திருவாளர்கள் பென்னிக்ஸ், ஜெயராஜ் வழக்கில் கடந்த 06.04.2026 அன்று வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாடு காவல்துறையின் அடக்குமுறையின் கோரத்தையும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எந்த எல்லைக்கும் போக முடியும் என்ற குரூர / மனப்பிறழ்வான எண்ணத்தையும் அடித்து நொறுக்கித் தகுந்த பாடம் புகட்டியுள்ளது.
எங்கிருந்து தொடங்குவது?
பென்னிக்ஸ்
- ஜெயராஜ் கடை நடத்திய இடத்தில் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த வாக்குவாதத்தில் இருந்து தொடங்குவதா? அல்லது அவர்களது கொடூர மரணத்திலிருந்து தொடங்குவதா? அல்லது இதையெல்லாம் பெரிதுபடுத்தாத அரசியல் தலைமை மற்றும் அதிகாரிகளின் கையாலாகாத்தனத்திலிருந்து தொடங்குவதா? என்றால்... சற்றே குழப்பம் ஏற்படுகிறது. இங்கே சற்றுத் தடிமனான வார்த்தைகளை நான் பயன்படுத்துவதைத் தவிர்க்க
முடியவில்லை. ஏனென்றால், அத்தகைய கொலை பாதகச்செயலைச் சாதாரண வார்த்தைகளால் விவரித்தால் அது சரிவராது. என்னைப் பொறுத்தருள்க!
மனிதர்களின்
சமூக நிகழ்வுகள் பற்றிய நினைவு பொதுவாகச் சிறிது காலமே என்பதை ஏற்றுக்கொண்டாலும், நீதி நின்று நிலைக்கும் என்பதைத்தான் ஏறக்குறைய ஆறு வருடங்களுக்குப் பின் கிடைத்த நீதிபதி முத்துக் குமரனின் நீதிமன்றத் தீர்ப்பானது நமக்கு நிரூபித்துள்ளது.
2020-ஆம் ஆண்டில்
கோவிட்-19 பேரிடர் பெருந்தொற்றால் உலகமே சின்னாபின்னமாகிச் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்த வேளையில், கடையை மூடவேண்டிய விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டோடு இவர்களுடன் ஆரம்பித்த இந்தச் சண்டையானது ஒரு வன்முறை வெறியாட்டமாகி, கொடூரமான முறையில் அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டதும், மதுபாட்டில்கள் உடலில் சொருகப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்ட இரத்தக் காட்டேரித்தனமான இந்தக் காவல்நிலையக் கொலையானது இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் நம்மால் செரிக்க முடியாத ஒன்று.
மேற்கூறியவை
நாகரிகம் கருதி சொல்லப்பட்ட ஒரு சுருக்கமான பதிவு மட்டுமே. குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட பத்துப் பேர்களில் ஒருவர் இறந்து போய்விட, மற்ற ஒன்பது பேருக்கும் இரட்டை மரண தண்டனை தீர்ப்பும், மூன்றரைக் கோடிக்கு நெருங்கிய குற்றவாளிகளின் ஒட்டுமொத்த அபராதத் தொகையும், 21 ஆண்டுகள் தொடங்கி 8 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் இந்திய வரலாற்றிலேயே நீதிமன்றத் தீர்ப்புக்கென ஒரு புதிய அத்தியாயத்தைப் பிறப்பித்துள்ளது.
இது
ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் காவல்துறையின் மதிப்பினை முழுக்க முழுக்கக் குறைத்து மதிப்பிட முடியாது என்பதையும் இவ்வேளையில் நினைவிற்கொள்ளவேண்டும்.
அவர்களது தொடர்பணி மட்டுமே சமூகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒருபுறம், வேலைப்பளுவின் அழுத்தம் அவர்களைத் தொடர்ந்து வாட்டிக் கொண்டிருக்க, குடும்ப உறவுகளுக்குச் சரியாக நேரம் ஒதுக்க முடியாமல் எந்நேரமும் கடமையாற்றக் கூடிய சூழல்கள் அவ்வப்போது பெருகிக்கொண்டிருக்க, இதைக் குறித்த ஒரு சமூகநல வழக்கு (Pil) தொடரப்பட்டு,
நீதிமன்றம் காவல்துறைக்கான சிறப்பு வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துத் தந்து அதை அனைத்துக் காவல்நிலையங்களிலும் அறிவிக்கையாக ஒட்டப்பட்டு மக்கள் பார்வையில் வைக்கப்பட வேண்டும் என்பதும் அவசியமானது.
