news-details
சிறப்புக்கட்டுரை
கூண்டுக்கிளி (வலையும் வாழ்வும் – 43)

அந்தி சாயும் பொழுதில் வெண்மேகத்திற்குள் ஒளிந்து கொள்ளும் சிவப்பேறிய கதிரவன் போலப் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது சாந்தா பாட்டியின் பட்டையடிக்கப்பட்டிருந்த நெற்றியில் சிறிது கலைந்திருக்கும் சிவப்புநிற குங்குமப் பொட்டைப் பார்க்கும்போது.

சாந்தா பாட்டி படிப்பறிவில்லாதவள். அவளுக்கு ஊர் சென்னை-கரிமேடு குப்பம் என்றாலும் அவளின் பேச்சுத்திறனும் சாதுரியமான பதிலும் பலருக்கும் வியப்பாகவே இருக்கும். ‘பாட்டி நீயெல்லாம் அமெரிக்காவில் பிறக்கவேண்டிய ஆளாக்கும்; தெரியாம இங்க வந்து பிறந்திட்டியேஎன்று எட்டாம் வகுப்பு படிக்கும் சாந்தா பாட்டியின் பேரன் சிவக்குமார் எப்போதும் அவளைக் கிண்டலடிப்பான்.

சாந்தா பாட்டி எப்போதும் வீட்டிலிருப்பதில்லை. காலையிலேயே எழுந்து விபூதி, குங்குமம் சாத்திக்கொண்டு சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் மஞ்சப் பையையும் கூண்டுக்கிளியையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவாள்.

கிளி ஜோசியம் பார்ப்பது சாந்தா பாட்டி குடும்பத்தின் பாரம்பரியக் குடும்பத்தொழில். “டேய், நான் செத்துப்போயிட்டேனா நம்ம பாரம்பரியமும் செத்துப் போயிடும். நீயாவது கொஞ்சம் இத கத்துக்கடேஎன்று எப்போதும் பேரன் சிவக்குமாரிடம் சொல்லிக் கொண்டே இருப்பாள் சாந்தா.

சிவக்குமார் விளையாட்டுப் பையன். அவனுக்குத் தெரு கிரிக்கெட்டும், வீதிக்கடைப் பரோட்டாவும்தான் முக்கியம். குறும்புத்தனமாக எப்போதும் சாந்தா பாட்டியை வம்பிழுத்துக்கொண்டே இருப்பான்.

சிவக்குமாரைக் குற்றம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ‘காலம் கெட்டுப்போச்சு; அதான் நீயும் கெட்டுக்கிடக்கஎன்று சாந்தா பாட்டி பேரனை வையாது, அப்படியே கடந்துபோய்விடுவாள்.

சென்னை மெரினா கடற்கரையோரம் வரிசையாக அமர்ந்து கூறுவைத்து மீன் விற்கும் பெண்களைப்போல கூண்டுக்கிளி வைத்துக்கொண்டு எதிர்காலத்தை விற்றுக்கொண்டிருந்த சோசியக்காரர்களோடு சேர்ந்து எதிர்காலத்தை விற்றுக்கொண்டிருந்தாள் சாந்தா பாட்டி.

அன்று என்னவோ வழக்கம்போலக் கூட்டம் கூடவில்லை. மெரினா பீச் அலைகளும் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தன. எதிர்காலம் பற்றிய வியாபாரம் போணியாகவில்லை. கூண்டுக்கிளிகளும் தோகையினை விரித்து வைத்துக்கொண்டு கூந்தல் காய்ந்துகொண்டிருந்தன.

வெள்ளைக்காரன் ஒருவன் கூண்டுக்கிளியையும், கூன்விழுந்த பாட்டிகளையும் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டு சாந்தா பாட்டிக்கு முன்பாக வந்து உட்கார்ந்து கொண்டான்.

வாட் இஸ் திஸ்?” என்று கேட்டான்.

ஜோசியம்என்றாள்.

ஜீசஸ்என்றான் அவன்.

ஜீசஸ் நோ... ஜோசியம்என்றாள் சாந்தா பாட்டி.

ஏதேதோ கையிலும் வாயிலும் சொல்லிப் பார்த்தாள் பாட்டி. அந்த வெள்ளைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு அலையில் அடித்துவரப்பட்ட ஒற்றைக்கால் செருப்புபோல பேரன் சிவக்குமார் அங்கு வந்து சேர்ந்தான். விடுமுறையென்பதால் பாட்டிக்கு மதிய உணவு கொண்டு வந்திருந்தான்சிவக்குமாருக்குத் தெரிந்திருந்த கொஞ்சநஞ்ச இங்கிலீஸ் சாந்தா பாட்டிக்கு உதவியாக இருந்தது. பல நேரக் காத்திருப்பிற்குப் பிறகு கூண்டுக்கிளி முதன்முறையாகத் திருமணமாகி வீட்டைவிட்டு வெளியே வரும் புதுமணப் பெண்ணைப் போல நாணத்தோடு வெளியே வந்தது. அதன் முன் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற அட்டைகளில் ஒன்றை எடுத்து சாந்தா பாட்டியின் பக்கம் வீசி விட்டு, அதே நாணத்தோடும் நளினத்தோடும் கூடு புகுந்தது.

