news-details
சிறப்புக்கட்டுரை
மயக்கமும் கலக்கமும்

சமூக ஊடகங்கள் எளிய மனிதர்களின் கருத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் குடியாட்சி மாண்பாகப் பிரதிபலிக்கின்றன. தமிழ்நாட்டில்விர்ச்சுவல் வாரியர்என்ற பெயரில் சிலர் மின்னணுத் தளத்தில் தெருச் சண்டை போடுகிறார்கள். ‘தாய்மொழியான தமிழில் இவ்வளவு அருவருக்கத்தக்க வார்த்தைகளா?’ என  அதிர்ச்சி  அளிக்கிறது.

இவர்கள் பதிவிடும் தகாத வார்த்தைகள் ஒட்டுமொத்த சமூகத்தையே முகம் சுளிக்கச் செய்கிறது. ஒரு காலத்தில் குழாயடிச் சண்டைகள் என்ற பெயரில் நடந்த ஆபாச வார்த்தைகள், உறவு முரண்களை இவர்கள் இணையத்தில் சில்லறைகளாய் சிதற விடுகிறார்கள்ஐந்து விழுக்காடாக இருந்த இந்தக் கேவலங்கள் இன்று இவர்களால் 95 விழுக்காடாக உயர்ந்துவிட்டது.

இரசிகர்கள் தங்கள் தலைவருக்குப் போட்டியாகக் கருதும் ரஜினி, அஜித், சீமான் எனத் தொடங்கி  தமிழ்நாட்டு முதல்வர் வரை வசை பாடுகிறார்கள். இந்த அமைப்பின் இவர்களது தேர்தல் பிரிவுச் செயலாளர் உச்சபட்சமாக முதல்வரைமுட்டாள்எனத் திட்டுகிறார். முதல்வரது அரசியல் வாழ்க்கையின் அனுபவத்தின் நிகர், இவர் எவருக்கும் வயதோ, தகுதியோ, பொது வாழ்வோ கிடையாது. ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் குறிவைக்கும் இவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினியையும் சீண்டினார்கள். ரஜினிகாந்த்  அழகாக அவரது வழியில் பதில் சொன்னார்: ‘காலம் பேசாது; காத்திருந்து பதில் சொல்லும்.’

சமூக ஊடகங்களில் பிம்ப அரசியல் குறித்து அக்கறை  கொள்ளும் ஒருவர் ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார். அடுத்த நொடி முதல் இந்தக் கூட்டம் கூடு கலைந்த தேனீக்களாய் மாறி வெறிக்கொண்டு தகாத வார்த்தைகளை வாரி இறைக்கிறது. இது சாதாரண குடிமகன்

முதல் பெரிய பிரபலங்கள் வரை எல்லாருக்கும் நடக்கும். அவர்களின் ஒரே நோக்கம் மீண்டும் அக்கருத்தாளர் சமூக ஊடகப் பக்கம் வந்து, அவர்களைப் பற்றி விமர்சனங்கள் செய்யக்கூடாது என்பதாகும். இதை அவர்கள் தலைமை இரசிக்கிறது. இதுவரை கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ‘வார் ரூம்என்ற பெயரில் உள்ளடக்கங்கள், கற்பனைவாதக் கருத்தாக்கங்கள் தலைமை சக்தியிடமிருந்து பகிரப்படுகிறது.

அரசியல் கட்சிகளில் கண்ணியமில்லாத பேச்சு, தரக்குறைவான தாக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். ஆபாசம், என்று கவனம் விமர்சனம் பெறுகிறதோ அது கண்டிக்கப்படும். வழக்குப் பதிவு செய்யப்படும். அரசியல் கட்சியிலிருந்து நீக்கப்படுவர். ஆனால், இந்தக் குறிப்பிட்ட கட்சியால் மட்டுமே தலைவரால், தலைமையால் கண்டிக்கப்படாது இரசிக்கப்படும். கரூர் பெருந்துயரச் சம்பவத்தின் போது ஒரு பதினைந்து வயது சிறுவன் கூறுகிறான்: “எங்கள் தலைவர் மீது கை வைத்தால், தமிழ்நாடே பிளாஸ்ட் ஆகிடும், போலீஸ் ஸ்டேசனே இருக்காது.”

இவர்களுக்குச் சட்டம்-ஒழுங்கு குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. இவர்கள் தங்கள் தலைவரைப் போலவே கற்பனை உலகில் வாழ்கிறார்கள். இந்த வாரியர்ஸின் மறுபக்கம் வன்முறையைத் தூண்டும் வகையில் வீடியோ போடுவதில் போட்டி நடக்கிறது.

இரு இளைஞர்கள் கையில் அரிவாள் வீசிப் பேசுகிறார்கள்: “அறுத்திருவோம், மொத்த இரசிகர் கூட்டமும் சேர்ந்து வந்தால் நீங்க ஒருத்தனும் இருக்க மாட்டீங்கஎன்கிறார்கள். “ரெட் அன் பிளாக்கை அடித்து நொறுக்கிடுவோம்என வேறொருவன் வீடியோ போடுகிறான். மற்றொரு சமூக ஊடகக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் இந்த இரசிகர்களைத் தினமும் ஒரு வீடியோ போட்டு வம்புக்கு இழுத்தார்; இவர்கள் கட்சியில் ஆண், பெண் பட்டாளம் அவரைத் திட்டியது சொல்ல முடியாத, நாம் முதன் முதல் கேட்கும், புதிய கண்டுபிடிப்பு வார்த்தைகள்தாம்.

