இயேசுவின் மனுவுரு எடுத்தல் என்பது மனித வரலாற்றிலே தம்மையே நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளும் அருள் மிகுந்த கடவுளின் நிகழ்வாகும். “வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார்” (யோவா 1:14). தாம் வாழ்ந்த வரலாற்றுச் சூழலில் இயேசு தம்மையே இணைத்துக்கொண்டு வாழ்ந்தது வெறும் ஆன்மிக, சமயத் தளங்களில் மட்டுமல்ல.
அநீதிச் சமூகத்திற்கு
எதிராகக்
குரல்
கொடுத்தது
அரசியலாக்க
நிலைப்பாடே!
சமூக
(மத் 9:9-12), பொருளாதார (மத் 20:1-16), பண்பாட்டு (லூக் 13:10-17), சமய
(மாற் 14:53-63), அரசியல் (யோவா 18:28-19:38) களங்களில் இயேசு பரிவன்புமிக்கவராகவும் இறைவாக்கினராகவும் செயல்படுவதைப் பார்க்கின்றோம். அவருடைய சமுதாயத்தில் அரசியல் சமயத் தலைவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அநியாயங்கள், அதர்மங்கள், ஒடுக்குமுறைகள், ஏழ்மை, வேலையில்லாமை, ஆதிக்கத்தனம், சுரண்டல், ஆண்வழிச் சமுதாயத்தின் ஆதிக்கத்தனம், மனிதநேயம் மறந்த சடங்குத்தனம், நீதியை மறந்த சட்டத்தனம்... இவற்றையெல்லாம் இயேசு எதிர்த்து இறைவாக்கினராகச் செயல்பட்டார். இவற்றினால் பாதிக்கப்பட்ட ‘அனாவிம்’ என்ற முதுகொடிக்கப்பட்ட மக்களோடு தம்மையே ஒன்றாக இணைத்துக்கொண்டு, அதர்மச் சமுதாயத்திற்கு எதிர்த்துக் குரல் கொடுத்தார்.
இறையாட்சிச் சமூகத்தில்
அனைவரும்
சமம்
என்பதும்
அரசியலாக்கப்
பார்வைதான்!
காயப்படுத்தப்பட்டு
ஒடுக்கப்பட்ட தம்முடைய சமுதாயச் சூழலிலே, ‘இறையாட்சி’
எனும் கனவோடு மக்கள் எல்லாரையும் இனம், மதம், நிறம், சமூக அந்தஸ்து, பாலினம், தகுதி உள்ளவர்கள், தகுதியற்றவர்கள் என்பதை எல்லாம் கடந்து, எல்லாரையும் கடவுளின் மாண்பு நிறைந்த மக்களாக மாற்றும் பணியைச் செய்தார் (யோவா 1:12).
சமத்துவச்
சமுதாயம்தான் அவரது இறையாட்சிக் கனவின் உள்ளீடாகும். பரிவன்போடும் இறைவாக்கினர் தன்மையோடும் அவர் வழங்கிய போதனைகள், ஈடுபட்ட செயல்பாடுகள் எல்லாம் மக்களைக் கடவுளின் பிள்ளைகளாக்கும் சக்தி படைத்த இறையாட்சிக் கனவிலே வெளிப்பட்டது.
எல்லாரையும்
கடவுளுடைய மக்களாக ஆற்றல்படுத்துவது உண்மையிலேயே இறையாட்சியினுடைய அரசியல் செயல்பாடு ஆகும். ஏனென்றால், அரசியல் என்பது ஒருவரோ ஒரு குழுவோ தம்முடைய வாழ்வைத் தேர்ந்துகொள்வதற்கும் தீர்மானிப்பதற்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் பெற்றிருக்கும் ஆற்றலாகும். இவ்வாற்றல் பறிக்கப்பட்ட மக்கள், அந்த ஆற்றலை மறுபடியும் பெறவும், மனித மாண்போடு வாழவும் இயேசுவினுடைய இறையாட்சிப்
பணி வழியமைத்தது.
சமயப் பணியில்
இழையோடிய
சமூகப்
பணியும்
அரசியலாக்கம்தான்!
