news-details
சிறப்புக்கட்டுரை
தமிழ்நாடு ஆயர் பேரவையின் தேர்தல் நிலைப்பாடு ஏற்புடையதா? ஓர் அலசல்

அமெரிக்க அதிபர் டிரம்ப், திருத்தந்தை லியோ அவர்களின் போர் எதிர்ப்பைக் கண்டித்துக் குரல் எழுப்பியபோது, இறை இயேசுவின் வேடமிட்டு நோயுற்றவருக்குக் கருணைக் கரம் காட்டுவது போன்று படம் ஒன்றை வெளியிட்டு எதிர்ப்பைத் தெரிவித்த காட்சியை உலகம் பார்த்தது.

திருத்தந்தை என்னதான் கூறினார்?

அமைதிக்காக வாழ்வோர் ஆசிர்வதிக்கப்பட்டோர்; மத நம்பிக்கைகளைத் தன்னலத்திற்காகச் சுரண்டுவோர், தன் இராணுவப் பலத்தைப் பெருக்கிடவும், பொருளாதார மற்றும் அரசியல் இலாபம் கருதியும் புனிதங்களை இருட்டிற்கும் அழுக்கிற்கும் இழுத்துச் செல்வோருக்கும் ஐயோ கேடு!”

இன்றைய உலகு மிகச்சிறிய எண்ணிக்கையிலான கொடுங்கோலர்களால் ஆளப்பட்டு வருகிறது; இவ்வாட்சி முறையையும் நம் சகோதர-சகோதரிகளால் அங்கீகரிக்கப்படுவதோடு ஆதரிக்கப்பெறுதலும் கண்கூடு.”

கிறிஸ்து இயேசு அமைதியின் அரசர்; அவர் போரை மறுக்கிறார்; இக்கடவுளைக் காட்டி எவரும் போரை நியாயப்படுத்தக் கூடாது. இறைவன் போரை முன்னெடுக்கும் எவர் குரலுக்கும் செவிசாய்க்க மாட்டார்.”

டிரம்பின் எதிர்வினை

அமெரிக்க அதிபரை விமர்சிக்கும் திருத்தந்தை நமக்குத் தேவையில்லை; இத்திருத்தந்தை லியோ குற்றங்களைச் சாடுவதில் பலமற்றவர்; வெளிநாட்டுக் கொள்கையில் பயங்கரமானவர்என்று எதிர்வினையாற்றிய அமெரிக்க அதிபருக்குத் திருத்தந்தை லியோ அளித்த பதில் என்ன தெரியுமா? “இன்றைய திருத்தந்தை அமெரிக்கராகப் பிறந்திருக்கலாம்; ஆனால், இவர் அமெரிக்காவில் பிறந்து உலகிற்காக வாழ்கின்றவர் (Not an American Pope; But a pope from America for the world).

தி இந்துஆங்கில நாளிதழ் இரண்டில் திருத்தந்தையின் போர் பற்றிய எதிர்வினைகள் பற்றி வெளியான செய்திகளை இங்கே தொகுத்தமைக்கு என்ன காரணம்? திருத்தந்தையின் இக்குமுறல் சரியா? தவறா?

உலக அமைதிக்கு நாசம் விளைவித்து வருகின்ற அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுச் சதியைக் கண்டிக்கும் திறனற்றுப்போன நிலையை, உலக நாடுகள் பல கண்டும் காணாதிருக்கும் நிலை ஒரு பக்கம்; அல்லது துணை போகும் நிலை மறுபக்கம். இந்நிலையில் திருத்தந்தை ஒருவர், இறைவேண்டலோடு செபிப்பதை மட்டும் செய்துவிட்டு, மௌனியாய் வாழ்தல் சரி தாமோ? போர்வெறியில் உலகைத் தன் ஆளுமையின்கீழ் கொணரவேண்டி, பல்லாயிரக்கணக்கிலான மக்களின் குருதியில் தம்மை நனைத்து, வெற்றிப் புன்னகையாளர்களைக் கண்டுகொள்வது எப்படி? கண்டுகொள்ள மறுத்து மௌனிப்பதும், போர் வெறிபிடித்த இவர்களை ஆதரிப்பது என்பதும் ஒன்றுதானே!

