news-details
ஞாயிறு மறையுரை
மே 03, 2026 பாஸ்கா காலத்தின் 5-ஆம் ஞாயிறு - திப 6:1-7; 1பேது 2:4-9; யோவா 14:1-12 (“உள்ளம் கலங்காதே... உன் நிழலாய் நான் வருகிறேன்”)

நாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போதோ அல்லது வெளியூர் செல்லும்போதோ வீட்டிலுள்ளவர்களிடம், ‘நான் போயிட்டு வரேன்என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ‘போயிட்டு வரேன்என்ற சொல்லில்மீண்டும் வருவேன்என்ற நம்பிக்கையும், உறவின் தொடர்ச்சியும் ஒளிந்திருக்கிறது. ஆங்கிலத்தில்Goodbyeஎன்று கூறும்போது அதற்குள்God be with you (இறைவன் உன்னோடு இருப்பாராக!) என்ற ஆசி கலந்திருக்கிறது. ‘Farewellஎன்ற வார்த்தை பிரிந்து செல்பவர்நலமாக இருக்கவேண்டும்என்ற வாழ்த்தைச் சுமந்து நிற்கிறது. ஆனால், தமிழ் மொழியில் உள்ளபிரியாவிடைஎன்ற சொல் இன்னும் ஆழமானது. ‘உன்னை விட்டு நான் பிரியமாட்டேன், தற்காலிகமாகத்தான் விடைபெறுகிறேன்என்ற உட்பொருளை அது உணர்த்துகிறது. பிரிவு என்பது ஓர் உறவின் முற்றுப்புள்ளி அல்ல; மாறாக, அது ஒரு தொடர்ச்சி. 

இன்று நாம் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்திப் பகுதி இயேசுவின் மிக நீண்ட பிரியாவிடை (யோவா 13:31-) உரையின் தொடக்கப் பகுதியாக அமைகிறது. நம் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் நாம் ஒருபோதும் தனித்து விடப்படவில்லை என்பதை உணரவும், நமது அச்சங்களைக் களைந்து, இயேசுவிடம் முழுமையான நம்பிக்கைகொண்டு வாழவும் அழைக்கப்படுகிறோம்.

இயேசுவின் சீடர்கள் ஒருவிதமான இக்கட்டான மனநிலையோடு மேல்மாடியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர் விரைவில் தங்களை விட்டுச் சென்று விடுவார் என்னும் உணர்வு சீடர்களுக்குப் பெரும் வேதனையையும் கலக்கத்தையும் அளிக்கிறது. 13-ஆம் அதிகாரத்தில் சீடர்களின் கால்களைக் கழுவி, அன்பின் பணிவிடையை ஆழமாகப் பதிவு செய்த இயேசு, பின்னர் தமக்கு நடக்கவிருக்கும் துன்பங்களையும் பிரிவையும் பற்றி விளக்கிக் கூறுகிறார். அது மட்டுமின்றி, “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் (13:21) என்றும், பாறையாகத் தெரிந்த பேதுருவே தம்மைமறுதலிப்பார் (13:38) என்றும் அவர் கூறியபோது, சீடர்களின் உள்ளம் நிலைகுலைந்து போகிறது.

பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்...” (13:3) என்று இயேசு கூறுவதன் வழியாக, ‘தங்களை வழிநடத்தியவருக்கே இந்த நிலையா? நம் எதிர்காலம் என்னவாகும்?’ என்ற பல கேள்விகளும் அச்சங்களும் அவர்களை அலைக்கழிக்கின்றன. இப்படியாக மன உளைச்சலுக்கு உள்ளான தம் சீடர்களைத் திடப்படுத்தவே இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம் (14:1) என்ற நம்பிக்கை சொற்களைக் கூறுகிறார்.

சூழல்கள் நமக்கு எதிராக மாறும்போதுதான் நமது நம்பிக்கை சோதிக்கப்படுகிறது. இருண்ட அறையில் மெழுகுவர்த்தி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் சோதனையில் இறைநம்பிக்கை. “கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் (14:1) என்று அழைப்பு விடுக்கும் இயேசு, சீடர்களுக்கு (நமக்கும்) மூன்று விதமான தீர்வுகளை முன்வைக்கிறார்:

