news-details
ஆன்மிகம்
உயிர்த்தெழுதலின் முப்பரிமாண இறையனுபவங்கள்

கிறித்தவத்தின் தனித்துவம்

உயிர்த்தெழுதல் என்பது கிறித்தவர்களின் தனித்துவமும், மிக முக்கியமான அம்சமும் ஆகும். இயேசுவின் காலியான கல்லறையே நமது நம்பிக்கையின் அருளடையாளம். உயிர்த்தெழுதல் என்பது ஒரு நம்பிக்கையின் நிகழ்வாக மட்டும் பார்ப்பது நமது பராம்பரியம் அன்று; மாறாக, அது இவ்வுலகையே புதுப் படைப்பாகப் பார்க்கும் ஓர் ஆன்மிக மற்றும் உளவியல் சார்ந்த இறைனுபவம் ஆகும். “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய  நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதாய் இருக்கும். நமது விசுவாசம் அனைத்தும் பொய்...” (1கொரி 15:14) என்கிறார் தூய பவுலடியார்.

கிறித்தவ வாழ்வின் அழிவின்மை

நமது கிறித்தவ வாழ்வு மற்றும் இறப்பின் முழு நம்பிக்கை கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழும் புனித நிகழ்வின் பார்வையில்தான் பொருளுள்ளதாகிறது. கிறிஸ்து உயிர்ப்பின் மறைபொருளை விளக்கும் தூய பவுலடியார் கிறிஸ்துவின் உயிர்ப்பின் மூலம், “அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாகவேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்என்று கூறி, “சாவு முற்றிலும் ஒழிந்தது, வெற்றி கிடைத்ததுஎன்கிறார் (1கொரி 16:54).

இத்தகைய முக்கியமான நம்பிக்கையின் நிகழ்வு கிறிஸ்து இறந்தபின் சீடர்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவுகூர்ந்து, வாழ்ந்து காட்டி, அனைவரிலும் அவரைக் கண்டுகொண்டு, மறு கிறிஸ்துகளாகப் புத்துருபெற்று, கிறிஸ்துவின் பாடுகளிலும் உயிர்ப்பிலும் முழுமையாய் பங்கேற்று, அவரது உயிர்ப்பிற்குச் சாட்சிகளாகின்றனர் (திப 2- 5 வரையுள்ள அதிகாரங்கள்). எனவே, உயிர்ப்பின் அனுபவம் நம்மை இக்காலச் சூழலுக்கு ஏற்றபடி புரிந்துகொள்வதும், அதன்படி நமது வாழ்வைப் புதுப்பித்துக்கொள்வதும் காலத்தின் கட்டாயமும் அறைகூவலுமாகும். கிறிஸ்துவின் உயிர்ப்பை மூன்று முக்கிய ஆன்மிக - உளவியல் பார்வையில் சிந்தித்துச் செயல்படுவதை ஓர் அறநெறிக் கட்டாயமாக உணர்கிறேன்....

நினைவுகூர்தல்

தொடக்க காலத் திரு அவையில் உயிர்த்த இயேசுவின் இறையனுபவம்: பெரும்பாலும் கிறித்தவத்தில் பாஸ்கா நிகழ்வை நினைவுகூர்ந்து கொண்டாடுவதாகும். ‘நினைவுகூர்தல்என்ற வார்த்தையின் பொருள் அந்நிகழ்வைப் பற்றி மீண்டும் சிந்தித்து, கிறிஸ்துவைப் பிரசன்னப்படுத்தி வாழ்ந்து காட்டுவதாகும். “இதை என் நினைவாகச் செய்யுங்கள் (லூக் 22:19) என்று எடுத்துரைத்து, பாஸ்கா மறைபொருளை நிறுவினார் இயேசு. தொடக்கத் திரு அவையில் அதை நினைவுகூர்ந்து வாழ்ந்து காட்டினார்கள். தங்களது உடைமைகளைப் பொதுவாக வைத்து அனைவரும் பகிர்ந்து கொண்டனர். “அவர்களில் தேவையில் உழல்வோர் எவரும் காணப்படவில்லை (திப 5:34). கிறிஸ்துவின் பாஸ்கா நிகழ்வை வாழ்வில் வாழ்ந்து காட்டி அதைச் சீடர்கள் நினைவுகூர்ந்தனர்.