நாம் நாகரிகச் சமூகத்தில் வாழ்கிறோமோ அல்லது கற்காலத்திற்குத் திரும்புகிறோமோ என்ற அச்சம் எழுகிறது. இவர்கள் வெட்டரிவாள், பட்டா கத்தியோடு கோபமாகப் பேசுகிறார்கள். “டி.ஜி.பி., டி..ஜி., முதல்வர் எவர் எங்கள் தலைவரைப் பேசினாலும், மூஞ்சி கிழிந்துவிடும்எனச் சவால் விடுகிறார்கள்.

கரூர் பெருந்துயர நிகழ்வின்போது சவால் விட்டவர்களைக் காவல்துறை மடக்கிப் பிடித்தது. வழக்குகளைத் தொடுத்தபோது இந்தக் கூட்டம் அவர்கள் தலைவரைப் போல் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளை மூடிவிட்டு அலைப்பேசிகளை வீசி விட்டு, பதுங்கு குழிகளில் பதுங்கிக் கொண்டார்கள். நடுநிலை  விமர்சகர்கள், “இந்தச் சாக்கடைகள் மீது கல்லெறிந்து நாமும் நாற்றப்படவேண்டுமா?” எனக் கேட்கிறார்கள்.     

சமூக ஊடகங்களில் மோசமாக நடக்கும் இவர்களைப் பாதிக்கப்பட்ட  பொதுமக்கள் வெளிப்படுத்த வேண்டும். கொலைமிரட்டல் விடுகிறவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட, காவல்துறையில் வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும்.

எதிர்க்கட்சியாக இல்லாமல், எந்த ஓர் ஆட்சி அதிகாரமும் இல்லாதபோது இவர்கள் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என ஆடுகிறார்கள். ஒரு வேளை இவர்கள் ஆட்சி அதிகாரம் பெற்றால், சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குரல்வளைகளை நசுக்கிவிடுவார்கள். இவர்களை  எதிர்த்து எவரும் பேச முடியாத அச்ச உணர்வு தமிழ்நாட்டில் ஏற்படும். இவர்களது வன்முறை வெறி, நாளைய நாள்களில் தமிழ்நாட்டை ஒரு பீகார், உத்தரப்பிரதேசம் போல் மாற்றிவிடும் என்பதே கவலைக்குரிய ஒன்றாகும்.

பொதுமக்களில் சிலர்மாற்றம்என்ற பெயரில் இந்த அருவெறுக்கத்தக்க வன்முறைக் கூட்டத்திற்கு ஆதரவு அளிப்பது, நாளைய நாள்களின் சமூக அமைதிக்கு விடுகிற பெரும் சவால் எனலாம். ஆட்சி அதிகாரம் நோக்கிய இவர்களது பயண காலமே, பொதுமக்களைப் பயப்படுத்துகிறது.

அண்மையில் வங்கதேச உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். வங்க தேசத்தில் ஜமாத்--இஸ்லாமி கட்சி இளைஞர்களால் பரபரப்பு செய்யப்பட்டது. அவர்களின்அடாவடித்தனம்வெகுவாகப் பேசப்பட்டது. அடுத்த ஆட்சி இவர்களது எனத் தொலைக்காட்சிகள், அச்சு, சமூக ஊடகங்கள்மக்களை  மூளைச் சலவை செய்தன. இந்த இளைஞர்களால் வங்கதேசம் சுபிட்சம் பெறும் என இளைஞர் கூட்டத்தைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடித் தீர்த்தார்கள். ஓநாய் கூட்டம் என மக்களிடம் வெறுப்பு பெற்ற  ஜமாத்--இஸ்லாமி கட்சி, வங்க தேசத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

சிறுபிள்ளைத்தனமான இந்த வாரியர்ஸ்க்கு  அடிப்படை விமர்சனங்களைத் தாங்கும் பொறுமை இல்லை. இவர்களால் கட்சித் தலைவருக்கு, கட்சிக்கு மக்களிடம் உள்ள புகழ் வெளிச்சம் பாதிக்கப்படுகிறது என்ற கவலையும் இல்லை. ரீல்ஸ்-ரீச் என்பதில் படம் காட்டுகிறார்கள். அவரது தலைவரை நேரில் காணும்போது, கும்பிடத் தோன்றாமல் அலைப்பேசி பிரேமுக்குள் அடக்கும் ஆர்வமும் வெறியும் வெளியாகிறது. இவர்கள் அலைப்பேசியே உலகம் என வாழ்கிறார்கள்.

எங்கள் பகுதியில் இவர்கள் வாக்கு கேட்டு வந்தார்கள்.  ‘ஏன் இவ்வளவு அவசரமாக வந்தார்கள்?’ என்றபோது சொல்கிறார்கள்: “இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்கில் போடத்தான்எனப் பொதுமக்களே விளக்குகிறார்கள்.

மாற்றம்என்ற பெயரில் மூளைச்சலவை செய்து, வாக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. சினிமா மோகம் என்ற புதைகுழியில் விழாதீர்கள். மாற்றம் என்ற பெயரில் நாற்றத்தைப் பூசிக்கொள்ளாதீர்கள். எந்த ஒரு கொள்கைப் பிடிப்பும், மக்கள் சேவை என்ற மாண்பும் கொள்ளாமல், முதல்வர் பதவி என்று அதிகார ஆசை கொண்டால், சமூக ஊடகங்களில் பொங்கலாம். அது பாலாக இருந்தால், நன்றாகப்  பொங்கும். இது பச்சைத் தண்ணீர்! எப்படிப் பொங்கும்?