முதலில், ‘தந்தையின் இல்லத்தில் பல உறைவிடங்கள் உள்ளன (14:2) என்று இயேசு கூறும்போது, அது வெறும் கட்டடங்களைக் குறிக்கவில்லை; மாறாக, இறைவனின் எல்லையற்ற பராமரிப்பைக் குறிக்கின்றது. தொடக்ககாலத் திரு அவை தந்தை ஒரிஜன் இதனைகடவுளை நோக்கிய நமது ஆன்மிகப் பயணத்தின் தங்குமிடங்கள்என்று விளக்குகிறார். யோவான் நற்செய்தியில்உறைவிடம்என்பது இயேசுவிற்கும் அவர் சீடர்களுக்கும் இடையே நம்பிக்கையால் உருவாகும் ஒரு நிரந்தர உறவைக் குறிக்கிறது. இது ஒரு தற்காலிகத் தங்குமிடம் அல்ல; மாறாக (14:2) மாறாத அன்பின் இல்லம். “அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்என்று சொல்லியிருப்பேனா?” (14:2) என்று இயேசு வினவுவது, தமது வார்த்தையின் மீதான நம்பகத்தன்மையை ஆணித்தரமாக உறுதிப்படுத்துவதற்காகவே.

இரண்டாவதாக, அச்சத்திலும் குழப்பத்திலும் மூழ்கியிருந்த சீடர்களுக்கு (13:21,38) “வழியும் உண்மையும் வாழ்வும் நானே (14:6) என்ற காலத்தால் அழியாத சொற்களை இயேசு வழங்குகிறார். திகைத்து நின்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும்வழியாகவும், போலித்தனங்களுக்கு மத்தியில் நிலையானஉண்மையாகவும், தந்தையோடு இணைக்கும் உயிரோட்டமானவாழ்வாகவும்அவர் விளங்குகிறார். ஒரு தாயின் கனிவோடு அவர்களின் வருங்காலக் கனவுகளை மீட்டெடுக்கும் இயேசு, தந்தையிடம் அழைத்துச் செல்லும் ஒரே பாலமாகத் தம்மை வெளிப்படுத்துகிறார் (14:3). நம் நெருக்கடியான சூழலில், அவரே நமக்கு வழியாகவும், உண்மையான வாழ்வாகவும் இருந்து நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்.

மூன்றாவதாக, இயேசு தம் சீடர்களிடம் வெறும் தத்துவங்களைப் பேசவில்லை; மாறாக, அவர்களைத் தம்மோடு இணைந்து செயல்பட அழைக்கிறார். “என் வார்த்தையின் பொருட்டு நீங்கள் என்னை நம்பாவிட்டாலும், நான் செய்த செயல்களின் பொருட்டாவது என்னை நம்புங்கள் (14:11) என்று அவர் உருக்கமாகக் கூறுகிறார். ஏனெனில், அந்த நம்பிக்கைதான் சீடர்களை இயேசுவைப் போன்ற செயல்களைச் செய்யத் தூண்டும் வல்லமை கொண்டது. இன்னும் சொல்லப்போனால், இயேசு செய்த அருஞ்செயல்களை விடவும் மேன்மையானவற்றைச் செய்யும் ஆற்றலை அவர் தம் சீடர்களுக்கு வழங்குகிறார்.

இயேசுவின்பெரிய செயல்களைச் செய்வீர்கள்என்ற வாக்குறுதி, அவர் விண்ணேற்றம் அடைந்த பிறகு சீடர்களின் வாழ்வில் எப்படிச் செயலாற்றியது என்பதற்கு இன்றைய முதல் வாசகம் (திப 6:1-7) ஒரு சிறந்த சான்று. சீடர்களின் எண்ணிக்கை பெருகியபோது, கிரேக்க மற்றும் எபிரேய மொழி பேசுவோரிடையே கைம்பெண்களைப் பராமரிப்பதில் பாரபட்சம் எனும் இக்கட்டான சூழல் எழுகிறது. மீண்டும் ஒரு சவாலைச் சந்தித்த திருத்தூதர்கள், இயேசுவின்உள்ளம் கலங்க வேண்டாம்என்ற வார்த்தையை நினைவுகூர்ந்து, தூய ஆவியால் தூண்டப்பட்டு ஏழு திருத்தொண்டர்களைத் தேர்ந்தெடுத்தனர். “யாரும் திக்கற்றவர்களாக விடப்படக் கூடாதுஎன்ற உயரிய நோக்கத்தில், அவர்கள் சமுதாயப் பணியையும் இறைப்பணியையும் நேர்த்தியாக முன்னெடுத்துச் சாதித்தனர்.

