news-details
ஞாயிறு தோழன்
19-04-2026, பாஸ்கா காலத்தின் 3-ஆம் ஞாயிறு - திப 2:14, 22-33 1பேது 1:17-21; லூக் 24:13-35

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் மூன்றாம் வாரம் இறை அனுபவம் பெற நமக்கு அழைப்புவிடுக்கிறது. எம்மாவு அனுபவம் கிறித்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படவேண்டும். எம்மாவு சீடர்களின் வழிப்பயணத்தில் உடன் நடந்து உறவாடிய இயேசு, நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணத்திலும் துணையாக வருகின்றார். எம்மாவு சீடர்களோடு நடந்த இயேசு நமது துன்பங்கள், துயரங்கள், வலிகள், வேதனைகள், புரிந்துகொள்ளாமை, கடன் தொல்லைகள், குழப்பங்கள், தனிமை, மனச்சோர்வு, நோய் என அனைத்து நேரங்களிலும் நெருங்கி வந்து, நம்மைத் தேற்றி, நமக்கு விடுதலை அளிப்பார்.

எம்மாவு சீடர்களோடு பேசிய இயேசு அன்றாடம் இறைவார்த்தை வழியாக நம்மோடும் பேசுகிறார். எனவே, இறைவார்த்தையை ஆர்வத்தோடு வாசித்து, அதை வாழ்வாக்க முயற்சி செய்வோம். இயேசு அப்பத்தைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தபோது, சீடர்களின் அகக்கண்கள் திறக்கப்பட்டு இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள். கத்தோலிக்கத் திரு அவை நமக்குக் கொடுத்த புனித அருளடையாளமான நற்கருணையில் இயேசுவைக் கண்டுகொள்வோம்.

எம்மாவு சீடர்களைப் போன்றுஎங்களோடு தங்கும் இயேசுவேஎன்று நமது உள்ளத்தில் குடிகொள்ள அழைப்போம். இயேசுவின் உடனிருப்பை உணர்ந்த எம்மாவு சீடர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார்என்று இந்த உலகிற்கு அறிவித்தார்கள். இறைவார்த்தையிலும் நற்கருணையிலும் நாம் சுவைத்த இயேசுவை உலகிற்கு அறிவிப்போம். தம்மையே வெளிப்படுத்தும் இயேசுவைக் கண்டுகொள்ளும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகம் பெந்தகோஸ்து நாளில் பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு ஆற்றிய அருளுரையைப் பற்றிக் கூறுகின்றது. இயேசு ஆளும் வர்க்கத்தால் கொலை செய்யப்பட்டார்; ஆனால், கொலை செய்யப்பட்ட அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இன்றும் வல்ல செயல்களை நம்மிடையே நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார். உயிருள்ள இயேசுவின் உன்னத சாட்சிகளாய் வாழ அழைக்கும் இறைவார்த்தைக்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நாம் மாசுமருவற்ற இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுள்ளோம். எனவே, உலகப்போக்கின்படி வாழ்கின்ற மனநிலையை விடுத்து, பாவமின்றித் தூய்மையான வாழ்வு வாழ அழைக்கப்படுகின்றோம். மனிதருக்கு அல்ல; மாறாக, கடவுளுக்கு அஞ்சி வாழ்வோம். “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்என்று கூறி நமக்காகவே உயிர்த்த இயேசுவைப் பற்றிக்கொண்டு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. ‘நான் உங்களோடு இருக்கிறேன்என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் இறைவார்த்தையால் ஒளிர்விக்கப்படவும், திருப்பலி என்னும் அருளடையாளத்தில் உம்மைக் கண்டுகொள்ளவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! எம்மாவு சீடர்களைப் போல நாங்கள் அனைவரும் அகக்கண்கள் திறக்கப்பட்டு உம்மை நாள்தோறும் கண்டுகொள்ளவும், இறைநம்பிக்கையில் வளரவும், எம் குடும்பங்களிலும் நீர் தங்கி எம்மையும் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. என்றும் வாழும் ஆண்டவரே! போட்டி, பொறாமை, பேராசை, ஆணவம், மன்னிக்காத மனம் இவற்றையெல்லாம் விடுத்து, அன்பு, மன்னிப்பு, ஏற்பு, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற பண்புகளில் நாளும் வளர வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. வார்த்தையால் எம்மை வாழ்விக்கும் ஆண்டவரே! நீர் எமக்கு வரமாகக் கொடுத்த எமது குழந்தையருக்காக நன்றி கூறுகின்றோம். அவர்கள் பாதுகாப்போடு வாழவும், இறைஞானத்தை முழுமையாகப் பெற்றுக்கொள்ளவும், இறைஅழைத்தல் எம் பங்கிலே பெருகிடவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.