பகை வளர்க்கும் இச்சுயநலத்தின் தலைவர்களைக் கண்டுகொள்ளாமை மிகப்பெரிய பாவமில்லையா? திருத்தந்தை அவர்களின் இத்தலையீட்டை ஏற்போமானால், தமிழ்நாடு தேர்தலில் ஆயர்களின் நிலைப்பாட்டை ஏற்க வேண்டாமா? தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களின்போது, தமிழ்நாட்டுத் திரு அவை ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியமைக்குக் காரணமும் வரலாறும் உண்டு. தென்குமரியில் கிளைத்த அரசியல் நோக்காட்டினால் எண்பதுகளில் நடத்தப்பட்ட வகுப்புவாதப் பிரச்சாரம்; இதனிமித்தம் திட்டமிட்டு நடத்தப்பட்ட மண்டைக்காடு மதக்கலவரம்; மதக்கலவரம் நிகழ்த்தப்பெறும்போதெல்லாம் அதன் விளைவாக உருவாகும் மதரீதியான ஓர்மை (Polarise) பிரிவினை; சமூக நல்லிணக்கமின்மை... எனும் விளைவுகளைக் கண்டறிந்த கிறித்தவத் தலைமை குறிப்பாக, அன்றைய கோட்டாறு ஆயர் மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி அவர்கள் மதுரை உயர்மறைமாவட்டப் பேராயராகப் பொறுப்பேற்றபின், தமிழ்நாடு ஆயர் பேரவை, நடைபெறும் தேர்தல்களை வெறுமனே கடந்து போகும் தேர்தல்களாகக் கருதிவிடக்கூடாது என்ற நோக்கில் சில நிலைப்பாடுகளை மேற்கொள்ள முனைந்தது.

பேராயர் அவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் நமக்கென்று ஒரு நிலைப்பாடுவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டதோடு, மதச்சிறுபான்மையினரை ஒருங்கிணைத்துச் சிறுபான்மையினர் பேரவையை உருவாக்கினார். பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடந்த கிறித்தவச் சபைகளை ஒருங்கிணைத்து, கிறித்தவர் ஐக்கியப் பேரவையை உருவாக்கினார். தமிழ்நாட்டுக் கிறித்தவர்களை மதுரையில் ஒன்றுகூட்டி, கிறித்தவர் மாநாடு ஒன்று நடத்தினார். மதுரை பேராயர் முன்னெடுத்த இம்முயற்சிகள்தாம் அம்மையார் செயலலிதா அறிமுகப்படுத்திய மதமாற்றுத் தடைச்சட்டத்தை எதிர்க்கவும் வெற்றி பெறவும் காரணமாயிற்று. இந்தியாவில் வேகமெடுத்து வளர்ந்து வந்த மதவாத அரசியலுக்கு எதிர்ப்பைக் காட்டவும், இந்த எதிர்ப்பை மதச்சிறுபான்மையினரின் ஒருங்கிணைப்பு மூலம் எடுத்துக்காட்டவும் முனைந்த வேளை, தேர்தல் மூலம் சில நிலைப்பாடுகளை எடுத்து, மதச்சிறுபான்மையினரை வழிநடத்தும் கடமையைத் திரு அவை உணர்ந்தது.

அரசியலாக்கத் தேவை

கிறித்தவர்கள் அரசியலாக்கப்பெறாத ஒரு பக்த கூட்டமாக இருந்தமையால், ‘ஆயர் - மந்தைகள்என்ற கருத்து வலுப்பெற்றிருந்த நிலையில், கிறித்தவத் தலைமையை எப்போதும் போற்றி வந்த மக்களைத் தேர்தல் நேரத்தில் நெறிப்படுத்தும் கடமையை தமிழ்நாடு ஆயர் பேரவை உணர்ந்தது. ஆனால், எவ்விடத்தும் கிறித்தவ மதச்சிறுபான்மையினரை ஓர் அரசியல் கட்சியாக மாற்றவேண்டும் என்று எவரும் கருதவில்லை. வகுப்புவாதம் அல்லது மதவாதம் எந்த மதவடிவில் உருவானாலும், அதுவும் மதவாதமே என்பதில் திரு அவையின் தலைவர்கள் தெளிவாக இருந்தனர். கிறித்தவருக்கென்று ஒரு கட்சி உருவானால், அது மதவாதக் கட்சியாகவே இருக்கும் என்பதால்தான் கிறித்தவச் சிறுபான்மையினரை ஒருங்கிணைத்து, ‘கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம்உருவாக்கப்பட்டது.

இத்தேர்தலில் தமிழ்நாடு ஆயர் பேரவையின் தேர்தல் நிலைப்பாடு, கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கத்துடன் இணைந்து எடுக்கப்பட்டதே. இதேவேளை, தமிழ்நாடு ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பணிக்குழுவும், பொதுநிலையினர் உருவாக்கப் பணியில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்தது. குறிப்பாக, இரண்டாம் வத்திக்கான் சங்கம் பற்றிய பல அமர்வுகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டன. திரு அவை தன் எல்லை தாண்டி, சமூகத்துள் தலையீடு செய்யவேண்டுவதன் தேவையை எடுத்துத் தரும் பணி நிறையவே நடந்தது.

