news-details
ஆன்மிகம்
மரியன்னையைச் சிறப்பிக்கும் மே மாதம்!

மே மாதம் என்றதும் உங்கள் மனத்தில் எழும் சொல் என்ன? ‘மாதா வணக்கம்என்றால் நீங்கள் நல்ல கத்தோலிக்கர் என்று பொருள். உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுத்துக்கொள்ளலாம். கடந்த காலங்களில் நமது பங்குகளில் மாதாவின் வணக்க மாதம் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. ‘தேவதாயின் மாதம் இதுவல்லவோ! அதைச் சிறப்பாய்க் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழாஎன்றொரு சிறப்புப் பாடல் அக்காலத்தில் பாடப்பட்டது தெரியுமா? இன்றைய தலைமுறையினர் அறியாத அருமையான பாடல் அது.

முன்பெல்லாம் வணக்க மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு திருவிழா போலவே கொண்டாடப்பட்டது. மரியன்னைக்கு நம் அன்பை, நன்றியை, பாசத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் கோவில்களிலும் இல்லங்களிலும் நடத்தப்பட்டன. அத்துடன், அன்னையிடம் காணப்படும் நற்பண்புகள், நல்லியல்புகளை நாமும் பின்பற்ற அறைகூவல் விடுக்கும் நாள்களாகவும் அந்நாள்கள் அமைந்தன.

இன்றோ பெரும்பாலும் கிராமங்களில் மட்டுமே வணக்க மாதம் கொண்டாடப்படுகிறது. அங்கே இன்னும் மக்கள் மாலை நேரங்களில் கோவிலுக்குச் செல்கிறார்கள். செபமாலை, மரியன்னைப் பாடல்கள், மன்றாட்டு, மாதாவின் புதுமைகளை வாசித்தல், நிறைவாக நற்கருணை ஆசிர் நடைபெறுகிறது, சில இடங்களில் இனிப்போ, சிற்றுண்டியோ வழங்கப்படுகிறது. இன்னும் சில பங்குகளில் ஒவ்வொரு நாள் வணக்கத்தை ஒரு குடும்பத்தினர் சிறப்பிக்கின்றார்கள். இவையெல்லாம் கடந்த காலத்தின் எச்சங்களாகவே பார்க்கப்படவேண்டும். இன்னும் எவ்வளவு காலம் இவை நீடிக்கும் என்பதுவும் கேள்விக்குறியே.

ஊரக மற்றும் நகரப் பங்குகளில் இந்தப் பழக்கங்கள் இல்லை. மே மாதம் என்றாலே விடுமுறை மாதம். எனவே, பலரும் பயணங்களில் ஈடுபடுகிறார்கள். வழக்கமாக நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள்கூட மே மாதம் நடைபெறுவதில்லை என்றாகிவிட்டது. குடும்ப இறைவேண்டல் போலக் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவரும் பக்தி முயற்சிகளுள் வணக்க மாத நிகழ்வுகளும் சேர்ந்துவிடுமோ என்று தோன்றுகிறது. எனவே, குடும்ப இறைவேண்டல் போலவே, மாதா வணக்கத்தையும்  நாம் மறு ஆய்வு செய்து புதுப்பிக்கவேண்டும்.

ஆண்டு முழுவதுமே அன்னையின் மாதங்கள்தானே! நம் திரு அவையின் திருவழிபாட்டுக் காலண்டரை உற்றுநோக்கினால், சனவரி 01 ‘அன்னை மரியா இறைவனின் தாய்பெருவிழாவிலிருந்து, டிசம்பர் 08 ‘மரியன்னையின் அமல உற்பவம்பெருவிழாவரை எல்லா மாதமும் ஏதோ ஒரு வகையில், ஒரு பெயரில் அன்னைக்கு விழாக்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இருப்பினும், மே மாதம் மட்டும் சிறப்பான விதத்தில் அன்னையின் வணக்க மாதம் என்று கொண்டாடப் படுவது ஏன்? என்ற கேள்வி சிலரிடம் எழலாம்.

13-ஆம் நூற்றாண்டிலிருந்தே மே மாத வணக்கம் நடைபெற்று வருகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால், 18-ஆம் நூற்றாண்டிலிருந்துதான் இப்போது நாம் கொண்டாடும் முறைகள் அறிமுகமாயின. மரியன்னை திருத்தந்தையான ஆறாம் பவுல், 1965-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் நாள்மே மாதம் (Mense Maio) என்ற தலைப்பிலேயே ஒரு சுற்றுமடல் வெளியிட்டு மே மாத வணக்கத்தை ஊக்குவித்தார். ‘மரியாவைக் கொண்டாடுபவர், அவர் மகன் இயேசுவை அறியாமல் இருப்பாரா?’ என்பது அவரது கேள்வி.

