தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் மாண்புமிகு ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவருடைய தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் வாழ்த்துச் செய்தி
தமிழ்நாட்டின்
புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திருமிகு ச. ஜோசப் விஜய்
அவர்களுக்கும் அவர் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவை தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டு
மக்கள் அனைவரின் ஒருங்கிணைந்த நலன், சமூகநீதி, கல்வி முன்னேற்றம், இளைஞர் வளர்ச்சி மற்றும் சமத்துவம் ஆகிய உயரிய இலக்குகளை முன்னிறுத்தி தாங்கள் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பொறுப்பேற்று ஒருசில நாள்களில் தாங்கள் முன்னெடுத்துள்ள புதிய அரசியல் நாகரிகம், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை மூடுதல், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியவை. இதுபோன்று தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நல்லாட்சி வழங்க இறைவன் தங்களுக்கு ஞானத்தையும் உடல் நலன்களையும் அருள இறைவனை வேண்டுகிறோம்.
வெறுப்பு
அரசியல் வளர்ப்பவர்களை ஒடுக்கி. சமயத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பவர்களைப் புறந்தள்ளி, மதநல்லிணக்கம், மனிதநேயம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சனநாயகப் பண்புகளைப் பாதுகாத்து, அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் தலைமையினைத் தாங்கள் வழங்குவீர்கள் என நம்புகிறோம். உலகின்
மூத்தமொழி தமிழால் பெருமையுறும் பாரம்பரியமிக்க தமிழ்நாட்டின் இளைய முதலமைச்சர் என்னும் புதிய பொறுப்பில், எல்லா நிலைகளிலும் தாங்கள் சிறப்பான முத்திரை பதிக்க, தமிழ்நாடு ஆயர் பேரவை தனது உளமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறது.
இறைவனின்
அருளும் ஆசியும் உங்களோடு என்றும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை உளமாற வேண்டுகிறோம்.
+ பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி,
தலைவர், தமிழ்நாடு ஆயர்
பேரவை