news-details
ஆன்மிகம்
அன்னை மரியா நிறையன்பின் முன்மாதிரி (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 37)

1. இயேசுவின் பிறப்பானது தூய ஆவியானவர் மற்றும் கன்னித் தாயின் ஒத்துழைப்பால் நிகழ்ந்திருந்தாலும், இப்பிறப்பு நிகழ்வானது மற்ற மனிதர்களின் பிறப்பைப் போன்றே கருத்தரித்தல், கர்ப்பத்தில் தாங்குதல் மற்றும் மகப்பேறு போன்ற கட்டங்களைக் கடந்துதான் நிகழ்ந்தது. மேலும், மரியாவின் தாய்மை என்பது வெறும் குழந்தையைப் பெற்றெடுக்கும் மனித உடல் சார்ந்த செயல்முறையோடு மட்டும் நின்றுவிடவில்லை; மாறாக, மற்ற எல்லாத் தாய்மார்களுக்கும் நிகழ்வது போலவே, தன் மகனின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவரும் ஓர் இன்றியமையாத பங்களிப்பை வழங்கினார்.

ஒரு தாய் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் மட்டுமல்ல; அக்குழந்தையை வளர்ப்பவள் மற்றும் கற்பிப்பவள். உண்மையில், இறைவனின் திட்டத்தின்படி குழந்தைக்குக் கல்வி புகட்டும் பணியானது, குழந்தையைப் பெற்றெடுக்கும் செயலின் இயல்பான தொடர்ச்சியே என்று நாம் உறுதியாகக் கூறலாம். மரியா இயேசுவைக் கருத்தரித்ததாலும், பெற்றெடுத்ததாலும் மட்டுமல்ல; மாறாக, அவரின் மனித வளர்ச்சியில் அவருக்குத் துணையாய் இருந்ததாலும்இறைவனின் தாய் (Theotokos) என்று அழைக்கப்படுகின்றார்.

மரியா ஆசிரியையாக இருப்பதற்கு மிகவும் பொருத்தமானவர்

2. தெய்வீகத்தின் முழுமையை இயேசு தம்முள் கொண்டிருந்ததால், அவருக்கு ஆசிரியர்கள் தேவையில்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால், மனுவுருவாதலின் மறைபொருள், பாவத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நம்மைப் போலவே மனித நிலையில் இறைமகன், இந்த உலகிற்கு வந்தார் என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றது (ஒப்பிடுக. எபி 4:15). ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படுவதைப் போலவே, இயேசுவின் வளர்ச்சிக்கும் குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்வயது வரை (ஒப்பிடுக. லூக் 2:40) அவருடைய பெற்றோரின் கல்விசார் உருவாக்கமும் தேவைப்பட்டது

இயேசுவின் குழந்தைப் பருவம் குறித்து குறிப்பிடத்தக்க வகையில் விவரிக்கும் லூக்கா நற்செய்தியானது, நாசரேத்தில் இயேசு யோசேப்புவிற்கும் மரியாவிற்கும் கீழ்ப்படிந்திருந்தார் என்று கூறுகின்றது (ஒப்பிடுக. லூக் 2:51). இச்சார்பு நிலையானது, அவரின் தாய் மற்றும் கடவுளின் திட்டத்திற்குத் திறந்த மனதோடிருந்து தந்தை என்கின்ற முறையில், அவரின் கடமையைச் செய்த யோசேப்புவிற்கு இயேசு கீழ்ப்படிந்திருந்தார் என்பதைக் காட்டுகின்றது

3. கடவுள் மரியாவிற்குக் கொடுத்த சிறப்புக் கொடைகள், தாய் மற்றும் ஆசிரியராக இருந்து அவர் தனது பணியைச் செய்ய மிகவும் உதவியாக இருந்தன. அன்றாட வாழ்க்கையின் உறுதியான சூழ்நிலைகளில், இறைவனைப் பின்பற்றுவதற்கும் பின்தொடர்வதற்கும் இயேசுவுக்கு மரியா கற்றுக் கொடுத்திருக்கவேண்டும். மேலும், கடவுளுக்கும், தனது சகோதர-சகோதரிகளுக்குமான உண்மையான அன்பின் முன்மாதிரிக்கானதோர் எடுத்துக்காட்டான வாழ்வையும் மரியாவிடம்  இயேசுவால் காண முடிந்தது.

மரியாவின் தாய்மைநிறை உடனிருப்புடன், கல்வி சார்ந்தவைகளில் தேவையான சமநிலையை வழங்கிய ஒரு நியாயமான மனிதரான (மத் 1:19) யோசேப்புவின் பங்களிப்பின்மீதும் இயேசு நம்பிக்கையோடிருக்கலாம். ஒரு தந்தையாகத் தனது பங்கைச் செய்த யோசேப்பு, நாசரேத்தில் உள்ள தனது வீட்டை, மனிதகுல மீட்பரின் வளர்ச்சிக்கும் தனிப்பட்ட முதிர்ச்சிக்கும் ஏற்றதொரு சூழல் உள்ளவாறு மாற்றுவதில் அவர் தனது மனைவியுடன் ஒத்துழைத்தார். பின்னர் தச்சுத் தொழிலை அவருக்குக் கற்றுக் கொடுத்ததன் வழியாக, யோசேப்பு இயேசுவை உழைப்பாளர் உலகிலும் சமூக வாழ்விலும் ஆர்வத்துடன் ஈடுபட உதவினார்.