அந்த
அறிவிக்கையில் குற்றவாளியெனக் கருதப்படும் ஒவ்வொரு குடிமகனுக்குமான உரிமைகள் என்னென்ன என்பதையும், அதை மீறும் வேளையில் காவல்துறையின் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது பற்றிய சட்டவிதிகளையும் எழுதி வைக்கும் வேளையில், காவல்துறையினரின் எதேச்சதிகாரப் போக்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் நோயாளர்களுக்கான உரிமைகளும், மருத்துவமனை மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பும் தவறாமல் அறிவிக்கையாகப் பொருத்தப்பட்டுள்ளதை இதற்கான எடுத்துக்காட்டாகக் கொள்வோம்.
மேற்கூறியவை
எல்லாம் மிகவும் அவசியமானவை என்பதை வளரும் சமூகம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும் வேளையில், காவல்துறையினருக்கான தமிழ்நாட்டின் மொத்த நிதிநிலை (Budget) 2025-26 என்பது
12,714 கோடி எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாகவே கடந்த ஆண்டுகளில் அவர்களது பயிற்சிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது எனும்போது, அவர்களது பயிற்சிகளை இன்னும் ஆழப்படுத்தவும், அவர்களுக்கான மென்திறன் பயிற்சி (Soft skills
training) மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) வளப்படுத்தவும்
மிக மிக அவசியம் என இந்த வேளையில்
நாம் கருத வேண்டியுள்ளது.
கடந்த
சில ஆண்டுகளில் வண்டலூரில் அமைந்துள்ள காவல்துறை பயிற்சிக் கல்வியகத்தில் உளவியல் தொடர்பான மேற்குறிப்பிட்ட பயிற்சிகளைக் கொடுக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், குறிப்பிட்ட இரண்டு பயிற்சிகளையும் பாசறை தொடர் பயிற்சியாகவும், பணியிடைப் பயிற்சியாகவும் காவல்துறையினருக்குத் தருவதை தமிழ்நாடு கருத்தில்கொள்ள வேண்டுமென முன்வைக்கிறேன்.
தகவல் தொடர்புத்
திறன்
(Communication Skills)
ஒருவர்
எப்படிப் பேசவேண்டும்? எதைப் பேசக்கூடாது? எதைத் தவிர்க்கவேண்டும்? தனி நபரோடும் குழுக்களோடும், சமூகத்தின் பல்வேறு அமைப்புகளோடும், ஏன் அதிகாரிகளோடும் கூட எப்படிக் கருத்துகளை உரையாடலில் முன்வைக்க வேண்டும்? என்றும், உரையாடல் வழி தீர்வுகளை நோக்கி நகரும் நற்பயிற்சியைப் பெற்றுகொள்வது இதில் மிகவும் தலையானது என்பது கேட்பார்திறன் (listening skills).
உணர்ச்சி நுண்ணறிவு
(Emotional Intelligence)
இதில்
தன்மேலாண்மை (Self management),
தன் விழிப்புணர்வு (self awareness), சமூக விழிப்புணர்வு (Social Awareness) மற்றும்
உறவு மேலாண்மை (Relationship Management) வலியுறுத்தப்படவேண்டும். மேற்குறிப்பிட்ட
இரண்டு பயிற்சிகள் மட்டுமே எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்று இங்கே முன்வைக்க வரவில்லை. ஒருவரின் குடும்ப வளர்ப்பு, இளமைக்காலம், குழந்தைப்பருவ பெற்றோர் / காப்பாளர்களின் மதிப்பீடுகள், சந்திக்கக்கூடிய பேரிழப்புகள், குடும்ப வன்முறை போன்ற ஒரு தனிமனிதரின் வாழ்வில் மறையாத - அழிந்திடாத வடுவாக இருக்கும் வேளையில், இப்பயிற்சிகள் சற்றேனும் அவர்களது வாழ்வை மாற்றிக்கொள்ளும் வழியாக அமையக்கூடும் என்பதைச் சிறிதளவேனும் நம்பலாம் அன்றோ!
முடிவாக,
பென்னிக்ஸ் - ஜெயராஜ் காவல் நிலைய மரண வழக்கில் தமிழ்நாடு காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள இந்தக் களங்கத்தைப் போக்கக்கூடிய அளவில், இனி தொடரும் எவ்வித வழக்குகள் ஆனாலும் அதில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவும், அவர்களது தனிநபர் உரிமைகளை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டியதை, தமிழ்நாடு காவல்துறை பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதை, இந்தச் சமூகம் மிகுந்த அக்கறையுடன் பார்க்கிறது.