்மையை நினைவுகூர்ந்து ‘மரியாவின் புகழ்ச்சிப் பாடலில் (Magnificat) கன்னி மரியா எடுத்துரைக்கிறார் என்று மரியா பற்றிய தனது மறைக்கல்வி போதனையில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் ‘மரியாவின் புகழ்ச்சிப் பாடல் என்று அழைக்கப்படுகின்ற Magnificat பற்றிக் கூறுகின்றார்.

1. பழைய ஏற்பாட்டுப் பாரம்பரியத்தினால் தூண்டப்பட்டு, மரியா அவர் வழியாகக் கடவுள் செய்த அற்புதங்களைப் புகழ்ச்சிப் பாடல் பாடிக் கொண்டாடுகின்றார். இப்பாடல் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பிற்கான கன்னி மரியாவின் பதிலாக இருக்கின்றது: வானதூதர் தனது உரையாடலில் மரியாவை மகிழ்வதற்கு அழைக்கின்றார். ஆகவே, தனது ஆன்மாவின் புகழ்ச்சியை அவரது  மீட்பராம் கடவுளுக்கு இப்பொழுது வெளிப்படுத்துகின்றார். அவரது மகிழ்ச்சியானது வரலாற்று முக்கியத்துவமில்லாத ஒரு சாதாரண பெண்ணான அவரை நோக்கி இறைவனின் கருணைமிக்க பார்வை திரும்பியதன் சொந்த அனுபவத்திலிருந்து பெருக்கெடுக்கின்றதொன்றாகும்.

Magnificat என்ற சொல்லானது, உடன்படிக்கையின் மக்களது நம்பிக்கை, எதிர்பார்ப்பு  மற்றும் மனித ஆன்மாவின் உன்னதமான ஆசையையும் கடந்துசென்று, வானதூதர் வழியாக இறைவனின் எல்லாம் வல்ல தன்மையை வெளிப்படுத்தும் அவரது மேன்மையைக் கொண்டாடுதல் என்ற பொருள் கொண்ட கிரேக்க வார்த்தையின் இலத்தீன் மொழிபெயர்ப்பாகும். 

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்

வல்லமை மற்றும் இரக்கமுள்ள ஆண்டவருக்கு முன், இப்பாடல் வழியாக மரியா அவரது தாழ்ச்சியின் உணர்வை வெளிப்படுத்துகின்றார்: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார் (லூக் 1:47-48). ‘Tapeinosis என்ற கிரேக்கச் சொல்லானது ஒருவேளை சாமுவேலின் தாயாகிய அன்னாவின் பாடலிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். இது தனது துன்பங்களைக் கடவுளிடம் நம்பி ஒப்படைக்கின்ற ஒரு மலடியின் ‘அவமானம் (humiliation) மற்றும் ‘இழிநிலையை (misery) (ஒப்பிடுக. 1சாமு 1:11) நம்முடைய கவனத்திற்குக் கொண்டு வருகின்றது. இதற்கு ஒத்ததோர் உணர்வோடு, தனது அற்ப நிலையை உணர்ந்து அவரது ஏழ்மை நிலையை ஒரு சுதந்திரமான தீர்மானத்தின் வழியாக நாசரேத்தைச் சார்ந்த ஓர் எளிய பெண்ணைக் கண்ணோக்கி, மீட்பரின் தாயாக அழைத்த இறைவன்முன் வெளிப்படுத்துகின்றார்.

2. “இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர் (லூக் 1:48) என்ற வார்த்தைகளானது முதன் முதலாக மரியாவை ‘பேறுபெற்றவர் என்று அழைத்த எலிசபெத்தின் வாழ்த்துச் செய்தியிலிருந்து (லூக் 1:45) எழுந்ததொன்றாகும். அந்த அறிவிப்புச் செய்தியானது ஒரு தளராத உத்வேகத்தோடு எந்தவித தயக்கமுமில்லாமல் இன்னும் அதிகமாக எங்கும் எடுத்துச் செல்லப்படும் என்பதை இப்பாடல் முன்னறிவிக்கின்றது. அதேநேரத்தில், திரு அவையின் தொடக்க நூற்றாண்டுகளிலிருந்தே வழக்கத்திலிருக்கின்ற இயேசுவின் தாய்க்கான சிறப்பு வணக்கத்திற்கும் சான்றுபகர்கின்றது. மரியாவின் புகழ்ச்சிப் பாடல்தான் நாசரேத்து கன்னி மரியாவுக்கான திரு அவையின் அன்பை வெளிப்படுத்த, ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட்ட பல்வேறுபட்ட பக்தி வடிவங்களின் முதல் கனியாக இருக்கின்றது.

