news-details
சிறப்புக்கட்டுரை
சாதாரணமாக்கப்படும் அசாதாரணங்கள்!

நமது சமூகத்தில் சாதாரணமாகப் பேச்சு வழக்கிலும் வாழ்விலும் இருக்கும் ஒரு சொல்லாடல்சாதாரணமாகஎனலாம். நாம் ஒவ்வொருவரும் தினமும் ஒருமுறையாவதுசாதாரணமாகஎன்ற சொல்லினை நமது உரையாடல்களிலும் உறவாடல்களிலும் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.

சாதாரணம்என்ற சொல்லானது நமது சமூகத்திலும், நமது வாழ்விலும் இயல்பாக நடைபெறும் நிகழ்வு போன்ற அர்த்தத்தை நமக்குத் தருகிறது. ‘அசாதாரணம்என்பது அரிதான அல்லது வழக்கத்திற்கு மாறான நிகழ்வு என்ற அர்த்தத்தில் சமூகத்தால் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.

இன்று சாதாரணம் என்ற சொல்லின் புரிதல்இயல்பாக நடப்பதுஎன்ற புரிதலைக் கொண்டு இயங்கினாலும், தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் 30 கொலை நிகழ்வுகள் பதிவாகின்றன, அனுதினம் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கின்றன. இன்னும் போதை, தீண்டாமை, ஊழல், வன்முறை, சுரண்டல், ஏமாற்று, ஆதிக்கம் போன்ற மனிதநேயமற்ற நிகழ்வுகள் கட்டுக்கடங்காது நடைபெறுகின்றன. விளம்பர அரசாட்சிகள் கண்மூடிக் கொள்கின்றன. இவற்றையெல்லாம்சாதாரணம்என்று கடந்துபோக, நம் மனம் ஏனோ தயங்குகிறது.

நாம் சாதாரணமாகக் காணும் இந்தச் சமூக எதார்த்தங்கள் இயல்பானவையா? அல்லது ஏற்கெனவே யாரோ ஒருவரால் தீர்மானிக்கப்பட்டவையா? என்ற கேள்வி எழுகிறது.

கிராமத்தில் இதெல்லாம் சாதாரணம், நகரத்தில் இதெல்லாம் சாதாரணம், விடுதியில் இதெல்லாம் சாதாரணம், அலுவலகத்தில் இதெல்லாம் சாதாரணம், திரையில் இதெல்லாம் சாதாரணம், அரசியலில் இதெல்லாம் சாதாரணம்... என்று மனிதத் தன்மையற்ற செயல்பாடுகளையும் சாதாரணமாகக் கருதி, சாதாரணமாகக் கடந்துபோகப் பழகும் சமூகமாகி, நாம் இன்று வரம்புகளற்று வாழ்கிறோமோ என்று எண்ணத் தூண்டுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால், மனித அறம் மழுங்கிப் போன நடைபிணங்களாக மாறிவிட்டோமோ? என்று சொல்லத் தோன்றுகிறது.

எல்லாமே இன்று சாதாரணம்தான். சமூகத்தின் தறிகெட்ட வீச்சிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், சமூகப் பொறுப்பிலிருந்து தப்பிக்கவும் ஒரு தனிநபர் பயன்படுத்தும் பதமேசாதாரணம்என்ற சொல்லாடல் போலத் தெரிகிறது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது சமூகத்தை உற்றுப் பார்க்கும் பொழுது சமூகம், அறநெறிகள், மனித நியமங்கள், நியதிகள், உரிமைகள் தொடங்கி விழுமியங்கள், குடும்ப உறவுகள், பழக்கவழக்கங்கள், அரசியல், சமூக அக்கறை, அதிகாரம், நம்பிக்கைகள், வாணிபம், பொது உளவியல், வாழ்க்கை குறித்த பார்வை, பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் வாழ்வியல் என அனைத்தும் ஓர் அசாதாரண விதத்தில் வேகமாகத் தீமையை விளைவிப்பதாக மாற்றமடைந்து வருவது உங்களுக்குத் தெரிகிறதா? ஏற்கெனவே பல ஆண்டுகளாகப் பழக்கத்தில் நிலவிய அறம் பயக்கும் சாதாரணங்கள் உருக்குலைந்து, சிதைந்து, அரிதாகிப்போனதே என்று சிந்தித்ததுண்டா? புதிதாக ஓர் அசாதாரண அறமற்ற சூழல் இன்று சாதாரணமாக மாறியிருக்கிறது. ஆனால், நாம் இதெல்லாம் சாதாரணம் என்ற ஒற்றை வார்த்தையில் உரைத்து அனைத்தையும் கடந்து செல்கிறோம்.

