news-details
கவிதை
அஞ்சா நெஞ்சரே!

நித்தம் நித்தம் இரத்தம் குடிக்க நினைப்பவரை...

யுத்த சத்தம் என்றும்

நிலைக்கத் துடிப்பவரை...

மாட மாளிகையை மண்மேடாய்

கண்டு மகிழ்பவரை...

கணக்கில்லாக் குண்டுகளால்

மழலை அழுகையை இரசிப்பவரை...

ஏவுகணை கொண்டு மனிதத்தை

ஏழ்மையாக்குபவரை...

செயலாக்கும் எரிபொருளைச்

செயலற்றதாய் வீணடிப்பவரை...

உலக நாடுகளை அச்சுறுத்தி

உயர்வடைய நினைப்பவரை...

நட்பு நாடுகளும் பகைமை நாடுகளும்

நியாயம் பகரத் தயங்கும் கொடுங்கோலரைக்

கண்டு சற்றும் அஞ்சிடாது

கண்டனக் குரலெழுப்பும் உலக நடுவரே!

இயேசுவின் வழியில்

நீதியுரைக்கும் திருத்தந்தையே!

எதற்கும் அஞ்சிடா உண்மை

உரைக்கும் எங்கள் தலைவரே!

மண்ணில் இயங்கிடினும்

விண்ணில் பறந்திடினும்

மன்னவராம் இயேசுவின்

விழுமியத்தில்

நெஞ்சுரமானவரே!

உம்மை தலைவனாகக்

கொண்ட யாம் மகிழ்கிறோம்!

உம்மைப்போல் நெஞ்சுரத்துடன்

வாழவே துடிக்கிறோம் !

உம்மைப் போல் நீதியில் நிலைக்க

உறுதி கொள்கிறோம்! உம் கருத்தில் ஒன்றித்து

உம் நீதிக்குரல் உயரச் செபிக்கிறோம்!