news-details
ஆன்மிகம்
மேய்ப்பரின் குரலும் மேன்மையான வாழ்வும் (திருத்தந்தை லியோ அவர்களின் 63-வது இறை அழைத்தலுக்கான உலக இறை வேண்டல் தின செய்தி)

பாஸ்கா காலத்தினுடைய நான்காம் ஞாயிறுநல்லாயன் ஞாயிறுஎன்று அழைக்கப்படுகின்றது. இவ்வாண்டு ஏப்ரல் 26, 2026 அன்று இந்தத் தினம் உலக இறை அழைத்தல் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பல்வேறு சவால்கள் மத்தியில் வாழ்கின்ற திருநிலையினர், அழைத்தல் வாழ்வில் அனுபவிக்கும் நெருக்கடித் தருணங்களை எதிர்கொள்ள ஆற்றல் பெறுவதற்காக இறை வேண்டல் செய்யவும் ஏப்ரல் (2026) மாதத் திருத்தந்தையின் கருத்து நமக்கு அழைப்பு விடுக்கின்றது.  இப்பின்னணியில் கடவுளின் இலவசக் கொடையான இறை அழைத்தலின் அகத்தைக் கண்டறிவது, ஆழ்ந்து தியானிப்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.

1. ஆண்டவரின் சீடரே அழகானவர்

நல்ல ஆயன் நானேஎன்று கூறிய இயேசுவைப் பின்பற்றும்போது நம் வாழ்வு அழகாகிறது. மேய்ப்பரின் பார்வையோடு நம் பார்வையை இணைத்து, அவருக்குச் செவிசாய்த்து நடந்தால் மட்டுமே அழகின் பாதையில் பயணிக்க முடியும். உண்மையில் அழகானவர் யார் என்றால், இயேசுவின் வழியைப் பின்பற்றும் சீடர்தாம்!

இறையியலாளர் பாவெல் பிளாரன்ஸ் எழுதியது போல, துறவறம் வெறுமனேநல்லநபரை உருவாக்குவதில்லை; மாறாக, ஓர்அழகானநபரை உருவாக்குகிறது. அந்த அழகு கிறிஸ்துவின் வாழ்வில் இருந்து வெளிப்படும் வெளிச்சமான ஆன்மிக அழகாகும். இப்பின்னணியில் கிறித்தவ அழைப்பு என்பது இயேசுவின் வாழ்வில் பங்கேற்பதும், அவர் பணியில் பங்குகொள்வதுமாக அமைகிறது. புனித அகுஸ்தினார் தனது ஒப்புரவு அறிக்கையில் தனது இளமையின் பாவங்களை அறிக்கையிட்டாலும், கடவுளைஎனது மிக ஆழமான பகுதியை விடவும் ஆழமானவர்என்று குறிப்பிடுகிறார். சுய அறிவைவிட மேலாக, இருளில் தன்னை வழிநடத்தும் தெய்வீக ஒளியின் அழகைப் புனித அகுஸ்தினார் கண்டறிகிறார். அழைத்தலின் அகவாழ்வைப் பேணிக்காப்பதுதான் கிறிஸ்துவைச் சந்திக்கும் தளம் என்கிறார். இந்த உறவு இறை வேண்டலையும் அமைதியையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தப் பயணம் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சாகசப் பயணம். இங்குதான் கடவுளின் அழகையும் நன்மைத்தனத்தையும் நாம் அனுபவிக்கின்றோம்.

குடும்பங்களிலும் பங்குத்தளங்களிலும் அழைத்தல் வாழ்வு ஆழப்படவேண்டும். நமது சூழல்கள் நம்பிக்கையால் ஒளியூட்டப்பட்டு, இடைவிடா இறைவேண்டலில் நிலைநிறுத்தப்பட்டு, சகோதரத்துவத் தோழமையால் செழுமைப்படுத்தப்படும் பொழுது கடவுளின் அழைப்பு மலர்ந்து, முதிர்ச்சி அடைந்து, தனி நபர்களுக்கும் உலகுக்கும் மகிழ்ச்சியான மீட்பின் பாதையாக அது மாறுகிறது.

