கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே!
உயிர்த்த
ஆண்டவரின் ஆசி உங்களோடு என்றும் தங்கி இருக்க இறைவனிடம் நான் மனதார வேண்டுகிறேன். முதன்முதலில் இவ்வருடத்திலிருந்து நல்லாயன் ஞாயிறாகிய இறையழைத்தல் ஞாயிறைப் பீடப்பணியாளர்களின் ஞாயிறாகக் கொண்டாடி, பீடப்பணியாளர்களிடையே இறையழைத்தல் பெருகிட நீங்கள் தொடர்ந்து செபிக்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உயிர்த்த
ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையால் தங்களது வாழ்வை முழுமையாக இயேசுவுக்கு அர்ப்பணித்தவர்கள்தாம் தொடக்ககாலக் கிறித்தவர்கள். இயேசுவின் பணியையும் வாழ்வையும் கண்டு அவரது உயிர்ப்புச் செய்தியால் ஊட்டம் பெற்றார்கள். இந்த அனுபவமும், நம்பிக்கையின் செய்தியும் தங்களது அடுத்த தலைமுறையினரின் வாழ்விலும் பிரதிபலித்தது. ஆனால், காலத்தின் மாற்றத்தால் அவர்கள் விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டார்கள்; சமூகத்தால் வெறுக்கப்பட்டார்கள், சில நேரங்களில் மூடநம்பிக்கையாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். இத்தகைய காரணங்களால்தான் அவர்கள் கல்லறைகளில் மறைந்து வாழ்ந்தார்கள். கிறித்தவர்கள் என்று அறியப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு துன்புற்றால் அதற்காகக் கடவுளுக்கு மிகுந்த நன்றி கூறினார்கள்.
அவர்களிடையே
காணப்பட்ட சகோதர மனப்பான்மை இன்றளவும் வியப்பாக உள்ளது. அவர்களிடையே தேவைகளில் உழல்வோர் என்று யாரும் இருக்கவில்லை. அனைவருக்கும் தேவையானது கிடைத்தது. இவ்வாறு கிறித்தவ நெறியைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கைமுறை ஒரு புதிய நெறியை உலகிற்கு வகுத்துக்காட்டியது. அத்தகைய உயர்ந்த நெறியும் வாழ்க்கை முறையை இன்றைய கிறித்தவர்களாகிய நாம் மறந்துவிட்டோம். ‘போர்களாலும் குழப்பங்களாலும் உலகிற்கு என்ன ஆகுமோ?’ என்ற ஏக்கத்தில் பெருவாரியான மக்கள் வாழ்கிறார்கள். இந்நிலையில் புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சிலுவைப்போர்களால் பகைமை வளர்ந்திருந்த அந்த நாள்களில் புனித பிரான்சிஸ் அசிசியார் எகிப்தை ஆண்ட சுல்தான் மாலிக் அல் கமில் என்பவரை 1219-ஆம் ஆண்டு சந்தித்தார். அவரின் எளிமையான வாழ்வும் அன்பு கலந்த அணுகுமுறையும் சுல்தானின் மனத்தை மாற்றுகிறது. அதனால் பகைமை எனும் இருள் விலகியது. ஆம், கிறித்தவ நெறியின்மீது அவர் கொண்டிருந்த தவறான எண்ணம் மறைந்தது. வரலாற்றில் யாரும் நிகழ்த்த முடியாத அற்புதத்தை புனித பிரான்சிஸ் அசிசி அன்று நிகழ்த்திக் காட்டினார். அச்சந்திப்பு அமைதிக்கு வழிவகுத்தது.
அவரைப்
போன்று கிறிஸ்துவை எளிமையான வாழ்க்கை முறையாலும் இரக்கச் செயல்களாலும் வெளிப்படுத்தி, அமைதியின் தூதவர்களாய் நாம் வாழ வேண்டும் என்பதே இக்காலத்தின் உடனடித் தேவையாக இருக்கின்றது. இயேசுவை மறுதலித்தவர்களுக்கும், அவருடைய துன்ப நேரத்தில் கைவிட்டுவிட்டு ஓடியவர்களுக்கும் அவர் காட்சி கொடுத்தார்; தம்முடைய இரக்கத்தாலும் அன்பினாலும் அவர்களை மீண்டும் தம்முடையவர்களாக மாற்றினார். இயேசுவின் உயிர்ப்புச் செய்தியால் மகிழ்ந்திருக்கின்ற நாமும், இத்தகைய அணுகுமுறைகளைப் பின்பற்றவும், நமது வாழ்வால் பிரதிபலிக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.
காலத்தின்
மாற்றங்களுக்கேற்ப திரு அவையின் வாழ்வும் பணியும் நற்செய்தியின் அடிப்படையில் மக்களின் உள்ளங்களைத் தூண்டி எழுப்புகிறது. அத்தகைய பணியை இன்றும் தொடர்ந்து ஆற்றிவரும் திரு அவையோடு நாமும் இணைந்திட எளிமையான வாழ்வாலும் இரக்கச் செயல்களாலும் சமுதாயத்தில் அமைதியின் தூதுவர்களாக வாழ்ந்திடுவோம். உயிர்த்த ஆண்டவரின் ஆசி உங்களோடு என்றும் இருப்பதாக!
மேதகு
ஆயர்
அருள்செல்வம்
இராயப்பன்,
தலைவர்
தமிழ்நாடு
ஆயர் பேரவையின் இறையழைத்தல் பணிக்குழு