திருத்தூதர்கள் முன்னெடுத்த அந்தச் செயல்பாடு, நற்செய்தியில் இயேசு காட்டியவழியும், அவர் வாக்களித்தஉறைவிடமும்வெறும் கற்பனையல்ல, அவை ஒரு புதிய சமூகத்தை உருவாக்கும் வல்லமை கொண்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதனைத்தான் இரண்டாம் வாசகத்தில் புனித பேதுரு, உலகால் தள்ளப்பட்டாலும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டமூலைக்கல்லான (திபா 118:22) இயேசுவின்மீது கட்டப்பட்டஉயிருள்ள கற்கள் நாம்என்கிறார். அந்த மூலைக்கல்லோடு (இயேசுவோடு) நாம் இணையும்போது, தந்தையின் இல்லத்து வாரிசுகளாக, அதாவது, ‘குருத்துவ அரசராகவும், தூய மக்களினமாகவும் (விப 19:6) மாறி, இறைவனுக்கும் மனிதருக்கும் இடையே பாலமாக அமையும்பெரிய செயல்களை (1பேது 2:9) செய்யும் ஆற்றலைப் பெறுகிறோம். இந்தப் புதிய அடையாளம், நம்மை இருளிலிருந்து வியப்புக்குரிய ஒளிக்கு அழைத்துச் செல்வதுடன், நாம் ஒருபோதும் திக்கற்றவர்கள் அல்ல; மாறாக, உலகத்தைப் படைத்த தந்தையின் பிள்ளைகள் என்பதையும் பறைசாற்றுகிறது.

இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் வாழ்வுக்கான சிந்தனைகள்: முதலாவதாக, “உள்ளம் கலங்க வேண்டாம்என்னும் உயரிய அறிவுரையை இயேசு நமக்கு வழங்குகிறார். கவலையும் கலக்கமும் மேலிடும் நமது அன்றாட வாழ்வில், பல நேரங்களில் நம்பிக்கை குறைவினால் கடவுளின் உடனிருப்பை உணரும் ஆற்றலை நாம் இழந்துவிடுகிறோம். ஆயினும், இக்கட்டான எந்தச் சூழலிலும் கடவுள் நம்மைக் கைவிடாமல் கரம்பிடித்துக் காத்து வருகிறார் என்பதே இயேசு இன்று நமக்குத் தரும் மிக வலிமையான உறுதிப்பாடாகும்.

இரண்டாவதாக, “உன்னோடு இருக்கிறேன்என்ற உறுதிமொழி வழியாகப் பிரிவு குறித்த கவலையைத் தாண்டிச் செயல்பட இயேசு அழைக்கிறார். பிரிவு துயரமானதே; எனினும், அது மேலான நன்மையை நோக்கிய இறைத்திட்டமாகும். அவர் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை; மாறாக, ஒரு துணையாளராக, நம் நிழலாய் என்றும் தொடர்கிறார். எனவே, அவரது பணிகளை இம்மண்ணில் தொடர்ந்து ஆற்றுவதன் வழியாக ஒருநாள் அவரோடு நிலையாக இணைந்திருப்போம் என்ற பேரின்ப ஆறுதலைப் பெறுவோம்.

மூன்றாவதாக, இயேசு செய்த செயல்களை அவரில் நம்பிக்கை கொள்வோரும் செய்யமுடியும்; செய்யவும்வேண்டும் என்பதே இயேசுவின் அழைப்பு. அவரைவிடப் பெரிய செயல்களைச் செய்வோம் என்ற வாக்குறுதி நமக்கு உத்வேகம் தருகிறது. மற்றவர்களின் கண்ணீரைத் துடைப்பதும், திக்கற்றவர்களுக்குத் துணையாய் நிற்பதுமே அந்தபெரிய செயல்கள்.’ அவரே வழியாக இருப்பதால் நாம் பாதையைப் பற்றி அஞ்சத் தேவையில்லை, அவரே இலக்காக இருப்பதால் நமது பயணம் அர்த்தமுள்ளதாகிறது.

நிறைவாக, “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்என்ற வார்த்தை இன்று நமக்கான பெரும் ஆறுதல். பிரிவு நம்மை வாட்டலாம், சூழல்கள் நம்மைப் பயமுறுத்தலாம். ஆனால், “உன் நிழலாய் நான் வருவேன்என்று வாக்களித்த ஆண்டவர் இன்றும் நம்மோடு இருக்கிறார். எனவே, நமது உள்ளம் கலங்க வேண்டிய அவசியமில்லை. நாம் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையை ஆழப்படுத்துவோம். அவரே நமது வழி; அவரே நமது உண்மை; அவரே நமது வாழ்வு!