news-details
சிறப்புக்கட்டுரை
மனிதன் டிஜிட்டல் பிராணி (வலையும் வாழ்வும் – 49)

அரசு மருத்துவமனையின் அந்தப் பெரிய இரும்பு லிப்ட் எப்போதும்போல நோயாளிகளின் முனகல்களாலும், மருந்து நெடியாலும் நிறைந்திருந்தது. அதன் ஆபரேட்டர் ரவிக்கு அதில் எந்தச் சலனமும் இல்லை. அவனுக்கு அது பழகிப்போன வேலை. அவ்வளவுதான். காய்ந்த சருகைப் போல அவன் இதயம் மரத்துப்போயிருந்தது.

யோவ், கொஞ்சம் தள்ளி நில்லுய்யா,… மூச்சு முட்டுதுல்லஎன்று ஸ்ட்ரெச்சரில் தன் தாயை வைத்துக்கொண்டு பதறிப்போய் நின்று கொண்டிருந்த ஓர் இளைஞனைப் பார்த்து, பட்டுத்தெறிக்கும் பட்டறை நெருப்புப்போல எரிந்து விழுந்தான் ரவி.

அண்ணே, அவங்களுக்கு நெஞ்சு வலிண்ணே, கொஞ்சம் சீக்கிரம் ஆறாவது மாடிக்குப் போகணும்ணே. எங்கேயும் நிக்காம போயிடுலாம்ணேஎன்று அந்த இளைஞன் கெஞ்சினான்.

எல்லாருக்கும் இங்க அவசரம்தான். லிப்ட் அது பாட்டுக்குத்தான் போகும். நான் என்ன கையிலயா தூக்கிட்டுப் போறேன்? சும்மா பதறாம இருஎன்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, பேஸ்புக் ரீல்ஸ்களில் மூழ்கிப் போனான்.

அன்று சனிக்கிழமை மதியம். மருத்துவமனையில் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. ரவி லிப்ட்டின் உள்ளே இருக்கும் அவனது பிரத்யேக இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனது லிப்ட் உலகில் அவன்தான் ராஜா. அவன் கூறினால்தான் அந்த இரும்புப் பெட்டி மேலேயும் கீழேயும் செல்லும். லிப்ட் மேலே மட்டும் போகாது, கீழேயும் வந்தாகவேண்டும் என்பது ரவிக்குத் தெரியும். ஆனால், அவனுடைய வாழ்க்கையில் அது நடக்கும் என்பது அவனுக்கு அன்று தெரியாதிருந்தது.

அன்று திடீரென அவனது இடது கையில் ஒரு மிரள வைக்கும் வலி பரவியது. நெஞ்சுப் பகுதி பாறை ஒன்றைத் தூக்கி வைத்ததுபோலக் கனமாக இருந்தது. நெற்றியில் வியர்வை படர்ந்தன. அவனுக்குப் புரிந்தது, இது மாரடைப்பு என்று.

...… அம்மாஎன்று கத்த முயன்றான். ஆனால், தொண்டையிலிருந்து காற்று மட்டுமே வந்தது, சத்தம் வரவில்லை. கையை நீட்டி லிப்ட்டின்அலாரம்பொத்தானை அழுத்த முயன்றான். விரல்கள் காற்றில் ஆடும் இலைபோல நடுங்கி, பொத்தானைத் தொடுவதற்குள் அவனது கை சரிந்தது. கண்கள் செருக, தலை ஒரு பக்கமாகச் சாய்ந்தது. ரவியின் உயிர் அங்கேயே பிரிந்தது.