இயேசு
வெறும் ஒரு சமயப் போதகர் அல்லர்; நோயாளிகளைக் குணமாக்கினார்; ஒடுக்கப்பட்ட ஏழையர் சார்பாக நின்று செயல்பட்டார்; மக்களைப் பீடித்திருந்த பேய்களையும் தீய சக்திகளையும் விரட்டியடித்தார்; யூதராக, சமாரியராக கலிலேயராக, பிற இனத்தவராக, ஆணாக, பெண்ணாக, குழந்தையாக, மூன்றாம் பாலினத்தவராக இருந்தாலும் எல்லாரையும் சமமாக நடத்தினார். இப்படிப்பட்ட சமதர்ம சமத்துவ இறையாட்சிச் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும்போது அவர் இறையாட்சிக்கு எதிரான தீய சக்திகளையும் அமைப்புகளையும் மக்களையும் துணிச்சலோடு எதிர்கொண்டார் (மத் 23). ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்தார்; ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை வாழ்வு, பார்வையற்றோருக்குப் பார்வை, சிறைப்பட்டோருக்கு விடுதலை என்று தம்முடைய பணியில் தெளிவாக, கூர்மை நிறைந்தவராக, தீர்க்கமாகச் செயல்பட்டார் இயேசு (லூக் 4:18).
இயேசு
அறிவித்துச் செயல்படுத்திய அனைத்திலும் சமூக, பொருளாதார, பண்பாடு, சமய, அரசியல் ரீதியாக எல்லாரையும் மாண்பு நிறைந்த கடவுளுடைய பிள்ளைகளாக்கும் தணியாத தாகம் நிறைந்திருந்தது. சவால் மிகுந்த இயேசுவின் இலட்சியமும் பணியும் வாழ்வும் மக்கள் எல்லாரையும் கடவுளுடைய பிள்ளைகளாக்கும் சக்தி படைக்கும் குழந்தைகளாக வளர்த்தெடுப்பதுதான் அவருடைய ஒட்டுமொத்த இறையாட்சியின் கனவாக இருந்தது. இக்கனவு இயேசுவின் அரசியலாக்க ஈடுபாட்டில் மலர்ந்தது.
கிறித்தவரின்
அரசியலாக்க
ஈடுபாடு:
வரலாற்றுக்
கட்டாயமே
கிறித்தவர்களின்
அரசியலாக்க ஈடுபாடு என்பது இறையாட்சிச் சமூகத்தைக் கட்டி எழுப்பும் பணியோடு பின்னிப் பிணைந்தது. கிறித்தவர் அனைவரும் ஆற்றல் பெற்றிட, ஆற்றல் பெற்றவராகப் பிறரை வளர்த்திட இன்று கட்டாயம் நமக்கு அரசியலாக்க ஈடுபாடு தேவை என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.
இனியும்
நாம் அரசியலாக்க ஈடுபாட்டில் அக்கறையில்லாமல் அலட்சியமாகச் சுயநலத்தோடு ஒதுங்கி இருந்தோம் என்றால், நாமும், நம்முடைய கிறித்தவ இருப்பும் வாழ்வும் பணியும் இந்திய நாட்டிலே ஒதுக்கி முடக்கி வைக்கப்படும். ஏனென்றால், மதவாத, ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் இந்துத்துவ, பாசிச அரசியல் ஆட்சியிலே நமது உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
அண்மையில்
முன்வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா (FCRA) சட்டமும், ஏற்கெனவே 13 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டமும் தொடர்ந்து கிறித்தவர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும் தொடர்ச்சியாகக்
கூடிக்கொண்டே போகும்போது, நாமே நமது உரிமைக்குத் துணிச்சலாகக் குரல் கொடுத்திடும் அரசியலாக்க ஈடுபாடு தவிர்க்க முடியாத கிறித்தவ இறையாட்சியின் ஈடுபாடாக மாறுகின்றது.
கிறித்தவ அரசியலாக்க
ஈடுபாட்டுச்
செயல்பாட்டிற்குச்
சில
பரிந்துரைகள்
• அரசியலாக்கக் கல்வியையும் விழிப்புணர்வையும் நம்முடைய பங்குகளிலும் கல்வி நிறுவனங்களிலும் முன்னெடுக்கவேண்டும்.
• இந்தியாவின் அரசமைப்புச் சாசனத்தைப் பற்றிய விழிப்புணர்வும் கல்வியும் நம்முடைய நிறுவனங்களிலும் பங்குகளிலும் வளர்க்கப்பட வேண்டும்
• இந்திய அரசமைப்புச் சாசனத்தின் முகப்புரையை நாம் பொது இடங்களில் வைப்பதும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் நாம் எல்லாரும் அவற்றை ஒன்றாக வாசித்து அறிக்கையிடுவதும் அரசமைப்புச் சாசனம் தருகின்ற விழுமியங்களில் வளர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் .
• பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வெறும் பணம் ஈட்டும் ஐ.டி. போன்ற
தொழிற்கல்விகளில் மட்டுமல்லாது, அரசியல் களத்தில் ஈடுபடுகின்ற அரசியல்வாதியாக மாற்றிடவும் முன்வரவேண்டும். அரசியல் பணியும் ஒரு முக்கியச் சமுதாயப் பணியாகப் பார்க்கப்பட வேண்டும்.
• இளைஞரும், சமூக விழிப்புணர்வு உள்ளவரும் அரசியலில் நேரடி ஈடுபாட்டில் களம் இறங்க வேண்டும்.
• நிறைய கிறித்தவர்கள் பஞ்சாயத்து உறுப்பினராக, நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்களாகவும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாறிட உழைக்கவேண்டும்.
• நீதித்துறை, நிர்வாகத் துறை, சட்டத்துறை போன்றவற்றில் நம்முடைய கிறித்தவர்கள் பணி செய்திட தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
• ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற நிர்வாகத் துறைகளில் கிறித்தவர்கள் அதிகமாகக் களம் இறங்கவேண்டும்.
• ஆயர்களும் அருள்பணியாளர்களும் நம்முடைய இறைமக்களை இப்படிப்பட்ட நேரடியான அரசியல் வாழ்வுக்குக் களமிறங்கிடப் பேராதரவையும் உற்சாகத்தையும் வழங்கவேண்டும்.
•
நமக்கு முன்பு சுதந்திரப் போராட்டத்தில், நேரடி அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள கிறித்தவர்களை மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வந்து, அவர்களுடைய வாழ்வை உண்மையாக்க முன்வர வேண்டும்.
• வாக்களிப்பது நமது பிறப்புரிமை. எனவே, வரும் தேர்தல்களில் எந்தக் கிறித்தவரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வாக்களிக்காமல் இருந்தால், அது கிறித்தவத்திற்கே செய்கின்ற துரோகமாகும்.
• வாக்களித்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதோடு மட்டுமில்லாமல், அவர்கள் பணியில் இருக்கும்பொழுது தங்களுடைய கடமையைச் சரியாகச் செய்கிறார்களா என்று துணிச்சலுடன் கண்காணிக்கவேண்டும்
• எல்லாக் கிறித்தவரும் இந்தியச் சமூகத்தைக் கூறுபடுத்தும் இந்துத்துவவாதத்திற்கும் பாசிசத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் மதவாதத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தனத்திற்கும் எதிரான நிலைப்பாடு எடுத்திடவேண்டும்.
• கிறித்தவர்கள் தனியே நின்றிடாமல், அரசமைப்புச் சாசனம் தருகின்ற விழுமியங்களைப் தூக்கிப்பிடிக்கின்ற மதச்சார்பின்மையைப் பாதுகாக்கின்ற சுதந்திரம் சனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற, ஏழை மக்கள் சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்கின்ற பிற அரசியல் அமைப்புகளோடும் இயக்கங்களோடும் கட்சிகளோடும் இணைந்து பணியாற்றிட முன்வரவேண்டும்.
மேனாள் திருத்தந்தையின்
அறைகூவல்
இறுதியாக,
நம்முடைய மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிறித்தவ அரசியலாக்க ஈடுபாடு பற்றி மொழிந்த அறிவுரையோடு முடிக்க விரும்புகின்றேன்:
“திரு அவையின் சமூகப் போதனையின்படி அரசியல் என்பது அன்பின் உயர்ந்த வெளிப்பாடுகளில் ஒன்று; ஏனென்றால், அரசியல் பொதுநலனை முன்னெடுக்கிறது. நான் கிறித்தவர் என்ற முறையில் வெறும் பால்கனியிலிருந்து அரசியலை ஒரு பார்வையாளராக நின்று பார்க்கின்றேனா? இனியும் கிறித்தவர்கள் பால்கனி பார்வையாளராக இருக்க முடியாது; அரசியல் களம் இறங்கவேண்டும். கத்தோலிக்கராகிய நாம் நமது நம்பிக்கை வாழ்வை ஒரு குறுகிய தனிப்பட்ட வட்டத்திற்குள் வைத்துக்கொள்ளக்கூடாது. மாறாக, நம்முடைய நம்பிக்கை வாழ்வைப் பொது வழிக்குக் கொண்டு வருவது என்பது அநியாயத்திற்கு எதிரான குரலாகவும், நீதிக்குச் சார்பான குரலாகவும் நாம் மாற்றிட வேண்டும். அப்போதுதான் குரலற்ற மக்களின் குரலாகக் கிறித்தவர்கள் மாறமுடியும்!”