திரு அவையின் முன்முயற்சிகள் ஆங்காங்கே நிறையவே இருந்தாலும், மக்கள் முழுமையாக அரசியலாக்கப்படுத்தப்பட்டார்கள் என்று கூறிவிட முடியாது. நாம் நம் திரு அவை மூலம் இன்றைய மதவாதத் தாக்கத்தை மக்களுக்குத் தொடர்ந்து கூறினாலும், கூற மறந்தாலும் இன்றைய ஊடகப் பெருக்கத்தில் மக்கள் அறியாமல் இல்லை என்பதுதான் உண்மை.

புதிதாய் எழுந்த பிரச்சினை என்ன?

இன்றைய தமிழ்நாடு தேர்தலின்போது, தமிழ்நாடு ஆயர்கள் ஒரு வழிகாட்டுத் திசையைக் காட்டியபோது, ‘ஏன் இந்தத் தலையீடு?’ என்று கிறித்தவர் மத்தியில் கேள்வி எழுந்ததைப் பார்க்க முடிந்தது. பொதுநிலையினர் வளர்ச்சியில் தொடர்ந்து ஈடுபாடு காட்டிவரும் இறையியலாளரும் இவர்கள் கூட்டத்தில் உள்ளனர். புதிய அரசியல் வரவான நடிகரின் ஆதரவாளர் பலர் அருள்பணியாளர்களை மிரட்டியது கண்கூடு. எப்போதுமே திரு அவையின் பணிகளை, அருள்பணியாளர்களை விமர்சிப்பதாலேயே புரட்சியாளர் என்று காட்டிக்கொள்ளும் சிலர், ஊடகவழி தமக்கு இருக்கும் வெளியைப் பயன்படுத்திக் கொச்சைப்படுத்தியோரும் உண்டு.

திரு அவையின் அருள்பணியாளர் பலரும் இதே நிலைப்பாடு கொண்டுள்ளதாக அறிகிறோம். திரு அவையைச் சார்ந்த குருமட மாணவர்கள், துறவியர் பலரும் ஆயர் பேரவையின் அறிக்கையை, நிலைப்பாட்டை ஏற்க மறுப்பதோடு, விமர்சனமும் செய்கின்றனர்.

காலத்தின் அறிகுறியை அறிவோம்

இந்திய நாட்டின் பன்முகத்தன்மை, சமயச்சார்பின்மை, இவை காக்க உருவான அரசமைப்புச் சட்டம் மிகக் கேவலமாகப் பறிக்கப்பட்டு வரும் நிலை கண்டு கவலைகொள்ள வேண்டிய நிலை.

‘¹நாம், ‘அவர்கள்என்று சமூகத்தை மதரீதியாகப் பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேட முயன்றுவரும் மதப்பெரும்பான்மை வாதிகளின் கட்டுக்கடங்காத் தீவிரப்போக்கு ஒருபுறம்.

மதச்சிறுபான்மையினர் பாதுகாப்பு நாளும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, நாளும் அவர்தம் வழிபாட்டு உரிமை, வழிபாட்டுத் தலங்கள், அவர்தம் நிறுவனங்கள் கொச்சைப்படுத்தப்பெறும் நிலை; அழிக்கப்பெறும் நிலை.

இசுலாமியரை, அரசியல் ரீதியாக ஓரளவு ஒழித்துக்கட்டிய நிலையில், இந்நாட்டில் இன்னும் 2.3 என்ற விழுக்காட்டைத் தாண்டாத நிலையிலும், கிறித்தவம் மீதான தாக்குதல் தொடரும் நிலை.

மதப்பாசிசம் கட்டுக்கடங்கா நிலையில் வளர்ந்து விட்ட நிலையிலும், இன்னும் இந்நாட்டில் இந்த நாசக்காரச் சக்திகளின் போக்கை அம்பலப்படுத்திவரும் அறிவுசீவிகள், மனித உரிமை காப்போர், சமயச்சார்பற்ற இடதுசாரி அமைப்பினர் பலர் நமக்கு நம்பிக்கை தந்துகொண்டுதான் இருக்கின்றனர். இவர்களின் தலையீடுகள்தாம் கிறித்தவச் சிறுபான்மையினருக்கு நம்பிக்கை தரும் மருந்தாயுள்ளது என்பதைப் புரிந்துகொள்வோம்.

