ஆட்சியில் இருப்பவர்கள் அரக்கக் குணம் கொண்டவர்களாக, நியாயமற்றவர்களாக இருந்தால், நீதிநூல்கள், சட்டங்கள், சாத்திரங்கள் கூட தர்மத்தை இழந்து தவறுக்குத் துணை போகும். அதாவது, அதிகாரம் கெட்டவர்கள் கையில் சிக்கினால், புனிதமான அமைப்புகள் கூட பிணம் தின்னும் பேயாக மாறிவிடும் என்பதே நடப்பு. இதை மகாகவி பாரதியார், ‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்றார்.
தன்
மதவாதக் கொள்கையால் ஆட்சி நடத்தும் ஒன்றிய பாசிச பாரதிய சனதா கட்சி, 2024 தேர்தலில் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை
பலம் பெறவில்லை. காரணம், தென்னிந்தியாவில் போதிய தொகுதிகளில் பா.ச.க.
வெற்றி பெறமுடியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் முழுமையாக பா.ச.க.வைப் புறக்கணித்தார்கள். பீகாரின் நிதிஷ்குமார், ஆந்திராவின் சந்திரபாபு தயவில் என்.டி.ஏ. கூட்டணி
ஆட்சி நடக்கிறது.
என்.டி.ஏ. என்ற
கூட்டணியில் 293 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலிதளம் என்ற 16 நடுநிலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூழலுக்கு ஏற்ப வாக்களிப்பார்கள். ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் 234 பேர் வலுவாக இன்றும் களம் காண்கிறார்கள். அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்றால், மூன்றில் இரு பங்கு வாக்குவேண்டும். அதைப் பெற பா.ச.க.
எல்லாத் தில்லுமுல்லுகளையும் செய்யும். இரவில் திருடர்களைப் போலச் சட்டங்களை நிறைவேற்றுவார்கள்.
ஐந்து
மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்த நேரம், 131-வது அரசமைப்புத்
திருத்தச் சட்டம் கொணர சிறப்பு மக்களவை அமர்வைக் கூட்டியது. 70 தமிழ்நாடு
மற்றும் மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தனர். அவர்கள் முழுவதும் அவைக்கு வரமாட்டார்கள்; மம்தாவும் ஸ்டாலினும் தேர்தலில் கவனமாக இருப்பார்கள் எனத் தப்புக்கணக்குப் போட்டார்கள். தொகுதி மறுவரையறையை உள்ளடக்கிய 33% மகளிர்
இடஒதுக்கீட்டு மசோதாவை 2026 ஏப்ரல் 17 அன்று மக்களவையில் கொண்டு வந்தார்கள்.
மசோதா
வாக்கெடுப்பிற்கு விடும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வருகை 211 ஆக இருந்தது. ஆளுங்கட்சி மற்றும்
ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 309 ஆக இருந்தாலும், 31 பேர் அவைக்கு
வரவில்லை. 278 பேர் அவையில் இருந்தனர். மொத்த வருகை 211+278=489 உறுப்பினர்கள். 489-இல் மூன்றில் இருபங்கு 326 உறுப்பினர்கள் வாக்களித்தால் மசோதா நிறைவேறும். ஆனால், 48 வாக்குகள் குறைந்து, மசோதா தோற்றுப்போனது. தமது 13 ஆண்டுகாலக் காவி ஆட்சி அதிகாரத்தில், மோடி மற்றும் அமித்ஷா கண்களில் முதல்முறையாகத் தோல்வி பயம் தெரிந்தது. ‘இந்து இராஜ்ஜியம்’, ‘ஒரே
நாடு, ஒரே தேர்தல்’,
‘ஒரே மதம், ஒரே தலைவன், ஒரே மொழி’ என்பதில் முதல் மண் விழுந்தது. பிறர் விழ குழி தோண்டிய குதிரை, தான் தோண்டிய குழியில் தானே குப்புற விழுந்தது.
தொகுதி
வரையறை என்ன என்பதைக் காண்போம். இந்தியாவின் மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளை, மக்கள்தொகை அடிப்படையில் மறு சீரமைப்பதையே ‘தொகுதி மறு சீரமைப்பு’
என்கிறோம்.
பா.ச.க. 2011 மக்கள்தொகை
கணக்கெடுப்பின்படி தொகுதி சீரமைப்பு செய்கிறது. இதன்படி, மாநிலங்களில் 835 தொகுதிகளும், யூனியன் பிரதேசங்களில் 35 தொகுதிகளும் எனப் புதிதாக மக்களவை
தொகுதிகளை உருவாக்குகிறது. இதன்மூலம் சுமார் 850 தொகுதிகள் எனக் கூறப்படுகிறது. வரையறை குறித்த செய்திகளையும், அனைத்து ஆவணங்களையும் ஒன்றிய அரசு இரகசியமாக உள்துறையில் வைத்திருக்கிறது. அதுவே பல ஐயங்களை
எதிர்க்கட்சியினர் எழுப்பக்
காரணமாக உள்ளது.