அந்தச் சுற்றுமடல் வெளிவந்த நேரம் நம் கவனத்திற்குரியது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் இறுதி அமர்விற்கு முன்னால் அது வெளியிடப்பட்டது. வியட்நாம் போர், அமெரிக்கா-சோவியத் இரஷ்யா இடையே பனிப்போர் நிகழ்ந்த காலகட்டம் அது. எனவே, அமைதியின் தேவையை வலியுறுத்திஅமைதியின் அரசியான மரியாவின் பாதுகாப்பையும் பரிந்துரையையும் (மடல் எண். 10) மன்றாடி, அன்னை மரியாவிடம் நம்மை ஒப்படைக்க அழைத்தது அந்த மடல்.

அந்த மடலின் வழியாக மே மாதம் முழுவதும் உலகெங்குமுள்ள கத்தோலிக்கர் அன்னை மரியாவைச் சிறப்பான விதத்தில் கொண்டாட வேண்டும். வீடுகளில் குடும்பமாகச் செபமாலை செபிக்கவேண்டும். அமைதியின் அரசியான அன்னையிடம் உலக அமைதிக்காக மன்றாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை ஆறாம் பவுல். இந்தச் சுற்றுமடல் வெளிவந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், வணக்க மாதத்தைக் கொண்டாடும் தேவையில் மாற்றமில்லை. இன்றும் உலகைப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இன்றும் நம் குடும்பங்களில் அமைதியும் ஒற்றுமையும் தேவைப்படுகின்றன. எனவே, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மே மாதத்தில் நாம் அன்னையை அண்டி வருவோமாக.

ஆனால், வணக்க மாதத்தைக் கொண்டாடும் விதத்தில்தான் மாற்றங்கள் தேவை. முன்பு அன்னையின் திருச்சுரூபத்திற்கு மாலை அணிவித்து, மலர்க்கிரீடம் சூட்டி, சப்பரத்தில் பவனியாக அன்னையை அழைத்து வந்தோம். இன்றோ, சப்பரம், பவனி, மலர் மாலைகள், மெழுகுதிரிகள் போன்றவற்றிற்குத் தரும் அழுத்தத்தைக் குறைத்து, இன்றைய சூழலுக்கேற்ப வணக்க மாதத்தின் கொண்டாட்டத்தைத் தகவமைக்கவேண்டும். குறிப்பாக, மூன்று முதன்மையான நோக்கங்களுக்காக அன்னையிடம் மன்றாட இந்த வணக்க மாதம் உதவவேண்டும்...

1. பெருந்தொற்று, நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட மன்றாடுவோம். நமது உலகம்கோவிட் 19’ நோயின் பேரச்சத்திலிருந்து விடுபட்டு, ஆசுவாசப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும், இன்னும் குறிப்பாக, தமிழ்நாட்டிலும் இந்தக் கொள்ளை நோய் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்து, நம்மைக் குலைநடுங்க வைத்து விட்டது. இனிமேல் இப்படிப்பட்ட ஒரு பெருந்தொற்று நம் உலகைத் தாக்காதபடி நாம் மன்றாட வேண்டும். அன்னையே நம் மிகப்பெரிய பரிந்துரையாளர். எனவே, பெருந்தொற்று நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்பட அன்னையை நோக்கி மன்றாடுவோம்.

குறிப்பேடு முதல் நூலில் தாவீது அரசர் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட தன் மக்களுக்காகக் கடவுளிடம் பரிந்து மன்றாடும் ஒரு காட்சியை 21-ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம். ஆண்டவர் இஸ்ரயேலின்மேல் கொள்ளை நோயை அனுப்பினார். அதனால், இஸ்ரயேலருள் எழுபதினாயிரம் பேர் மாண்டனர் (1குறி 21:14). அப்போது தாவீதும் பெரியோர்களும் சாக்கு உடை உடுத்தி, முகம் குப்புற விழுந்து மன்றாடினர். தாவீது கடவுளிடம், “என் கடவுளாகிய ஆண்டவரே, உமது கை என்மேலும்என் தந்தையின் வீட்டாரின் மேலும் இருக்கட்டும்; கொள்ளை நோய் மக்களிடமிருந்து விலகட்டும் (1குறி 21: 17) என்று வேண்டினார்.