பெரும் ஆவலோடு வெள்ளைக்காரன் விழிப் பிதுங்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். அட்டைக்குள் இருக்கும் படத்தை சாந்தா பாட்டி இலாவகமாகக் குங்குமச் சிமிழைத் திறப்பதுபோலத் திறந்துகாட்டினாள். உள்ளே ஒன்றுமில்லாமல் வெறுமையாக இருந்தது. சாந்தா பாட்டி அட்டையைக் குலுக்கி குலுக்கிப் பார்த்தாள். ஆனாலும், அவள் எதிர்பார்த்த படம் அந்த அட்டை கூட்டிற்குள் இல்லை.

சாந்தா பாட்டியால் ஓரளவிற்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது. அருகில் அமர்ந்திருந்த தன் பேரன் சிவக்குமாரை வெறித்துப் பார்த்தாள். அவன் ஒன்றும் தெரியாததுபோலக் குறும்புத்தனமாக அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சாந்தா பாட்டியின் சிவப்புப் பொட்டு வியர்வையில் நனைந்து கலைந்திருந்தது. அவளுடைய பார்வையிலும் கொஞ்சம் கூன் விழுந்திருந்தது. வெள்ளைக்காரனுக்கு எதிர்காலத்தைச் சொல்ல விரும்பியவள் வெற்று அட்டையைக் கண்டு திகைத்துப்போய் இருந்தாள். ஆனாலும், ஏதாவது சொல்லவேண்டும் என்பது சோதிடத்தின் சம்பிரதாயமாம்!

ஒரு பெரும் மூச்சை இழுத்துவிட்ட சாந்தா பாட்டி வெள்ளைக்காரனின் பழுப்பு நிறக் கண்களை உற்றுப்பார்த்துச் சொன்னாள்:

உங்க கலரைப்போல உங்க மனசும் வெள்ள சாமி. வெற்று அட்டை உங்க வாழ்க்கைய சொல்லுது சாமி. உங்களுக்கென்று யாரும் இல்ல சாமி. நீங்க தனிக்கட்ட சாமி. கொஞ்ச காலம் நீங்க ஒவ்வோர் இடமா சுத்திக்கிட்டே இருப்பீங்க சாமி. இது கொஞ்ச காலம்தான்; அதுக்கப்புறம் நீங்க மகாராஜனா வாழுவீங்கஎன்று சொல்லச் சொல்ல பேரன் சிவக்குமார் தனக்குத் தெரிந்த இங்கிலீசில் வெள்ளைக்காரனுக்கு மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தான்

வெள்ளைக்காரன் மிரண்டு போனான். ‘எப்படி இந்தப் பாட்டிக்கு இதெல்லாம் தெரிந்தது?’ என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தன் பர்சிலிருந்து ஐந்நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்துக்கொடுத்துவிட்டு மனநிறைவாகச் சென்றான் அந்த வெள்ளைக்காரன்.

சாந்தா பாட்டி தனக்குக் கிடைத்த ஐந்நூறு ரூபாயைக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். தன் பேரனைஅட நாயே! எத்தனை வாட்டி சொல்லிருக்கேன். அந்த இயேசு நாதர் படத்தை அந்த அட்டையில இருந்து எடுக்காதணுஎன்று சொல்லிக் கொண்டே தன் கையில் இருந்த கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஓர் அடி வைத்தாள் சாந்தா பாட்டி. வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பாட்டியைத் திட்டிக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடி மறைந்தான் சிவக்குமார்.

கிறிஸ்மசுக்காக அந்த இயேசுநாதர் படத்திற்குப் பின்னால்ஹாப்பி கிறிஸ்மஸ்என்று கலர் பென்சிலால் எழுதி தன் வகுப்புத் தோழன் பிரான்சிஸ்சுக்கு கொடுத்திருந்தது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

இந்தியாவில் சுமார் 83% மக்கள் நல்ல நேரத்தைப் பார்த்த பிறகே ஒரு நல்ல காரியத்தைச் செய்கின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த நல்ல நேரம் பார்க்கும் முறை அல்லது சோதிடம் பார்க்கும் முறை மாறிக்கொண்டே வருகின்றது. அதன் அடிப்படையில் இன்றைய வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் இணைய சோதிடமும் சமூக ஊடகச் சோதிடர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். ‘Global Astrology Market Report - 2023’ என்னும் ஆய்வின்படி 2021 - ஆம் ஆண்டு வரையில் இணையவழி சோதிடம் 12.8 மில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியுள்ளது என்றும், இதுவே 2031-ஆம் ஆண்டிற்குள் 22.8 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டும் என்கிறது.

அஸ்ட்றோ டாக், அஸ்ட்டோ குரு, அஸ்ட்ரோ யோகி, அஸ்ட்றோ சேஜ், இன்ஸ்டா அஸ்ட்றோ போன்ற சமூக ஊடகப் பக்கங்கள் இன்று இளையோரிடம் கூட மிகப் பிரபலமாக உள்ளன. டிஜிட்டல் உலகில் சோதிடம் ஒரு வணிகமாக மாற்றப்படுவதால் பல்வேறு மோசடிகள் நிகழ்வதோடு, பயனர்களின் தனிப்பட்ட தரவுகளும் களவாடப்படுகின்றன. பயனர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சோதிடச் செயலிகளின் நவீன வடிவமைப்பு இளையோரை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் வெகுவாக ஈர்க்கின்றன.

செயற்கை நுண்ணறிவு மற்றும் அல்காரிதப் புரிதல்களோடு குறிப்பிட்ட பயனர்களுக்கு ஏற்ப வழங்கப்படும் அறிவுரைகளும், எதிர்கால முன்னறிவிப்புகளும் தொழில்நுட்ப உலகில் வியப்பை ஏற்படுத்தினாலும், சோதிடச் சேவைகளின் உண்மைத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படுவது அவசியம்.