news-details
தலையங்கம்
பற்றி எரியும் மாநிலம்; பாராமுகம் காட்டும் ஒன்றியம்!

மணிப்பூர் இனக்கலவரம் தொடங்கி ஏறக்குறைய மூன்று ஆண்டுகளை எட்டப்போகிறது. இந்தியத் திருநாட்டின் ஒரு பகுதி இன்னும் இருண்ட காலத்திலேயே உழன்று கொண்டிருக்கிறது என்பதையே இது உலகுக்கு உரக்கக் கூறுகிறது. அமைதியை மீட்டெடுக்க வேண்டிய ஒன்றிய பா... அரசு, வெறும்ஊரடங்குமற்றும்இணைய முடக்கம்போன்ற தற்காலிகத் திரைகளைக் கொண்டு மாநிலத்தின் அவலங்களை மறைக்க முயல்கிறதே ஒழிய, வேர்வரை சென்று தீர்வுகாண எள்ளளவும் முன்வரவில்லை. ‘மணிப்பூரில் தீர்க்கப்படாத இன மோதலும் தீவிரமடையும் வன்முறையும்என்பது வெறும் செய்தித் தலைப்பு அல்ல; அஃது  ஒரு தேசத்தின் மனசாட்சிக்கு விடப்பட்ட அறைகூவல்.

அண்மையில் ஏப்ரல் 7-ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுவனும், ஆறு மாதக் கைக்குழந்தையும் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட நிகழ்வு, எஞ்சியிருந்த மனிதநேயத்தையும் சுட்டெரித்துவிட்டது. இக்கொலைகளைக் கண்டித்துப் போராடிய மக்கள்மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூன்று உயிர்கள் பலியாகியுள்ளன. துரோங்லோபி கிராமம் முதல் இம்பால் பள்ளத்தாக்கு வரை இன்று எங்கும் இரத்த வாடையும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளின் நெடியுமே மிஞ்சியுள்ளது. இது அரசு இயந்திரத்தின் அலட்சியத்தையும், பிணக்குவியல்களின் மீது அது நடத்தும் ஓர் அதிகார ஆட்டத்தையுமே  காட்டுகிறது.

பா... அரசின்நாரி சக்தி (பெண் சக்தி) முழக்கங்கள் மணிப்பூர் வீதிகளில் நகைப்புக்குரியதாகிவிட்டன. ‘இதுதான் உங்கள் நாரி சக்தியா?’ எனப் போராட்டக்களத்தில் பெண்கள் எழுப்பும் வினாக்களுக்கு ஒன்றிய அரசிடம் எந்தப் பதிலும் இல்லை. மணிப்பூரின் நிலப்பரப்பு மெய்தி, நாகா மற்றும் குகி என மூன்று பெரும் இனக்குழுக்களிடையே பிளவுற்று, ஒவ்வொரு சமூகமும் தங்கள் இழப்புகளுக்காகத் தனித்தனியே முழு அடைப்புப் போராட்டங்களை அறிவித்துள்ளன. இது ஒரு மாநிலத்தின் நிர்வாகச் சீர்குலைவை விடவும், சமூக நல்லிணக்கத்தின் மரணத்தையே காட்டுகிறது.

மணிப்பூர் வன்முறை ஏன் இத்தனை காலம் தணியாமல் நீடிக்கிறது? ஏன் அது இன்றும் பற்றியெரிகிறது? இது குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், இதன் பின்னணியில் இருக்கும் ஒன்றிய பா... அரசின் மறைமுகத் திட்டங்கள் அதிர்ச்சி நிறைந்த கவலைக்குரியவை. மணிப்பூர் மாநிலத்தின் கனிம வளங்கள் நிறைந்த மலைப்பகுதிகளைப் பெரும் வணிகக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறிப்பாக, அதானி குழுமத்திற்குத் தாரை வார்ப்பதற்கான ஒரு திட்டமிட்ட சதி இதனுள் இருக்குமோ என்ற வலுவான ஐயம் எழுந்துள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை அகதிகளாக மாற்றுவதன் மூலம் நிலங்களைக் கையகப் படுத்துவது எளிது என்பது அதிகார வர்க்கத்தின் கணக்காக இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத் திணிப்பும், பிரித்தாளும் சூழ்ச்சியும் இங்கு மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கிடையிலான வரலாற்றுப் பிணக்குகளை அரசியல் ஆதாயத்திற்காகத் தூண்டிவிட்டுள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் காலத்தைக் கடத்துவது, இறுதியில் கார்ப்பரேட் நலன்களுக்காக மாநிலத்தைச் சிதைப்பதற்கே வழிவகுக்கும்.

மணிப்பூர் வன்முறை என்பது வெறும் இரு சமூகங்களுக்கிடையிலான மோதல் மட்டுமல்ல; அஃது இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் குறிப்பாக, கிறித்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள  ஓர் எச்சரிக்கை மணி. இது சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மீது தொடுக்கப்பட்ட மாபெரும் அச்சுறுத்தல். குகி சமூகத்தினர் பெரும்பான்மையாகக் கிறித்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். கலவரத்தின் தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், கல்வி நிறுவனங்களும் எரிக்கப்பட்டதும், பழங்குடியினப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டதும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.