தாவீது கடவுளுக்கு உகந்தவராய் இருந்தாலும், பாவங்கள் பல செய்தவர். அன்னை மரியாவோ பிறப்பு நிலைப் பாவமின்றிப் பிறந்தவர். பாவமே அறியாதவர். எனவே, அவர் நமக்காகப் பரிந்து மன்றாடும்போது நிச்சயம் கொள்ளை நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம். எனவே, மிகவும் இரக்கமுள்ள நம் தாயை நோக்கி நாம் உருக்கமாக மன்றாடுவோம். அப்போது திருப்பாடல் 91-இல் ஆண்டவர் வாக்களித்தபடி, “இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும், நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர் (திபா 91:6) என்னும் வாக்குறுதிப்படி நாம் கொரோனா போன்ற பெருந்தொற்றுகளிலிருந்து காக்கப்படுவோம்.

2. அமைதியின் அரசியிடம் நம் உலகையும், வீட்டையும் ஒப்புக்கொடுப்போம். அன்னை மரியாவின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றுஅமைதியின் அரசி.’ அவர் உலக நாடுகளிடையே அமைதி நிலவச் செய்கிறார். குடும்பங்களிலும் அமைதியைப் பெற்றுத் தருகிறார். எனவேதான், அன்னை மரியாவிடம் நாட்டையும் குடும்பத்தையும் ஒப்புக்கொடுத்து நாம் மன்றாட வேண்டும். குறிப்பாக, இஸ்ரயேல் - பாலஸ்தீனப் போர், இஸ்ரயேல் - ஈரான் போர், உக்ரைன் - இரஷ்யப் போர் போன்றவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு அமைதி நிலவ வேண்டுமென்று உலக நாடுகளைத் திருத்தந்தையோடு இணைந்து மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுத்து உலக அமைதிக்காக அன்னையிடம் மன்றாடுவோமாக!

அமைதி என்பது உயிர்த்த இயேசு நமக்கு வாக்களித்த கொடைகளுள் ஒன்று. இயேசுவே அமைதியின் அரசர். “அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார் (எபே 2:14) என்பது இயேசுவைப் புகழ்ந்து பவுலடியார் எழுதிய இறைப்புகழ்ச்சி.

பிளவுபட்ட நாடுகளை ஒன்றுபடுத்துபவர் இயேசுவே. நம் தாய் நமக்காகப் பரிந்து பேசும்போது, இயேசு இந்த அமைதியை நமக்கு வழங்குவார். எனவே, “இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள் (1திமொ 2:2) என்ற பவுலடியாரின் பரிந்துரையை ஏற்று, நாம் அமைதியின் அரசியான அன்னை மரியாவிடம் மன்றாடுவோமாக. அப்போது நாடுகளும், நம் உலகமும் அமைதி என்னும் கொடையைப் பெற்றுக்கொள்வோம்.

3. குடும்ப ஒற்றுமைக்காக மன்றாடுவோம். இன்று நம் குடும்பங்கள் சந்திக்கும் பல சிக்கல்களுக்கு ஒரு காரணம், குடும்பங்களில் இறைவேண்டல் இல்லை என்பதே. முன்பெல்லாம் இரவு நேரங்களில் குடும்பமாக இறைவேண்டல் செய்த பின்னரே உணவு உண்ணும் பழக்கம் இருந்தது. இன்றோ, வேலை, தொலைக்காட்சி, பொழுதுபோக்கு, நண்பர்கள் எனப் பல காரணிகளால் குடும்ப இறைவேண்டல் மறைந்துவிட்டது. மரியன்னையின் வணக்க மாதம் மீண்டும் நம் இல்லங்களில் குடும்ப இறைவேண்டலைத் தொடங்க உதவட்டும். “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன் (எபே 3:14-15) என்னும் பவுலடியாரின் மன்றாட்டு நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையட்டும்.

இறைத்தந்தையின் ஆசியே நம் குடும்பங்களை ஒற்றுமையோடு வாழச் செய்கிறது. எனவே, இல்லங்களில் நாம் மண்டியிட்டு மன்றாடும் பழக்கத்தை மீண்டும் தொடரவேண்டும். “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம் (யோசு 24:15) என்று சூளுரைத்த யோசுவாவைப் போல, ஒவ்வொரு குடும்பத் தலைவரும் குடும்ப இறைவேண்டல் வழியாக ஆண்டவருக்கு ஊழியம் செய்வார்களாக.

மே மாதம் முழுவதும் குடும்பமாக இணைந்து இறைவேண்டல் செய்வது, அன்னையின் பரிந்துரையால் ஆசிகளை நமக்குப் பெற்றுத் தரும். கானாவூர் திருமணத்தில் பரிந்துரைத்ததுபோல, குடும்பமாய் இறைவேண்டல் செய்யும் அனைவருக்காகவும் நம் தாய் பரிந்து மன்றாடுவார். நமது மாதா வணக்கம் மேற்கண்ட மூன்று இலக்குகளையும் முன்வைத்து நடக்கட்டும். அன்னையின் மதிப்பீடுகளை வாழ்வாக்கும் நாள்களாக மாறட்டும்.