news-details
சிறப்புக்கட்டுரை
கொடுங்கோல் சட்டம்

ஒரு கொடிய விலங்கு முதலில் அப்பாவி ஆடுகளைக் கடிக்கும். இரத்தவெறியின் ருசி ஓட்டத்தில் படிநிலை மாறும். இறுதியில் மனிதர்களைக் கடித்துக் குதறும். பா... எனும் கொடிய அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு சட்டத் திருத்தம் எனும் ஆடு, மாடுகளைக் கடித்தது. இன்று வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்கு முறை) திருத்தச் சட்டம் 2026 என்ற பெயர்களில் கிறித்தவர்களைக் கடித்துக் குதறத் திட்டமிடுகிறது.

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை இதைஆட்சியாளர்களின் வரம்பு மீறிய செயல்எனச் சாடுகிறது. வட மாநிலங்களில் சட்ட விரோதக் குடியேற்றம் உள்ளது. குறிப்பாக, பா...வின் எதிர்க்கட்சி ஆளும் மேற்குவங்கத்தில் என்றது. இசுலாமிய எதிர்வாக்கு வங்கியைப் பா... குறி வைத்தது. குடியுரிமையை மறுத்தது. அதைக் குடியுரிமை திருத்தச் சட்டம் என்றது.

வக்ஃபு சட்டம் என்பது வக்ஃபு தன்னாட்சியைப் பறித்தல், வக்ஃபு சொத்துகளை கபளீகரம் செய்தல் போன்ற நீண்டகால ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்திற்குத்  திசையானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, வெளிநாட்டு நிதிகளை  வாரிக் குவித்தாலும் காலங்காலமாகக் கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள்மீது அக்னிப் பார்வை கொண்டு இருந்தது. காலம் வரக் காத்திருந்தது.

1975-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் காங்கிரஸ்  கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, எதிர்க்கட்சிகளின் வலுத்த அரசியலால் என பிரதமர் இந்திராகாந்தி அம்மையாருக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. தனக்கு இருந்த நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் தேசத்தில் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார். அக்கறுப்புக் காலத்தில் தன் அதிகாரத்தைத் தக்கவைக்கும் எல்லா நடவடிக்கைகளையும் இந்திரா காந்தி மேற்கொண்டார். 1976-இல் தேசவிரோத சக்திகள் வெளிநாட்டிலிருந்து நிதிகளைப் பெற்றுஉள் நாட்டில் கலவரங்கள் செய்வதாகக் கூறி ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார். அது தனி நபர்கள், சங்கங்கள் வெளிநாட்டிலிருந்து பெறும் நிதியை ஒழுங்குபடுத்துதல், தேசிய நலனுக்கு, தேச விரோத நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு கொண்டு வருதல் எனக் கூறப்பட்டது.

1984-ஆம் ஆண்டு அனைத்து அமைப்பு சாரா நிறுவனங்களும் உள்துறை அமைச்சகத்தில் கட்டாயமாகப் பதிவு செய்யப்படவேண்டும் என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கறுப்புச் சட்டத்தின் தொடக்ககாலக் கட்டத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழகம், ..டிகான்பூர் உள்பட்ட எட்டு தேசியப் பல்கலைக் கழகங்கள் பெரும் சவாலைச் சந்தித்தன. அவற்றின் வெளிநாட்டு நிதி உதவிகள் தடுக்கப்பட்டன. அவர்களது உரிமங்கள் இரத்து செய்யப்பட்டன. இறுதியில், தேவையான கணக்குகள், ஆவணங்களைச் சமர்ப்பித்து ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழகம் தன் நிலையை மீட்டெடுத்தது. இதிலும் உள்துறை அமைச்சகத்தில் சட்ட விரோதச் செயல்கள் அரங்கேறின. நிறுவனப் பதிவு, கணக்கு வழக்குப் பார்த்தல் என்பதில் தொடங்கி, போலி நிறுவனங்கள் பதிவுவரை நடந்தது. இதில்  உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆறு பேர் கைது, கோடிக்கணக்கான பணம் கைப்பற்றுதல் என சி.பி.. நடவடிக்கைகள் கசப்பான மறுபக்கங்கள்.

1976-இல் வடிவாகி, 2010-இல் இச்சட்டம்  முழு வடிவு பெற்றது. பின் அது 2016, 2018, 2020 என பா... அரசால் திருத்தம் செய்யப்பட்டது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சியால் தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் இரண்டு முதல் மூன்று விழுக்காடு எதிர்மறைத் தாக்குதல் உள்ளது. இதையும் கட்டுப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் சட்டம் பல முறை மாற்றப்பட்டது. மத வன்மம் கொண்டு, வெளிநாட்டுப் பங்களிப்பு  (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2026 எனப் புதிய வடிவம் தரப்பட்டது. இச்சட்டம், கிறித்தவச் சிறுபான்மை மக்களை, கிறித்தவத் தொண்டு நிறுவனங்களைக் குறிவைத்து  அச்சுறுத்துகிறது.

கொடுங்கோல் ஆட்சியின் கறுப்புச் சட்டமான இந்தச் சட்டத் திருத்த முன் வடிவு, மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களைக் குறி வைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் என உறுதிபடக் கூறலாம்.