பா...வின்ஒரே நாடு, ஒரே கலாச்சாரம்என்ற மேலாதிக்கக் கொள்கைக்கு வடகிழக்கு மாநிலங்களின் பன்முகத்தன்மை பெரும் தடையாக உள்ளது. எனவே, பழங்குடியினரின் தனித்துவமான நில உரிமைகளையும், அவர்களின் மதச் சுதந்திரத்தையும் நசுக்குவதன் மூலம் ஓர்இந்துத்துவவரைபடத்தை ஒன்றிய பா... அரசு அங்கு உருவாக்க முயல்கிறது.

மணிப்பூரில் இன்று நடப்பது நாளை ஒட்டுமொத்த இந்தியாவிலும் குறிப்பாக, தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினருக்கு நிகழலாம் என்பதையே தற்போதைய சூழல் உணர்த்துகிறது. மேலும், இத்தகைய பிரிவினைவாதச் செயல்கள் ஒருபோதும் இனி நிகழாது என்பதற்கான எந்தவித  உத்தரவாதமும் இங்கு இல்லை.

மணிப்பூரில் நிலவும் சூழலை ஓர்அரசியல் மேலாண்மைமூலம் சரிசெய்துவிடலாம் என டெல்லி நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம். குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தி, பின் அதை நீக்கிவிட்டு, பெயரளவுக்கு ஓர்அதிகாரப் பகிர்வுஅரசை (மெய்தி முதலமைச்சர் மற்றும் குக்கி-நாகா துணை முதலமைச்சர்கள்) அமைத்திருப்பது ஒரு கண் துடைப்பு நாடகம்.

அடிப்படைப் பிரச்சினையானது நில உரிமை மற்றும் பழங்குடி நிலை சார்ந்தது. 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 60,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாத ஓர்உள்ளிருந்து எழும் அமைதி (Bottom-up approach) மட்டுமே தீர்வாகும். ஆனால், ஒன்றிய அரசோ நடுநிலையான இடைநிலையாளராகச் செயல்படாமல், ஒரு தரப்பிற்கு ஆதரவாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு மிகுந்த நம்பிக்கை கொண்டவராகவும் இருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகிறது.

இத்தகைய சூழலில், மணிப்பூரில் நீடித்த அமைதி நிலவ வேண்டுமானால் நிபுணத்துவ வழிகாட்டுதலுடன் தீர்வு காணவேண்டியது அவசியமாகிறது. முதலாவதாக, நேர்மையான நடுநிலைவேண்டும். அதாவது, ஒன்றிய அரசு தனது அரசியல் இலாபங்களைக் கடந்து, அனைத்துச் சமூகத் தலைவர்களையும் ஒரே மேசையில் அமர்த்த வேண்டும். இரண்டாவதாக, பெரும் வணிக முதலாளிகளின் (கார்ப்பரேட் நிறுவனங்களின்) தலையீடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.

மூன்றாவதாக, மலைப்பகுதிகளின் கனிம வளங்களை அதானி போன்ற நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முயற்சிகளை அரசு உடனே கைவிட வேண்டும். மேலும், மக்களுக்கான பாதுகாப்பும் நீதியும் அங்கு உறுதிப்படுத்தப்படவேண்டும். கொல்லப்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கும், பாலியல் வன்முறைக்கும் காரணமானவர்கள் பாரபட்சமின்றித் தண்டிக்கப்படவேண்டும். சிறுபான்மையினரின் மத அடையாளங்கள் மற்றும் பழங்குடியினரின் கலாச்சாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

மணிப்பூர் இன்றும் எரிகிறது என்றால், அஃது இந்திய சனநாயகத்தின் ஒரு பகுதி கருகிக் கொண்டிருக்கிறது என்று பொருள். டெல்லியின் செங்கோட்டையில் அமர்ந்திருப்பவர்கள் தங்கள் மௌனத்தைக் கலைத்து, அந்த மக்களின் கதறலுக்குச் செவிசாய்க்காதவரை, வடகிழக்கு இந்தியா ஒருபோதும் அமைதியைக் காணாது.

ஒன்றிய பா... அரசின் பாராமுகத்தைக் காணும்போது...

செய்என்பான் அறிவன்!

விடுஎன்பான் அறியான்!

அறிவுக்கும் ஆசைக்கும் இடையில்,

மனம் சல்லடையாய் சலிக்கின்றது!

தூக்கம் கெடுத்ததோர் ஆவி,

தூக்கி எறிய முடியாததொரு பாவி!

எக்காளமிட்டு இரண்டும் போராட,

நான் யாருக்கோ சேவை செய்கிறேன்!

எனும் புதுக்கவிதை வரிகள்தான் நம் நினைவிற்கு வருகின்றன

யாதும் ஊரே யாவரும் கேளிர்என்று உலகோருக்கு அறம் போதிக்கும் நாட்டில், தன் சொந்த நாட்டு மக்களே அகதிகளாக அலைவது பெரும் அவமானத்திற்குரியதே!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்