மசோதா
பற்றிய விவரங்களை விவாதிக்கும் உறுப்பினர்களுக்கு, வழங்கவில்லை என்பதும் பெரும் குற்றச்சாட்டு. அதாவது, உத்தரப்பிரதேசம், பீகார் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை, தென்னிந்திய அனைத்து மாநிலத் தொகுதிகளுக்கு இணையாக இருக்கும். தென்மாநிலப் பிரதிநிதித்துவம் இல்லாமலே ஒன்றிய அரசு அமையும். 543 மக்களவை உறுப்பினர்கள் இருக்கும்போதே தென் மாநில உறுப்பினர்கள் பலருக்குப் பேச வாய்ப்புக் கிடைப்பது அரிது.
தொகுதி
சீரமைப்பில் தொகுதிகள் 850 ஆக
உயரும்போது, சில உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பேச வாய்ப்புக் கிட்டும். சிலர் பதவியேற்புடன் பார்வையாளராக மாறிவிடுவர். இவர்கள் எப்படி மக்கள் குரலை எதிரொலிப்பர்? மக்கள் குரல் ஒலிக்காத மக்களவையாக மாறிவிடும். பிறகு ‘வடக்கு வாழும், தெற்கு தேயும்’ என்பது வரலாறாகி விடும். தேசத்தின் கூட்டாட்சித் தத்துவம் முடிந்துவிடும்.
தென்
மாநிலங்களில் நெருக்கடி நிலை காலம் தொட்டு குடும்பக் கட்டுப்பாட்டு முறை சிறப்பாக நடைபெறுகிறது. கல்வி, சுகாதாரம், குடும்பத் திட்டம் போன்ற துறைகளின் முன்னேற்றம் காரணமாக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்தது. ஒன்றிய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்திய தென் மாநிலங்களுக்குத் தொகுதி வரையறை என்ற பெயரில் ஒன்றிய அரசில் பிரதிநிதித்துவம் குறையும். தற்போது 7.8 விழுக்காடாக உள்ள தமிழ்நாட்டுப் பிரதிநிதித்துவம் 5 விழுக்காடாகக் குறைய வாய்ப்புகள் உள்ளன.
தொகுதி
சீரமைப்புக் குறித்து விழிப்பு கொண்ட தமிழ்நாட்டு முதல்வர் 05.03.2025 அன்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை சென்னையில் நடத்தினார். 22.03.2025 அன்று கூட்டு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்பட்டது. 2026 தேர்தல் களத்தில், மசோதாவிற்கு எதிராக, தமிழ்நாட்டு மக்களைத் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற வேண்டினார். பறக்கும் தனது தேர்தல் பரப்புரையில் கருப்புச் சட்டை அணிந்து, மக்களிடையே எதிர்க்கருத்தை வலுவாய் உருவாக்கினார். தேர்தல் பரப்புரையில் இருந்த தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி சென்று,
எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டினர்.
வட
இந்தியாவில் புகழ்பெற்ற இளம் தலைவர்கள் உத்தரப்பிரதேசத்தின் அகிலேஷ் யாதவும், பீகாரின் தேஜஸ்வி யாதவும், காங்கிரஸ் கட்சியின் இராகுல் காந்தியோடு கைகோர்த்தனர். கூடவே உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன், ரேவந்த் ரெட்டி, சீத்தாராமையா எனப் பெரும் படை திரண்டது. மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது.
அடிப்படை
அறமும், மரபு சார்ந்த அரசியலும் இருந்தால், தோற்ற அரசு தார்மிகப் பொறுப்பேற்று நீதிக்குத் தலை வணங்கவேண்டும். பா.ச.க.
மாற்று வழியில் தானும், தன் கூட்டணியும் ஆளும் மாநிலச் சட்ட சபைகள் மூலம் பயணிக்கப் புதுவழி தேடுகிறது.
2051-ஆம் ஆண்டு
வரை தொகுதி மறு வரையறையைத் தள்ளிவைக்கவேண்டும். 2023-இல் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாப்படி, தற்போதைய 543 தொகுதிகளில் 33 விழுக்காடு மகளிர் இடஒதுக்கீடுவேண்டும் என முடிவாய் நிற்கின்றன
எதிர்க்கட்சிகள்.
பாரதிய
சனதா கட்சி மக்கள் விரோத, சிறுபான்மை விரோதச் சட்டங்களைப் பின்வாசல் வழியே நிறைவேற்றியதைப்போல், தொகுதி வரையறை மசோதாவையும் நினைத்தது, தோற்றது. தேச நலனில் இன்று ஒருங்கிணைந்துள்ள தலைவர்கள், நாளை தேர்தல்
களத்திலும் சேர்ந்திருந்தால் பாசிச பா.ச.க.
ஆட்சி வீட்டிற்கு அனுப்பப்படும்.
இது முதல் தோல்வி. இனி வருங்காலங்களில் பா.ச.க.
வுக்குத் தோல்விகள்
தொடர்கதை ஆகலாம்.