வாழ்வே நற்செய்தியாக...

அதன்பின் அது சிறு வழிபாடாகவும் (LITURGY), கொண்டாட்டமாகவும் (COMMEMORATE) மாறியது. உயிர்ப்பின் நிகழ்வானது வழிபாட்டோடு மட்டும் நின்றுவிடத் தொடங்கியது. இங்கு உயிர்த்த இறைவன் போதனைகளைத் தந்தபின், மரித்து அதன்பின் உயிர்த்து விண்ணிற்குச் சென்றுவிட்டார். இப்போது நாம் அவரைப் பிரசன்னப்படுத்தி (RE-MEMBER) அவரது மதிப்பிடுகளை வாழ்ந்து காட்டி, உயிர்ப்பின் சாட்சிகளாகத் திகழ்வது, உயிர்த்தெழுதலின் முதல் பரிமாணமாகும். இங்கு உயிர்த்த இறைவன் மூன்றாம் ஆளாக, படர்க்கையில் (3rd - person) பார்க்கும் மனப்போக்கு. இதன் உளவியல் பின்னணி, உயிர்த்த இறைவன் விண்ணகத்தில் இருப்பது போலவும், அங்கிருந்து நம்மை வழிநடத்துவதாக உணர்வதாகும். உளவியல் ரீதியாக இறைவனுக்கும் நமக்கும் இடைவெளி அதிகமாய் இருப்பது போன்ற புரிதல், மதிப்பீடுகளின்படி வாழ்ந்து காட்டும் வழிபாடுகளின்போது மட்டும் அவரது பிரசன்னத்தை உணர்கிறோம். மற்ற நேரங்களில் வேறுபட்ட வாழ்வு வாழ்ந்திட வாய்ப்பு இருக்கிறது. அன்றாட வாழ்வில் மற்றவர்களிடம் உயிர்த்த கிறிஸ்துவைக் கண்டுகொள்வது எப்படி?

கண்டுகொள்ளுதல்

சீடர்கள் பெற்ற உயிர்த்த இயேசு இறையனுபவம்: எம்மாவுஸ் சீடர்கள் இயேசுவின் பாஸ்கா நிகழ்வை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டு சென்றார்களே அன்றி, அவரைக் கண்டுகொள்ளவில்லை. காரணம், அவர்கள் உயிர்ப்பின் முழுமையைப் புரிந்துகொள்ளாத அறிவிலிகளாய் இருந்தனர் (லூக் 24:25). அப்பத்தைப் பிட்கும் நிகழ்வை நினைவுகூர்வதில் மட்டும் நிறைவடைவதில்லை; மாறாக, அவரைக் கண்டுகொள்வதிலே உயிர்ப்பின் இரண்டாம் பரிமாணம் அமைந்துள்ளது. கிறிஸ்துவை இனிமேல் இயேசுவின் உருவில் காண்பதை விடுத்து, அவரை அன்றாட வாழ்வில் நாம் பிறரிடமும் மற்றும் இயற்கையிலும் அவரின் உடனிருப்பைக் கண்டுகொள்ளும் வாழ்க்கை முறையாகும்.