2. இறையன்பின் விழிப்புணர்வு

அழைப்பு என்பது இறையன்பைப் பற்றிய விழிப்புணர்வே ஆகும். “நம் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டு இருக்கின்றன (மத் 10:30). அக்கறையாய் காக்கும் இறையன்பை இது வெளிப்படுத்துகிறது. இறைவேண்டல், இறைக்குரலுக்குச் செவிசாய்ப்பது, அருளடையாளங்கள், திரு அவையின் வாழ்வு முறை, அறச்செயல்கள் மூலம் கடவுளை அறிய அழைக்கப்படுகின்றோம். இரவில் எதிர்பாராத விதமாக ஆண்டவரின் குரலைக் கேட்டு ஏலியின் உதவியுடன் அதை அடையாளம் காண கற்றுக்கொண்ட இளம் சாமுவேலைப் போல, நாமும் இறைக்குரலைக் கேட்க அக அமைதிக்கான ஓர் இடத்தைக் கண்டறியவேண்டும். இந்தச் சந்திப்பு வாழ்வை மாற்றும் தனிப்பட்ட சந்திப்பாக மாறும்.

அழைப்பு என்பது உலகின் செவியை அடைக்கும் இரைச்சலையும் மீறி உண்மையான மகிழ்ச்சியுடனும், தாராள மனத்துடனும் பதிலளிக்க நம்மை அழைக்கும் ஒருவருடன் நெருக்கமான உரையாடலை உருவாக்குவதே ஆகும். “உங்களை விட்டு வெளியேற வேண்டாம்; உங்களுக்குள் திரும்புங்கள்; உண்மை உள் மனத்தில் வாழ்கிறதுஎனக் கூறும் புனித அகுஸ்தினார், இயேசுவின் குரலைக் கேட்பதற்காக இரைச்சலான வாழ்வின் மத்தியில் இடைநிறுத்தம் செய்யவும், உள் அமைதிக்கு இடம் அளிக்கவும் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம் என்பதைப் புனிதர் நினைவூட்டுகிறார்.

நம் திறமைகளைப் பயன்படுத்தவும், நம் பலவீனங்களைக் கிறிஸ்துவின் சிலுவையோடு இணைக்கவும் அவர் நம்மை அழைக்கிறார். ஆகவே, நற்கருணை ஆராதனைக்கு நேரம் ஒதுக்குவோம்; இறைவார்த்தையை ஆழமாய்த் தியானிப்போம்; அதைக் கடைப்பிடிப்போம்; அருளடையாளக் கொண்டாட்டங்களை வாழ்வாக்குதன் வழியாக ஆண்டவரை நாம் ஆழமாக அறிந்துகொள்வோம். ஒவ்வோர் அழைப்பும் ஒரு கொடையே. அவரை அறிந்துகொள்வது என்பது அவருடைய பராமரிப்பில் நம்மை நாம் ஒப்படைப்பதற்குச் சமமாகும்.

3. கடவுளின் வாக்குறுதியில் நம்பிக்கை

அறிவு தன்னம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. இந்தத் தன்னம்பிக்கை நம்பிக்கையிலிருந்து எழும் ஒரு மனநிலையாகும். கீழ்ப்படிந்த அன்னை மரியின் இதயம், குழந்தை இயேசுவைக் காப்பாற்றிய புனித யோசேப்பின் பராமரிப்பு இவையெல்லாம் நம்பிக்கைக்கு அருமையான உதாரணங்கள். தன்னைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற இருளான சூழலிலும், தங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கும் அற்புதமான அனுபவத்தை அன்னை மரியிலும் யோசேப்பிலும் பார்க்கின்றோம்.

கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெற்ற மரியின் அனுபவமும், இரத்த வியர்வை சிந்திய இயேசுவின் கெத்சமனி அனுபவமும், புனித யோசேப்பின் அனுபவமும் கடவுளின் வாக்குறுதிகளில் நாம் கொள்ளக்கூடிய நம்பிக்கையை பலப்படுத்த வேண்டும். எந்தச் சூழலிலும் விரக்திக்கு உள்ளாகாமல், உயிர்த்த இயேசுவில் நம்பிக்கை கொண்டு நம் அச்சங்களை நாம் வெல்லவேண்டும். நிழல் என்னும் இருள் கூட நம்மைச் சூழாதபடி வெளிச்சத்தோடு நம்மைக் காக்க நம் கடவுள் நம்மோடு பயணிக்கிறார்.

