காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் இராகுல் காந்தி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தன் பரப்புரையில் ‘கருத்தியல் யுத்தம்’ என்ற முழக்கத்தை முன்வைத்துப் பேசியமை நினைவிருக்கலாம். கருத்தியல் (Ideology) எனும் சொல்லாக்கம் உள்ளடக்கிய கருத்தை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. கருத்தியல் சார்ந்த ஒரு போரினை இன்று முன்னெடுக்க வேண்டிய காலகட்டாயத்தில் உள்ளோம்.
கேரளத்தில்
சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடது முன்னணி சார்பில் தேர்தலில் நிற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் தோழர் பாரதிய சனதாவில் இணைந்துள்ளாராம். அசாம் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஒருவர் பாரதிய சனதாவில் சேர்ந்துள்ளார். சமூக நீதியை அச்சாரமாகக் கொண்ட திராவிடத்தின் பல்வேறு பிரிவுகளில் ஒன்றான அ.தி.மு.க.வின் மொத்த
உறுப்பினர்களுமே புது
டெல்லியின் துதிபாடிகளாக மாறிப்போயினர்.
இத்தேர்தல்
‘தமிழ்நாடா? டெல்லியா?’ என்ற கேள்விக்குப் பதிலாக அமையவேண்டும் என்பதை நெடுகச் சொல்லிவரும் முதலமைச்சரின் நியாயமான கேள்விக்குப் பதிலளிக்காத நிலையில், பாரதிய சனதாவோடு கொண்ட கூட்டைத் தெருவெங்கும் நியாயப்படுத்தி வரும் எடப்பாடியாரைக் கருத்தியல் பார்வையில் எங்கு நிறுத்தப் போகிறோம்? ‘பாரதிய சனதாவோடு கூட்டணி கொள்வதைக் கேள்வி கேட்க இவர் யார்?’ என்று கேட்கும் எடப்பாடியார் போக்கை எந்தக் கருத்தியலுக்குள் முடக்குவது? இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அறிவிக்கப்பட்ட தேசிய சனநாயக முன்னணி வேட்பாளர்களின் கருத்தியல் என்ன?
இந்தியா
சமயச் சார்பற்ற சனநாயக நாடு என்பதை இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனரா? சனநாயகம் காக்க உருவாக்கப்பட்டுள்ள சனநாயக நிறுவனங்களின் வீழ்ச்சியை இவர்கள் அங்கீகரிக்கின்றனரா? இந்திய அரசமைப்புச் சட்டம் முன்னிறுத்தும் மதச் சுதந்திரம், கருத்துரிமை என்பன பற்றியெல்லாம் இவர்கள் நிலைப்பாடு என்ன?
பா.ச.க. ஆளும்
மாநிலங்கள் அனைத்திலும் கட்டாய நிகழ்வாக நிறைவேற்றப்பட்டு வரும் மதமாற்றத்
தடைச்சட்டங்கள் பற்றிய இவர்கள் நிலைப்பாடு என்ன?
வெறும்
அடையாள ரீதியாக, கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, கிறிஸ்து பிறப்பன்று நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட கிறித்தவருக்கு எதிரான வன்முறையைக் கண்டு கொள்ளா யுக்தியை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்?
இது
என்ன புதிர்? இந்தியா எனும் புவியியல் அமைப்பு
இந்துகளின் நாடு! இந்துகளே இந்நாட் டின் தேசம் என்று அறிவித்த சவார்க்கரின் கொள்கையை என்றுமே மறுக்காத இந்துத்துவர்கள் ஒரு புறம்; இவர்களின் கொள்கைக்குத் தலைவணங்கி மௌனமாக ஏற்றுக்கொள்ளும் வலதுசாரிகள் மறுபுறம். தொலைக்காட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டு இந்த வலதுசாரிகளின் அராஜகப் போக்கை நியாயப்படுத்தும் அசிங்கப்போக்கையும் சந்தித்து வருகிறோம்.
“இப்போதைய தேர்தலில், எந்தக் கட்சியும் மதச்சார்பின்மை எனும் முகமூடியை அணிந்துகொண்டு வாக்கு கேட்பதில்லை. மதச்சார்பின்மையும் பன்மைத்துவமும் இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கூறுகளாக அலங்கரிக்கப்பட்ட நிலையிலும், மோடியின் ஆட்சி இந்திய அரசியல் கட்சிகள், இவ்விரு முக்கியக் கொள்கைகளையும் உதட்டளவில் கூட உச்சரிப்பதைத் தடுத்து வைத்துள்ளது. அரசியல் சாசன மதச்சார்பின்மையைப் புறந்தள்ளும் பணியை நமது ஊடகங்களும் செவ்வனே செய்து வருகின்றன. 2002-இல் குசராத் படுகொலைகளுக்குப் பின்பும் இப்படியே நடந்தது. இப்போக்கை ‘மோடி விளைவு’
(Modi effort)
என்றழைக்கலாம்.” - ஆகர் பட்டேல் (Price of the Modi Years பக்.3).