கிறித்தவம் ஒரு குடிமைச் சமூகமே

கிறித்தவம் உலகில் செயல்படுவது, உலகத்திற்காகச் செயல்படுவது. மானுடரின் முழுவிடுதலையே இதன் முதன்மை நோக்கம். இம்முழுமையில் ஆன்மிகம் மட்டும் உள்ளடக்கமல்ல; சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார விடுதலையும்  உள்ளன. எனவேதான் ஆலயங்களை எழுப்பிய திரு அவை, அருகே பள்ளிக்கூடங்களையும் கட்டியது. ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு தருதல் வேண்டி மருத்துவப் பணிகள், சமூக நிறுவனங்கள், வளர்ச்சிப் பணிகள் எனக் கண்ணுக்குத் தெரிகின்ற (Visible) அளவுக்கான பணித்தளங்களை ஏற்படுத்தியது. இன்றைய மதவாதக் கட்சி இப்பணிகளை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்துகின்றது? இந்திய அரசமைப்புச் சட்டம் 25 முதல் 30 வரை தரப்பட்ட உரிமைகள் எப்படியெல்லாம் மீறப்படுகின்றன?

இந்தியக் கிறித்தவத்தை இந்நாட்டின் மூன்று எதிரிகளுள் மிக முக்கியமான எதிரியாகக் கோல்வால்க்கர் கருதுகிறார். திரு அவை உருவாக்கிய சமூக நிறுவனங்கள் தாக்கப்பெறுகின்றபோது, மக்களுக்கான வளர்ச்சிப் பணிகள் தடைசெய்யப்படுகின்றபோது, பாதிப்பு திரு அவைக்கல்ல! யாருக்காக இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டனவோ, அவர்களைச் சென்றடையவிடாது தடுக்கின்ற சூழ்ச்சியே இது என்பதை மக்களுக்குக் கூறவேண்டிய கடமை திரு அவைக்கு உண்டு

திரு அவை மக்களுக்கான பணிகளை முன்னெடுத்திருப்பது உண்மையானால், இப்பணிகளின் பயன், உரிய மக்களைச் சென்றடையவிடாமல் தடுக்கின்ற சக்திகளின் சதி அரசியலை மக்களிடம் கொண்டு செல்வது திரு அவை எனும் குடிமைச் சமூகத்தின் கடமையல்லவா! திரு அவையின் வழிபாட்டுரிமை, அறிவிக்கும் உரிமை, மத உரிமைகள் தாறுமாறாக மீறப்பட்டு வரும் நிலையில், ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அரசியலை முன்னெடுத்து, பிற மதச்சுதந்திரத்தை நசுக்கும் சக்திகளை மக்களிடம் அடையாளப்படுத்தும் உரிமை கிறித்தவத்திற்கும் கிறித்தவத் தலைமைக்கும் உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது.

சனநாயகம் குடிமக்களுக்கு அளித்துள்ள தெரிவு செய்யும் உரிமை உன்னதமானது; இது உரிமை! கருணையல்ல. சனநாயகம் அளித்துள்ள இவ்வுரிமை குடிமக்கள்மீது சனநாயகம் அளித்துள்ள மிகப்பெரிய நம்பிக்கை (Faith) ஆகும்.

குடிமக்கள் குடியுரிமை பெற்றவர்கள். சுதந்திரம், உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பன இவர்தம் ஆயுதங்கள். குடிமக்கள் சமமானவர்கள். இவர்களது தெரிவு செய்யும் உரிமைகளில் வாக்களிக்கவும், விரும்பியவரைத் தெரிவு செய்யும் உரிமை மட்டுமல்ல; குடிமக்கள் விரும்பும் மதத்தைத் தெரிவு செய்யும் உரிமையும் உண்டு. குடிமக்களால் தெரிவு செய்யப்பட்ட இம்மதம் சார்ந்தோரில் நாம் மதச்சிறுபான்மையினர்; ஆனால், சம உரிமை பெற்ற குடிமக்கள்.

இக்குடிமக்களின் ஆற்றலை வளர்த்தெடுக்கும் கடமையும் பொறுப்பும் கிறித்தவம் எனும் குடிமைச் சமூகத்திற்கு உண்டு. “கிறித்தவம் சார்ந்த குடிமக்கள், சனநாயகம் தந்த தேர்தல் எனும் கவசத்தை எப்படி முறையாகப் பயன்படுத்தவேண்டும்?” என்ற நெறியைக் காட்டிடும் கடமை இருப்பதால், சரியான கட்டமைப்பும் இலக்கும் (Mission) கொண்ட திரு அவையின் ஆயர்கள், தங்கள் கடமையைச் சரியாகவே செய்துள்ளனர்.

தேர்தல் வெற்றிக்காக மட்டும் முழந்தாளிடுவோரை அடையாளம் காட்ட இவர்களைத் தவிர வேறு யாருக்குத் தகுதியும் உரிமையும் இருக்கிறது?

திசை அறியாத கூட்டத்தின் அரசியலை முன்னெடுக்கும் ஒரு வெற்றுக் கூட்டத்தில் திரு அவை சார்ந்த  இளையோர் நிறையவே உள்ளனர். இவர்களை, தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழு கண்டுகொள்வது காலத்தின் கட்டாயம்.