4. கிறிஸ்துவை நெருங்குவதே முதிர்ச்சி

அழைத்தல் என்பது நம் ஆண்டவருடனான நெருக்கத்தால் நிலைநிறுத்தப்படும் ஓர் ஆற்றல் மிக்க முதிர்ச்சி செயல்முறையாகும். அழைப்பில் வளர்வது என்பது இயேசுவுடன் இருப்பதையும், தூய ஆவியார் நம் இதயங்களிலும் வாழ்க்கையின் சூழ்நிலைகளிலும் செயல்பட அனுமதிப்பதையும், இந்த வரத்தின் ஒளியில் எல்லாவற்றையும் மறுவிளக்கம் செய்வதையும் குறிக்கிறது.

திராட்சைக் கொடியையும் அதன் கிளைகளையும் போல (யோவா 15:1-8), நம்முடைய முழு வாழ்வும் ஆண்டவருடனான ஒரு வலிமையான மற்றும் உயிரோட்டமான பிணைப்பில் வேரூன்றியிருக்க வேண்டும். அப்போதுதான், நம்முடைய சோதனைகள் மற்றும் தேவையற்றவற்றை அகற்றுதல் ஆகியவற்றின் ஊடாக அவருடைய அழைப்பிற்கு நாம் இன்னும் முழு மனத்துடன் பதிலளிக்க முடியும். இறை விருப்பம் மிகவும் வெளிப்படும் இடங்களும், அவருடைய எல்லையற்ற அன்பை நாம் அனுபவிக்கும் இடங்களும், பெரும்பாலும் நம் வாழ்நாள் முழுவதும் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் உண்மையான சகோதரத்துவப் பிணைப்புகளாகவே இருக்கின்றன. நமது அழைப்பைக் கண்டறிவதிலும் வளர்ப்பதிலும் நம்முடன் துணைபுரிய ஓர் உண்மையான ஆன்மிக வழிகாட்டி இருப்பது எவ்வளவு விலைமதிப்பற்றது!

தூய ஆவியாரின் தூண்டுதல்களைத் தெளிந்து தேர்வதுதான் அழைத்தலின் அழகுக்கு நற்பயனாய் அமைய முடியும். எனவே, ஓர் அழைப்பு என்பது ஒருமுறை நிரந்தரமாகக்கொடுக்கப்படும்ஒன்றல்ல; மாறாக, அது வாழ்க்கையைப் போலவே விரிவடையும் ஒரு பாதையாகும்.

நாம் பெற்ற வரம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது மட்டுமல்லாமல், அது வளர்ந்து கனி தருவதற்காக இறையுறவில் ஆழப்படவேண்டும். அழைத்தல் நம் முழு வாழ்வையும் நம்மை நேசிக்கும் கடவுளுடன் தொடர்புபடுத்துகிறது. எதுவும் வெறும் தற்செயலின் விளைவு அல்ல; மாறாக, நம் வாழ்வில் உள்ள அனைத்தும் நமக்காக ஓர் அற்புதமான திட்டத்தைக் கொண்டுள்ள ஆண்டவருக்குப் பதிலளிக்கும் ஒரு வழியாக மாறக்கூடும் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.

அன்றாட இறைவேண்டல் மூலமாகவும், இறை வார்த்தையைத் தியானிப்பதன் மூலமாகவும், கடவுளுடனான நம் தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொண்டு சற்று நிதானித்து, செவிகொடுத்து, நம்மை அவரிடம் அர்ப்பணிப்போம். இவ்வழியில், நம் அழைப்பின் கொடை முதிர்ச்சியடைந்து, நமக்கு மகிழ்வைத் தந்து, திரு அவைக்கும் உலகுக்கும் மிகுந்த கனிகளை அளிக்கும்.