இத்தாலியில் உள்ள தேசிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை லியோ, “நோயாளியின் நலனை எப்போதும் உங்களது முதன்மையான வழிகாட்டும் நெறிமுறையாகக் கொள்ளுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார். இத்தாலியின் முதல் உறுப்பு தானம் நிகழ்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அருளாளர் டான் கார்லோ கனோச்சி தனது இறப்பிற்குப் பின் தனது விழி வெண்படலத்தைத் தானம் செய்து இரு இளைஞர்களுக்குப் பார்வையளித்த உன்னதச் செயலை நினைவுகூர்ந்தார். “மனித உடலை வணிக மயமாக்குவதைத் தவிர்க்கவும், உறுப்பு மாற்றுச் செயல்பாடுகளில் வெளிப்படையான மற்றும் நீதியான அளவுகோல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் தொடர் விழிப்புணர்வு அவசியம். எல்லாவற்றையும் விலை மற்றும் இலாப நோக்கில் பார்க்கும் இக்காலத்தில், உறுப்பு தானம் என்பது கைம்மாறு கருதாத, சகோதரத்துவத்தின் அடையாளமாகத் திகழ வேண்டும்” என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.