ஆர்.எஸ்.எஸ். கிறித்தவத் தேவாலயங்கள், கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள்மீது வைத்துள்ள ஆத்திரம் சட்ட முன்வடிவாக அதிரடியாக மாறியுள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் தன் மட்டற்ற அதிகார வரம்பை இச்சட்ட வடிவில் உள்ளடக்கி உள்ளது. உரிமம் பெறுதல், ஐந்து ஆண்டுகளுக்கு  ஒருமுறை புதுப்பித்தல் என அனைத்து அதிகாரங்களையும் கேள்வி கேளா நிலையில் வைத்துள்ளது. உரிமங்களை இரத்து செய்யும் அதிகாரத்தையும் இச்சட்டத்தால் உள்துறை அமைச்சகம் பெறுகிறது. எந்நேரத்திலும், எந்தவித அறிவிப்புகளும்எந்தவிதக்  காரணங்களும் இல்லாமல் உரிமம் இரத்து செய்யப்படலாம். அவ்வாறு இரத்து செய்யப்படுகிற அல்லது ஒப்படைக்கப்பட்டுள்ள உரிமங்களைக் கொண்ட, காலாவதியான பதிவு எண்களைக் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சொத்துகளைப் புதிதாக நியமிக்கப்படவுள்ள அதிகார அமைப்பு கையெடுக்கும். அந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்பாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு எல்லாக் கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும் முடக்க வழி செய்கிறார்கள்.

மார்ச் 2025-2026 அன்று வெளிநாட்டுப் பங்களிப்பு  (ஒழுங்கு முறை) திருத்தச் சட்டம் 2026-இன் முன்வடிவு மக்களவையில் வைக்கப்படுகிறது. ஆளும் பா... தரப்பு, ‘இச்சட்ட முன் வடிவு அரசு சாரா நிறுவனங்களின் சொத்துகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை மையம் செய்தல், நிர்வாகச் செலவுகளைக் குறைத்தல், வெளிநாட்டுப் பங்களிப்புகள் மீதான மேற்பார்வைகளை அதிகரித்தல் என அரசின் பிடியை உறுதிப்படுத்தல்என்று கூறுகிறது. எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை உடனே பதிவு செய்தன. விழித்த பா... அரசு சட்டத்தை நிறைவேற்றவில்லை; திரும்பவும் பெறவில்லை. அடுத்த பரிசீலனையில் எனக் காத்திருப்புப் பட்டியலில் போட்டது. எந்த நேரமும் ஒருவேளை சிறப்பு அமர்வு வழியாகக்கூட இந்தக் கறுப்புச் சட்டம் பின்வாசல் வழியே வர வாய்ப்புகளே அதிகம் என விவரம் அறிந்தோர் கூறுகிறார்கள். இணைய வழி கருத்துப் பகிர்வில் பலரும்  ‘பிரதமரின்  குடிமக்கள் உதவி அவசர கால  நிவாரண நிதி (பி.எம்.கேர்) இச்சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா?’ என வாதம் வைக்கிறார்கள்.

தமிழ்நாட்டு முதல்வர், “இலாப நோக்கமற்ற அமைப்புகளால் வழங்கப்படும் கல்வி, மருத்துவம் மற்றும் தொண்டு சேவைகளுக்கு மாற்றாக, புதிய சேவை வழங்கும் திறன் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இல்லைஎன்ற உண்மையை இவ்விவாதத்தின் ஊடே பொருத்துகிறார். மேலும் முதல்வர் ஸ்டாலின், “இது  ஒரு கொடுங்கோல் மசோதா. அது ஒன்றிய அரசுக்கு அதன் விருப்பப்படி  எந்தவொரு  முறையான சட்ட நடைமுறையும் இன்றி ஒரு தேவாலயம், பள்ளி, மருத்துவமனை போன்ற அமைப்பின் எப்.சி.ஆர்.பதிவை இரத்து செய்யவும், அதன் சொத்துகளைக் கையகப்படுத்தவும் அதிகாரம் அளிப்பதன் மூலம் தொண்டு நிறுவனங்களைச் சிதைக்க முயல்கிறதுஎனத் தன் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்.

பா... அரசின் நெருக்குதல்களால் இன்றைய நிலையில் 18,000-க்கும் மேற்பட்ட தொண்டு, அமைப்பு சாரா நிறுவனங்கள் தங்கள் உரிமங்களை இழந்துள்ளன. அவர்களுடைய சொத்துகளை இந்தக் கறுப்புச் சட்டம் வழியே ஆர்.எஸ்.எஸ். மறைமுகமாகக் கையில் எடுக்கும். அது கல்வி, மருத்துவச் சேவை நிறுவனமாக இருந்தால், அது பின்தங்கிய பகுதியில் இருந்தால், தன் காவி வேலையைக் காட்டும். அது நாட்டின் அடிநிலைச் சமூக அமைப்பிற்கு அச்சுறுத்தலாக முடியும்.

பா... என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் குழந்தை. அது தன் தாயின் வழிகாட்டலுக்கும் செயல்திட்டத்திற்கும் ஆதரவாகவே செயல்படும். மதச்சார்பற்ற சக்திகளான  நாம் அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதே இந்திய அரசியலின் சவால்மிகு நாளைய பக்கங்களாகும்.