news-details
ஆன்மிகம்
நிழல் பணியாளர் புனித யோசேப்பு

கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு (குறள் 981)

என்ற குறள் வரிகளுக்கு ஏற்ப, நன்மைகளையே வாழ்வின் கடமையாய் ஆற்றி சான்றாண்மையாளராக வாழ்ந்து, ‘நீதிமான்என்ற ஒற்றைச் சொல்லில் ஓராயிரம் கருத்துகளைப் பதித்தவர் புனித யோசேப்பு.

யார் இந்த யோசேப்பு?

திருமறை நூல் மற்றும் திரு அவையின் பாரம்பரிய போதனைகளின்படி இவர் 1. தாவீதின் வழிமரபிலே வந்தவர் (லூக் 1:27); 2. கன்னி மரியின் கற்புள்ள காவலர் (மத் 1:25); 3. இயேசுவின் வளர்ப்புத் தந்தை (மத் 2:13-15, 19-23); 4. திருக்குடும்பத்தைப் பேணி வளர்த்தவர் (லூக் 2:41-52); 5. திரு அவையின் நம்பிக்கையின் பாதுகாவலர் என்று திருத்தந்தை 9-ஆம் பத்திநாதரால் அறிவிக்கப்பட்டவர்; 6. இறைத்திட்டத்திற்கு எப்போதும் பணிந்தவர் (மத் 1:24); 7. கற்புக்கும் நற்படிப்பிற்கும் பாதுகாவலர்; 8. திருவிவிலிய நற்செய்தியில் நீதிமான் (மத் 1:49); 9. உழைக்கும் மக்களின் முன் மாதிரி (மத் 13:55).

புனித யோசேப்பு திருவிவிலியத்தில் ஒரு வார்த்தைகூட பேசாதவர். ஆனால், திரு அவையில் அன்னை மரியாவிற்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்டு வணங்கப்படும் புனிதர். இவரது குழந்தை இவருக்குச் சொந்தமானது இல்லை; வெறுமனே இவரது அரவணைப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும் இறைச் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அன்னை மரியாவையும், குழந்தை இயேசுவையும் தன் அரவணைப்பில் இறுதி வரை கண்ணின் மணிபோல் பாதுகாத்தவர். இவ்வுலகில் வேறு எந்த மனிதராலும் இதுபோல் செய்ய முடியாது. இதில்தான் புனித யோசேப்பின் மாண்பும் நேர்மையும் அடங்கியிருக்கிறது.

புனித யோசேப்பு ஒரு தந்தையின் இதயத்தோடு இயேசுவை அன்பு செய்தார்என்று மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். இயேசுவுடனான தன் உறவில் புனித யோசேப்பு விண்ணகத் தந்தையின் மண்ணக நிழலாக இருந்தார். ஓசேயா 11:3-4-இல் கூறப்பட்டுள்ளது போல் அவருக்கு நடை பயிற்றுவித்தார்; அவரைக் கையில் ஏந்தினார்; அவரது கன்னங்களை ஆரத் தழுவி குனிந்து அவருக்கு உணவு ஊட்டினார்.

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

என்ற புறநானூற்றுப் பாடல் கூறுவதைப் போல் இயேசு பெற்றிருந்த ஞானத்திற்கும் அறிவுத்தெளிவிற்கும் அடிப்படைக் காரணம் புனித யோசேப்பின் தந்தைக்குரிய அக்கறையும் வளர்ப்பும்தான். “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? இவர் தச்சருடைய மகனல்லவா?” (மத் 13:54-55) என்று மக்கள் வியந்து போற்றும் அளவிற்கு யோசேப்பின் வளர்ப்பு இருந்துள்ளது. மேலும், நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவை யோசேப்பின் மகன் என்று அழைக்கத்தக்க விதமாக, ஒரு தந்தையின் பாசத்தையும் கடமைகளையும் செய்துள்ளார்.

சாதாரணமாக, அதிகம் செய்தித்தாள்களில் இடம்பெறாத, மேடைகளில் தோன்றாத, புகழ் வெளிச்சத்தில் மின்னாத நிழல் பணியாளர்கள் பலர் உள்ளனர். முக்கியமாக மருத்துவமனைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உழைத்து உருக்குலைந்து அனைவருக்கும் உணவு விளைவித்துக் கொடுக்கும் விவசாயிகள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுபவர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்பவர்கள் போன்ற இவர்கள்தாம் சாதாரண மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளனர் எனலாம். இவர்கள்தான் அதிகம் வெளிச்சத்திற்கு வராதவர்கள். நிழலின் மறைவில் பணியாற்றுபவர்கள். ஆனால், இவர்கள் பணிசெய்யாவிட்டால் வீடும் ஊரும் உலகமும் நாற்றமெடுத்துவிடும்.

இவர்கள்தாம் மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சுமூகமாகச் சுழல அச்சாணியாக இருக்கின்றனர். அதேபோல்தான் புனித யோசேப்பும், வெளிப்படாத மறைந்த வாழ்வில்தான் மீட்பின் வரலாற்றில் ஒப்புயர்வற்ற பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ஏழையாகப் பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்;

துன்பத்தில் துவண்டாலும்

தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்;

கஷ்டங்களுக்கு மத்தியிலும் கண்ணியமாக வாழ்ந்தவர்.’

உழைத்து வாழவேண்டும் என்ற உழைப்பின் உன்னதத்தை உணர்த்தியவர் புனித யோசேப்பு. அதனால்தான் இவர் அகில உலகத் திரு அவையின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கற்பிற்கு, கல்விக்கு, திருமணம், குடும்பங்கள், நல்ல மரணம், தொழிலாளர்கள், கர்ப்பிணிகள் பயணம் செய்வோர், புலம்பெயர்ந்தோர், அகதிகள் இவர்களுக்கெல்லாம் பாதுகாவலராக இருக்கிறார். இவர்களெல்லாம் புனித யோசேப்புவிடம் வரங்களைக் கேட்டு தவறாமல் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புனித யோசேப்பிடம் வரம் கேட்டு எவரும் அடையாமல் போனதில்லை என்று புனித தெரேசம்மாள் கூறியதை நினைத்து, நாமும் நமது செபங்களை, வேண்டுதல்களை, விண்ணப்பங்களை, நம் குடும்பங்களை வரம் தரும் வளனாரிடம் சமர்ப்பிப்போம்.

கேட்ட வரங்களைப் பெற்று இறை மகிமையில் திளைப்போம்.