4. நற்செய்தியில் மரியாவைப் பற்றி ஒருசில கூறுகள் மட்டுமே கூறப்பட்டுள்ளதால், மரியா தனது தெய்வீக மகனுக்குக் கற்பித்த வழிகளை நாம் நன்கு அறிந்து அவரை முழுமையாகப் பாராட்ட இயலவில்லை. உண்மையில், மரியா யோசேப்புவுடன் இணைந்து மோயிசனின் சடங்குகள் மற்றும் பரிந்துரைகளையும், சங்கீதங்களைப் பயன்படுத்தி உடன்படிக்கையின் கடவுளிடம் செபிக்கவும், எகிப்திலிருந்து வெளியேறியதை மையமாகக் கொண்ட இஸ்ரயேல் மக்களுடைய வரலாற்றையும் இயேசுவிற்கு அறிமுகப்படுத்தினார். மரியாவிடமிருந்தும் யோசேப்புவிடமிருந்தும் தொழுகைக்கூட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும், பாஸ்கா விழாவிற்காக வருடாந்திரத் திருப்பயணம் செய்யவும் இயேசு கற்றுக்கொண்டார்.

இவ்வாறு, இயேசுவின் செயல்பாடுகளை வைத்து, மரியாவின் போதனை ஆழமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது என்றும், இயேசுவின் மனித உளவியலில் நல்லதொரு வளர்ச்சியைக் கண்டது என்றும் உறுதியானதொரு முடிவுக்கு நம்மால் வரமுடியும்.

உண்மைப் பெற்றோரின் முன்மாதிரிகள் யோசேப்பு-மரியா

5. தனித்துவமிக்கவரான இயேசுவைப் பொறுத்தவரை, மரியாவின் கல்விப்பணி மற்ற தாய்மார்களின் பங்களிப்போடு ஒப்பிடுகையில் பல சிறப்பு அம்சங்களை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. தனது மகனிடம் ஏற்கெனவே இயல்பாகவே அமைந்திருந்த வளர்ச்சிக்கு இன்றியமையாத மதிப்புகளும் ஆற்றல்களும் வளர்வதற்கான சாதகமான சூழலை மட்டுமே அவர் ஏற்படுத்தித் தந்தார். எடுத்துக்காட்டாக, இயேசுவிடம் எவ்வகையான பாவமும் இல்லாதிருந்ததால், மரியாவிடமிருந்து எப்போதும் நேர்மறையான ஒரு மனப்பாங்கை வேண்டி நின்றது. இது எவ்வகையான திருத்தத்திற்கோ மற்றும் தலையீட்டிற்கோ இடமில்லாமல் செய்தது.

மேலும், இஸ்ரயேல் மக்களின் கலாச்சாரம்-மரபுகளை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தியது அவருடைய தாய் என்றாலும்கூட, உலகில் உண்மையைப் பரப்பவும், தந்தையின் விருப்பத்தை முற்றிலும் பின்பற்றவும் எருசலேம் ஆலயத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே இறைமகன் பற்றிய முழு விழிப்புணர்வைப் பெற்றிருந்ததையும் அவரே வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு தன் மகனின் ஆசிரியையாக இருந்து, மரியா அவர் பெற்றெடுத்த இறைமகனின் தாழ்ச்சிமிகு சீடராகின்றார்

கன்னித்தாயினுடைய பணியின் முக்கியத்துவம் என்னவென்றால், இயேசுவின் குழந்தைப் பருவத்திலிருந்து வளர் பருவத்தை அடையும் வரை தனது மகன் இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வளரவும் (லூக் 2:52) மற்றும் அவரின் பணி வாழ்வுக்குத் தயாராகவும் அவர் உதவினார்.

எனவே, மரியா மற்றும் யோசேப்பு இவர்கள் இருவரையும் அனைத்துக் கல்வியாளர்களுக்கும் முன்மாதிரியாகக் காணலாம். இன்றைய குடும்பங்கள் சந்திக்கும் பெரும் சிரமங்களில் யோசேப்புவும் மரியாவும் பெற்றோருக்குத் துணைநின்று, குழந்தை வளர்ப்பில் சரியான மற்றும் பயனுள்ள உருவாக்கத்திற்கான வழியை அவர்களுக்குக் காட்டுகின்றார்கள். அவர்களின் கல்வி அனுபவமானது மிகவும் சிக்கலான மற்றும் கடினமான சூழ்நிலைகளில் தங்கள் குழந்தைகளின் ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சியில் தங்களை அர்ப்பணிப்பதற்காக அழைக்கப்படும் கிறித்தவப் பெற்றோருக்கு ஒரு திடமான முன்னுதாரணமாகும். இதனால் கிறித்தவப் பெற்றோர் மனிதனுக்குத் தகுதியான மற்றும் கடவுளின் திட்டத்திற்கேற்ற  வாழ்க்கையை வாழ்வார்கள்.

மூலம்: John Paul II, Blessed Virging Is Model of Perfect Love, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 11 December 1996, p. 11.