3. “ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார் (லூக் 1:49-50).

மரியாவில் இறைவன் செய்த அந்த அரும்பெரும் செயல்கள் யாவை? பழைய ஏற்பாட்டில் இந்தச் சொல்லாடலானது எகிப்து அல்லது பாபிலோனியாவிலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவித்ததைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மரியாவின் புகழ்ச்சிப் பாடலில், வானதூதரின் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்விற்குப் பிறகு நாசரேத்தில் நிகழ்ந்த மறையுண்மையான இயேசுவின் கன்னிக் கருத்தரிப்பைக் குறிக்கின்றது.

மரியாவின்  புகழ்ச்சிப் பாடல், உண்மையில் ஓர் இறையியல் பாடல். ஏனென்றால், அது மரியாவின்  தாழ்நிலையைக் கண்ணுற்ற கடவுள் கபிரியேல் தூதர் அறிவித்தவாறு எல்லாம் செய்ய வல்லவர் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனிடமும் நம்பிக்கை மற்றும் கனிவு கொண்ட இரக்கமுள்ள கடவுளாகவும் இருக்கிறார்.

அவர்தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பி விடுகிறார் (லூக் 1:51-53).

அறிவார்ந்த அவரின் வரலாற்றுப் பார்வையோடு, கடவுளின் புரிந்துகொள்ள இயலாத செயலின் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதில் மரியா நம்மை வழிநடத்திச் செல்கின்றார்.  உலகத்தின் தீர்ப்புகளைத் தலைகீழாக மாற்றி, பணக்காரர் மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவ வருகின்றார். மேலும், அவரிடம் தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்களுக்கு மிதமிஞ்சிய வகையில் நலன்களால் அவர் நிரப்புகிறார் (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண். 37).

இத்தகைய வார்த்தைகள் மரியாவைத் திடமான மற்றும் உயர்வானதொரு மாதிரியாகக் காட்டுகின்றன. மேலும், கடவுளின் கருணையை ஈர்ப்பது தாழ்ச்சிமிகுந்த இதயமே  என்பதையும் நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன.

கடவுள் அவரது வாக்குறுதிகளை அபரிமிதமான தாராள குணத்தோடு மரியாவில் நிறைவேற்றுகின்றார்!

5. இறுதியாக, மரியாவின் புகழ்ச்சிப் பாடலானது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குக் கடவுளது  வாக்குறுதிகள், அவரது நம்பிக்கைத்தன்மையின் நிறைவை உயர்த்திப்பிடிக்கின்றது: “மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் (லூக் 1:54-55).

தெய்வீகக் கொடைகளால் நிரப்பப்பட்ட மரியா, தன் பார்வையைத் தனது வாழ்வில் நிகழ்ந்த சொந்த நிகழ்வுகளோடு நிறுத்திக்கொள்ளவில்லை; மாறாக, இந்தக் கொடைகள் எவ்வாறு கடவுளின் கருணையை அவரது மக்கள் அனைவரிடமும் காட்டுகின்றன என்பதையும் உணர்ந்தாள். அவளில், கடவுள் தனது வாக்குறுதிகளை நம்பகத்தன்மை மற்றும் தாராள மனப்பான்மையுடன் நிறைவேற்றுகிறார்.

பழைய ஏற்பாட்டாலும், சீயோனின் மகளின் ஆன்மிகத்தாலும் ஈர்க்கப்பட்டு, மரியாவின்  புகழ்ச்சிப் பாடல் அதன் அடிப்படையிலான இறைவாக்கினர் நூல்களை (prophetic texts) மிஞ்சி, இஸ்ரயேலின் மீட்பர் பற்றிய நம்பிக்கைகளைவிட (messeianic hopes) அதிகமாக இறைத் தலையீட்டின் தொடக்கத்தை ‘அருளால் நிறைந்தவளாகிய அவரில் வெளிப்படுத்துகிறது; இது வார்த்தை மனுவுருவாதலின் புனிதமிக்க மறைபொருள் ஆகும்.

மூலம்: John Paul II, Mary sings the praises of God’s mercy, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 13 November 1996, p.11.