மேற்கண்ட
நூலின் ஆசிரியர் ஆகர் பட்டேல், மோடி அரசால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட உலகளாவிய
பொது மன்னிப்பு சபையின் (Amenity International) இந்திய
இயக்குநர்.
ஏன்
நாம் இப்போது மதச்சார்பின்மையைப் பேசத் தயங்குகிறோம்? மாபெரும் கருத்தியல் யுத்தம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிய காலக் கட்டாயத்தில் வாழ்கின்ற நிலையில், மதச்சார்பற்றக் கூட்டணி சார்ந்த எத்தனை தலைவர்களுக்கு, எத்தனை கட்சித் தொண்டர்களுக்கு
இக்கருத்தியலில் புரிதல் இருக்கிறது?
அரசமைப்புச்
சட்டம் முன்னெடுக்கும் இவ்வடிப்படைக் கோட்பாடுகள்தாம், இவைதரும் வெளிதாம் (space) மதம் சார்ந்த நிறுவனங்களை, மத அடையாளங்களை, மதச்
சுதந்திரத்தை, மதம் கடந்தும் செயல்படும் மானுட மாண்பைக் காக்கும் கவசங்களாயுள்ளன. 1992-ஆம் ஆண்டு 400 ஆண்டுகால பாபர் மசூதி இந்துத்துவ கரசேவகர்களால் தகர்க்கப்பட்ட நிலையில், அப்போது உ.பி. மற்றும்
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி செய்த பாரதிய சனதா அரசு கலைக்கப்பட்டது. கலைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடிய பாரதிய சனதாவினருக்கு நீதிமன்றம் இந்திய அரசின் உயிர்க்கொள்கையாம் மதச்சார்பின்மையைச் சுட்டிக்காட்டி ஆட்சிக் கலைப்பை நியாயப்படுத்தியது நினைவிருக்கலாம். “இந்நாடு மதச்சார்பின்மையை ஏற்றால் வாழும் அல்லது மடியும்”
(Secularise or Perish) என்பார்
கிருஷ்ணய்யர். இன்று அதே நீதிமன்றம் இராம சென்ம பூமி வழக்கை எப்படிக் கையாண்டது? என்பதனையும், இன்று நியாயப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் மதவழி தேசியம் (Religious Nationalism) மதச்சார்பின்மை
எனும் உயிர்க்கொள்கையைச் சிதைத்து வருதலையும் அறிவோம்.
மதச்சார்பின்மை
மதங்களை, மத நம்பிக்கையை மறுப்பதில்லை
என்பதே உண்மையெனினும், காங்கிரஸ் அரசு போற்றிய மதச்சார்பின்மையைப் போலி மதச்சார்பின்மையென்றும், இந்நாட்டின் பெரும்பான்மை மதத்தவருக்கு (இந்து) எதிரானது என்றும் மதச்சிறுபான்மையினரைத் திருப்தி செய்யவே (Appeasement) இக்கொள்கையென்றும்
விடாப்பிடியான ஒரு பொய்ப் பரப்புரையை மேற்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளது; ஆளும் அரசு, எவையெல்லாம் உயிர்க்கொள்கை ஏற்றுக்கொண்டிருக்கின்றனவோ,
இக்கொள்கைகள் எப்போதும் சாத்தியப்படுவதில்லை என்றே அறிவுடைய மாந்தர் அனைவரும் எண்ணியிருந்தனரோ, அவை அனைத்தும் இந்திய மதவாதிகளுக்குச் சாத்தியமாகி வருதலைக் காண்கிறோம். இதுதான் இன்றைய இந்தியாவின் பெரும் சோகம்.
இந்தியாவில்
வளர்த்தெடுக்கப்பட்ட பார்ப்பன சித்தாந்தத்தை தமிழ்நாட்டின் பெரியாரியம் தன் சமூக நீதிக்கொள்கையால் எதிர்கொண்டது; ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனால், திராவிடப் பெயர் கொண்ட கட்சிகளே, வடவாரியத்தைத் தூக்கி நிற்கும் கட்சியின் பின்னால் அணிவகுத்து நிற்பதைப் பார்க்கிறோம். இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் தன் ஆட்சியை நிறுவியிருக்கும் பாரதிய சனதா கட்சி, தமிழ்நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியுடன் 27 இடங்களோடு நிறைவு கொள்கிறதெனில் நோக்கம் என்ன? தேசிய சனநாயகக் கூட்டணி என்ற பெயரில் அணிசேர்ந்துள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருநாள் கபளீகரம் செய்யப்படும் என்ற உண்மையை அறியாரோ?
கூட்டணிக்
கட்சிகள் புடைசூழ நடுவில் அமர்ந்து, வேட்பாளர் பட்டியலைப் பெருத்த மகிழ் வோடு அறிவிக்கும் வாய்ப்பைப் பெற்ற எடப்பாடியார் எனும் இவர் யார்? இவர் என்னவாகப் போகிறார்? தி.மு.க.