அனைத்திலும் அனைவரிலும் உயிர்த்த இயேசு                                 

உண்மையில் உயிர்த்த இயேசு இனி தோட்டக்காரராக, (யோவா 20:15) வழிப்போக்கராக, (லூக் 24:15), மீன்பிடிப்பவராக (யோவா 21:4) அவர்களுக்கு முன்வந்து, அவர்களோடு உறவாடி தமது உயிர்ப்பின் உடனிருப்பை உணர்த்துகிறார். ஆக, அனைத்திலும் அனைவரிலும் இறைவனைக் கண்டுகொள்ளும் ஆன்மிக நிலையாகும். சாதி, மதம், இனம் கடந்து தெய்வீகத்தைத் தன்னைச் சுற்றியுள்ள அனைத்திலும் கண்டுணர்ந்து (RECOGNIZE) அனுபவிப்பதாகும். உயிர்ப்பைப் பற்றிய ஆன்மிகப் புரிதலின் இரண்டாம் பரிமாணம் ஆகும். இங்கு உயிர்த்த இறைவன் இரண்டாவது ஆளாக முன்னிலையில் ((2nd – person) பார்க்கும் புரிதல் ஆகும்அனைத்திலும் அனைவரிலும் இறைவனைப் பார்க்கும் ஆன்மிக அனுபவம். இருப்பினும், உளவியல் ரீதியில் அவரது பாடுகளிலும் உயிர்ப்பிலும் பங்கெடுக்காமல் இருந்திட வாய்ப்புகள் உள்ளன. இயேசு எம்மாவுஸ் சீடர்களிடம்மெசியாதான் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!” (லூக் 24:28) என்று எடுத்துரைத்து உயிர்த்தெழுதலின் மூன்றாம் பரிமாணத்தைப் பற்றி விளக்குகிறார்.

புத்துரு பெறுதல்

சாட்சிய வாழ்வில் உயிர்த்த இயேசு: உயிர்த்தெழுதலின் மூன்றாம் பரிமாணத்தில் உயிர்த்த இறைவனை முதல் நிலையில், தன்மையில் (1st person) வைத்துப் பார்ப்பதாகும். நாமே கிறிஸ்துவாகப்  புத்துரு பெறுவதில் (RENEWAL) உள்ளது. மறுகிறிஸ்துவாக உருபெறுவதில் உள்ளது. தூய பவுலடியார் இந்த இறையனுபவ நிலையை மிக அழகாக, “வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் (கலா 2:20) என்று எடுத்துரைக்கிறார்.

உயிர்ப்பின் இறையனுபவம் என்பது கிறிஸ்துவின் மனநிலையில் பங்கெடுப்பதாகும் (பிலி 2:6). அதாவது, அன்றாட வாழ்வில் அவரது பாடுகளில் பங்கேற்பதன் வழியாக, அவரது உயிர்ப்பில் பங்கெடுப்பதாகும். “அவர் சிலுவைச் சாவை ஏற்கும் அளவிற்குக் கீழ்ப்படிந்தார். எனவே, கடவுள் அவரை உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் (பிலி 2:8,9) எடுத்துக்காட்டாக, அனைத்துப் புனிதர்களின் மறைச்சாட்சி வாழ்விலே கிறிஸ்துவின் உயிர்ப்பைப் பற்றிய ஆழமான புரிதலையும் சாட்சிபகர்வதையும் உணரலாம்.

முப்பரிமாணம் கொண்டது உயிர்ப்பின் இறையனுபவம்

இதை இந்தியத் தத்துவங்கள் மிக அழகாகஅகம் பிரம்மாஸ்மிஎன்றும், ‘தத்துவமசிஎன்றும் தெளிவாக விளக்கம் தருகிறது. நம்மிடம் உள்ள தெய்வீகத்தன்மையை உணர்ந்து ஒளிர்விப்பதாகும். நமது வாழ்வே நற்செய்தியாக மாறுகிறது. நம்மோடு நம்மில் வாழ்ந்த ஸ்டான் சுவாமியின் வாழ்வு, உயிர்ப்பின் முப்பரிமாணத்தை விளக்குகிறது. உயிர்த்த இயேசு தரும் இறையனுபவம் முப்பரிமாணம் கொண்டது. நீளமானது, அகலமானது. ஆழமானது. இம்மூன்று பரிமாணங்களும் உயிர்ப்பின் முழுமையான, நிறைவான இறையனுபவம் அடங்கியுள்ளது. அன்றாட வாழ்வில், மதிப்பீடுகளின்படி வாழ்ந்துகாட்டி, அவரைக் கண்டுகொண்டு, அன்றாட வாழ்வில் சிறு சிறு  பாடுகளில் பங்கேற்பதன் மூலம் கிறிஸ்துவின் உயிர்ப்பின் முப்பரிமாண இறையனுபவத்தைத் தொடர்வோம்.