அவனது உடல் அந்த இருக்கையிலேயே, அவன் சிம்மாசனத்திலேயே செதுக்கி வைத்த சிலையைப்போல அசையாமல் அமர்ந்திருந்தது. வெளியே வெவ்வேறு மாடிகளில் நின்ற மக்கள் லிப்டுக்காகப் பொத்தான்களை அழுத்திக்கொண்டே இருந்தார்கள். தரைதளத்தில் இருந்தவர்கள் அழுத்தும் போது லிப்ட் கீழே வந்தது. மேல்தளத்தில் நிற்பவர்கள் பொத்தானை அழுத்தும்போது லிப்ட் மேல்தளத்திற்குச் சென்றது. இப்படி அது பனை மரத்தில் கீழேயும் மேலேயும் ஏறி விளையாடும் அணிலைப்போலப் பாசாங்கு காட்டிக்கொண்டிருந்தது.

அவனுடைய உணர்வற்ற நிலை இப்போது ஒரு சுவராக மாறி அவனுக்கும் உலகிற்கும் நடுவே நின்றது. லிப்டின் கதவு திறக்கவில்லை என்பதற்காக யாரும் அதிக நேரம் காத்திருக்கவில்லை. பக்கத்திலிருந்த அடுத்த லிப்ட்டைத் தேடிச் சென்றனர். வேறுசிலர் படிக்கட்டுகளைப் பயன்படுத்தினர். ரவியை யாரும் தேடவில்லை. ரவியும் யாரையும் தேடும் நிலையில் இல்லை. அடுத்த சிப்டில் அடுத்த லிப்ட் ஆப்பரேட்டர் வரும் வரை ரவி யாருக்கும் தேவைப்படாதவனாகவே இருந்தான்.

அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாட்டினால் ஏற்படும் எமோஷனல் நம்பிங் (Emotional numing) என்பது, ஒரு நபர் தனது உணர்ச்சிகளை உணர முடியாமல் போகும் அல்லது உணர்ச்சிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்படும் ஓர் உளவியல் நிலை என்று கூறலாம். இணையத்தில் தொடர்ந்து வேலை, பொழுதுபோக்கு மற்றும் சமூகத் தொடர்புகள் என அனைத்தையும் ஒரே தளத்தில் கையாள்வது ஒருவரை உணர்வுரீதியாக வடிகட்டி விடுகிறது. இதனால் உண்மை வாழ்க்கையில் உள்ள உறவுகள் மற்றும் நிகழ்வுகள் மீது ஆர்வம் குறையத் தொடங்குகிறது.

சமூக ஊடகங்களின்ஹைலைட் ரீல்கலாச்சாரம் இளைஞர்களிடையே 50% வரை உணர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. சமூக ஊடகங்கள் நம்மை அதன் சூழ்ச்சி வலையில் சிக்க வைக்கின்றது. இது நமது மூளை உண்மையான உலக உணர்ச்சிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இதைத் தவிர்க்கத் திரைப் பயன்பாட்டைக் குறைத்து, மனிதர்களுடனான தொடர்பை அதிகரிப்பது மிக மிக அவசியமாகும்.

தினமும் 7 முதல் 9 மணிநேரம் வரை சீரான தூக்கம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை எண்டோர்பின் (Endorphins) சுரப்பை அதிகரித்து மனநிலையைச் சீராக்க உதவும். சரிவிகித உணவு உண்பது மூளையின் செயல்பாட்டிற்கும், உணர்ச்சி மேலாண்மைக்கும் துணைபுரிகிறது.

சமூக ஊடகங்களில் வரும் அதிகப்படியான தகவல்களிலிருந்து விடுபடடிஜிட்டல் டிடாக்ஸ்செய்வது மூளைக்கு அமைதியைத் தரும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது தனிமை உணர்வை உடைத்து, உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. ஓவியம் வரைதல், இசை அல்லது டைரி எழுதுதல் போன்ற செயல்கள் மூலம் அடக்கப்பட்ட உணர்ச்சிகளை மெதுவாக வெளிப்படுத்தலாம்.

பிறரின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்றல் அல்லது ஈடுபடுதல் என்பதே மனிதனின் தனி அடையாளம் ஆகும். அந்த அடையாளத்தை இழக்கும்போது மனிதன் சமூகப் பிராணி என்ற தன் அடையாளத்தை இழப்பவனாகிறான்.