எனும் கட்சியை அழிப்பது இவர் நோக்கமாக அறிவித்திருக்கலாம். இவர் நோக்கம் ஒருவேளை நிறைவேறலாம். பாரதிய சனதாவின் நிழலில் இவர் பெறும் வெற்றி, எதிர்கால இந்தியருக்கு, இந்நாட்டின் சனநாயகத்திற்கு, மதச்சார்பின்மைக்கு, மதச்சிறுபான்மையினருக்குக் கலாச்சாரப்பன்மை எந்தவிதப் பாரதூர விளைவுகளைத் தரும் என்ப தனை உணர்ந்துள்ளாரா? இவ்வரசின் உள்ளார்ந்த மதச் சிறுபான்மையினர் மீதான வெறுப்பை இவர் அறியாதவரா?
குசராத்
படுகொலை, குடியுரிமை திருத்தச் சட்டம், வாக்குரிமை சீர்திருத்தச் சட்டம், ‘ஊடுருவலாளர்’ என்று
பெயரிட்டு இசுலாமியரை ஒதுக்கும் நடவடிக்கைகள், ஒரு சிறிய மதச்சிறுபான்மையினரைத் தேசத்தின் எதிரிகளாகச் சித்தரித்தல், ‘காஷ்மீர் டைரி’ என்றும், ‘கேரளா ஸ்டோரி’ என்றும், ‘புல்வாமா தாக்குதல்’
என்றும், ‘சிந்தூர் ஆப்ரேஷன்’
என்றும் இவர்கள் சூட்டும் பெயர்களில், திட்டமிட்ட சூழ்ச்சி வலைக்குள் புதைந்திருப்போர் யார்? உழைக்கும் மக்களுக்கு ஆதரவானோர் ‘நகர்புற நக்சல்கள்’
என நாமகரணம் சூட்டப்படுவர்; பழங்குடி மக்களுக்காய் ஓயாது உழைத்த வீரத் துறவி ஸ்டேன் சுவாமி சிறையில் அமரத்துவம் அடைகிறார். எளிய மக்களின் இறைநம்பிக்கையை ஆதாயமாக்கி, வாக்குகளைத் தேடி திருப்பரங்குன்றம் வருகை தந்து, சமயச்சார்பற்ற நாட்டின் பிரதமர் ஆற்றிய உரையின் தொடக்கமே ‘வெற்றிவேல், வீரவேல்’ என்றாகிறது.
நமக்கு
எழும் மிகவும் கவலையான கேள்வி என்னவெனில், சனநாயகத்திற்கு ஆதரவான போரில், சனநாயகத்திற்கு எதிரான சனாதன எதிர்ப்புப் போரில், பன்மை அழித்து ‘ஒற்றை’ எனும் எதேச்சதிகார எதிர்ப்பில் வர்ணத் தர்மத்தைக் காத்து, பார்ப்பன மேலாதிக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் போக்கினை எதிர்க்கும் போரில் நாம் எங்கிருக்கிறோம்? நம் குருகுலம், குருகுல முதல்வர்கள், பொதுநிலையினருள் தலையாயவர் எங்கிருக்கிறோம்?
திராவிட
மாடலைத் தூக்கிப் பிடிப்போர் எத்தனை பேரிடம், இடதுசாரி அமைப்புகள் எத்தனை பேரிடம், இந்தியப் பெரும்பான்மைவாத அரசியலால் நேரடி பாதிப்புக்குள்ளான மதச்சிறுபான்மையினர் மற்றும் அவர்தம் தலைவர்கள் எத்தனை பேருக்கு இந்துத்துவக் கருத்தியல் பற்றித் தெரியும்?
இக்கருத்தியலில்
எனக்கும் என் சமூகத்திற்கும் இடம் எதுவுமில்லை; இக்கருத்தியல் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; இது சம உரிமைக்கு உத்தரவாதமளிக்காதது.
இக்கருத்தியல் பிரிவினைக்கு வழிவகுப்பது; பாரதிய சனதாவின் சீடர்கள் இதனை ஏற்பதில்லை; ஆனால், ஏனையோரிடம் திணிக்கின்றனர். இக்கருத்தியலின் மீது எனக்கு நிறையக் கேள்விகள் உள்ளன. இக்கருத்தியல்தான் மகாத்மாவின் படுகொலைக்கு வித்திட்டது. இக்கருத்தியல்தான் அம்பேத்கரை ‘Littleput’ என்று அவமதிக்க
அனுமதித்தது. இதே கருத்தியல்தான் இன்றைய அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மனுநீதியை அரசமைப்பாக மாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுக்கக் காரணமாயிருந்தது. இதே கருத்தியல்தான் உச்ச நீதிமன்ற நீதியரசர் மீது செருப்பைத் தூக்கி எறிய வைத்தது.
“சில காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சாடினால் இந்து வாக்குகள் கிடைக்காதோ என்று அஞ்சுகின்றனர். இது ஓர் அரசியல் தற்கொலையே”
- கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே (‘Front line’ டிசம்பர்
15, 2025).
நம்மில்
எத்தனை பேருக்கு இத்தெளிவு இருக்கிறது? யோசிப்போமா!