உதாரணமாக, சில மாதங்களுக்கு முன், அரசியலில் வெற்றிபெற இயங்கும் நடிகனைப் பார்க்கச் சென்ற 40 பேர் - பச்சிளம் குழந்தைகள், பெண்கள் முதல் நடுத்தர வயது ஆண்கள் என அநியாயமாகக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர் என்பது நமது சமூகத்தால் சாதாரணம் என்ற போர்வையில் கடந்து சென்றுவிட்டதைப் பார்க்கிறோம். சில வாரங்களுக்கு முன்னர், தனியாகப் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடிகளை வன்முறைக் கொண்டு மிரட்டி அந்த இளம் பெண்ணை விடிய விடிய பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, பெண்ணியத்தின் மாண்போடு சேர்த்து அந்த இளம்பெண்ணைத் தூக்கி வீசிச் சென்ற நிகழ்வும், காப்பீட்டுத் தொகைக்காகத் தனது தந்தையைக் கொலை செய்யும் அவலங்களும் ஒரு சாதாரண செய்தியாகக் கடந்து சென்றுவிடுவதைப் பார்க்கிறோம். அண்மையில் திருமணமான பெண் தனது காதலனோடு இணைய, தான் பெற்ற குழந்தையையே கொன்றுவிட்டதும் சாதாரணமான செய்தியாகக் கடந்து செல்லப்படுகிறது.

இன்றைய நமது தமிழ்ச் சமூகத்தில் சாதாரணமாகக் கடந்து செல்லப்படும், ஊடக வெளிச்சம் பற்றிக்கொண்ட நிகழ்வுகள் இந்த அளவுக்கு மனிதத்தன்மையற்றதாக இருக்கிறது எனில், ஊடக வெளிச்சம் எட்டாத, பொதுப்புத்திக்குத் தெரியாத, வெளியில் சொல்ல முடியாத எத்தனை எத்தனை ஈனச் செயல்பாடுகள் நமது சமூகத்தில் சாதாரணமாக நடந்துகொண்டே இருக்கின்றன என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பார்த்தால், நமது தமிழ்ச் சமூகத்தின் அசாதாரண நிலை நமக்குப் புரியும். எப்ஸ்டீனும் நாமும் சமகாலத்தவர்தானே? இன்று வளரும் தலைமுறையினர், இத்தகைய நிகழ்வுகளைக் குறித்து எப்படி இயங்குகிறார்கள் என்பதும் இத்தகைய நிகழ்வுகளைச் சாதாரண செய்தி என்ற அடிப்படையில்தான் புரிந்துகொள்கிறார்கள் என்றும் நமக்குத் தெரியும்.

எது சாதாரணம்?’ என்று நமது மனத்தில் ஒரு நாளும் கேள்வி எழுவதில்லை. ஏனெனில், சமூகத்தில் நடப்பது அனைத்தும் சாதாரணமே என்ற மன நிலை சமூகத்தின் பொதுப்புத்தியில் பல்வேறு வடிவங்களிலும் அடையாளங்களிலும் உளவியல் வருணனைகள் கொண்டும் உருவாக்கப்படுகிறது என்று காண்கிறோம்.

பிரபல சினிமாவிலும் இன்றைய கதாநாயகன்கள் கடத்தல்காரனாகவும் கொலைகாரனாகவும் அநீதி இழைப்பவனாகவும் சமூகப் பொறுப்பு இல்லாத சுயநலவாதியாகவும் தொடர்ந்து சித்தரிக்கப்படுவதும், இளம் பருவத்தில் வன்முறைகளை மனத்தில் பதிக்கும் வகையிலும், இரக்கமற்ற முறையில் கொன்று வெற்றியடையும் விதத்திலும் அலைப் பேசியை நிறைக்கும் இணைய விளையாட்டுகளும், சமூகத்தில் அனுதினம் சாதாரணம் என்ற போர்வையில் நாம் கடந்து செல்லும் இதுபோன்ற வன்முறை நிகழ்வுகளும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் குறித்து காட்டும் சமிக்ஞை என்ன?

உண்மையல்ல என்று நமக்குத் தெரிந்த கருத்துகளையும்கூட நம்பும் ஆற்றல் நம் அனைவருக்கும் உண்டு. பின்னர், நாம் தவறு என்று இறுதியாக நிரூபிக்கப்படும்போது, நாம்தான் சரி என்று காட்டுவதற்காக உண்மைகளைத் துணிச்சலுடன் திரித்துக்கூறும் இயல்பும் நமக்கு இருக்கிறதுஎன்ற ஜார்ஜ் ஆர்வெல்லின் கூற்று  இன்றைய, அநீதியைச் சாதாரணமாக்கும் சமூகக் கட்டமைப்பு குறித்த நமது நிலைப்பாடுகளில் உண்மையாவதைக் காண்கிறோம்.