news-details
கவிதை
உழைக்கும் கரங்கள் உயர்ந்திடுமே!

உழைக்கும் கரங்கள் உயர்ந்திடுமே!

உயர்ந்த சிகரம் அடைந்திடுமே!

பிழைக்கும் வழியைக் கண்டிடுமே!

பிறரை வியக்க வைத்திடுமே!

 

தொழிலைக் கற்றுத் தெளிந்தாலே

தொல்லை இல்லை வாழ்வினிலே!

அழியும் வழியின் பயணங்கள்

அகன்று போகும் உழைத்தாலே!

 

கல்வி என்றும் வழிகாட்டும்

கலங்கரை விளக்கு மறவாதீர்!

எல்லை இல்லா உழைப்பாலே

எழுச்சிப் பெற்று உயர்ந்திடலாம்!

 

வேலை வாய்ப்பை உருவாக்க

வளரும் திட்டம் பலவேண்டும்!

ஆலைத் தொழில்கள் வளர்ந்தாலே

அதிக வருவாய் வந்திடுமே!

 

இயற்கை யோடு வாழ்வதற்கு

இயன்ற மட்டும் இணைவீரே!

செயற்கை நுண்ணறி வெல்லாமே

சிறந்து விளங்குது இன்றைக்கு!

 

வளரும் புதிய தொழில்நுட்பம்

வாழ்வில் என்றும் வழிகாட்டும்!

தழைக்கும் மானுட வாழ்வியலைத்

தரணி வியக்க உழைப்பீரே!

 

கல்லு டைக்கும் தொழிலாளி

கழனியில் உழைக்கும் விவசாயி

வல்ல செயல்கள் புரிகின்ற

விஞ்ஞா னியரும் உழைப்போரே!

 

உழைப்பைச் சுரண்டும் கார்ப்பரேட்டு

உலகம் சூழ்ந்த நிலையாச்சு!

உழைக்கும் பொதுத்துறை பற்பலவும்,

உறிஞ்சும் தனியார் வசமாச்சு!

 

ஆள்வோர் போடும் திட்டங்கள்

அறிவு நிறைந்த இளையோர்க்கு

தோள்கொ டுக்கும் விதத்தினிலே

துலங்க வேண்டும் அறிவீரே!

 

கணினி மற்றும் வலைத் தளங்கள்

காணும் வளர்ச்சி எப்போதும்

துணையாய் நின்று இளையோர்க்குத்

தந்திடு மாநல் வாய்ப்புகளை?

 

வியர்வை சிந்தி உழைப்போர்க்கு

வீழ்ச்சி நேரா விதத்தினிலே

உயர்வை உறுதி செய்கின்ற

உயர்ந்த சட்டம் வந்திடுமா?

 

மண்ணில் உழைத்து மகிழ்கின்ற

மக்கள் வாழ்வு வளமாக

எண்ணும் அரசு எந்நாளும்

ஏற்றம் பெற்று நின்றிடுமே!