“புனிதத்தன்மை என்பது ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்பட்ட தனிச்சலுகை அல்ல; மாறாக, அது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கத்தோலிக்கருக்கும் வழங்கப்பட்ட அழைப்பு” என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். வத்திக்கானில் நடைபெற்ற பொதுமறை உரையின்போது, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ‘உலகின் ஒளி’ (Lumen Gentium) ஆவணம் குறித்து அவர் உரையாற்றினார். “கடவுளிடமும், நம் அண்டை வீட்டாரிடமும் நாம் காட்டும் முழுமையான அன்பே புனிதத்தின் அடையாளம். தொடக்ககாலத் திரு அவையைப் போலவே இன்றும் கிறிஸ்துவுக்காக உயிர் துறக்கும் மறைச்சாட்சியமே புனிதத்தின் உயர்ந்த நிலை” என்றார். மேலும், “அனைத்து அருளடையாளங்களும், குறிப்பாக நற்கருணையும் புனித வாழ்விற்கான ஊட்டம் அளிக்கின்றன” என்றும், “புனிதம் என்பது நமது அன்றாட வாழ்வில் இறைவனின் அழைப்பிற்கு நாம் காட்டும் அர்ப்பணிப்பில் வெளிப்படுகிறது” என்றும் அவர் விளக்கினார்.