திருப்பலி முன்னுரை
தூய
ஆவியார் திருத்தூதர்கள் மேல் இறங்கி வந்ததைப் பெந்தகோஸ்து பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். தூய ஆவியின் வல்லமையைப் பெற்று துணிவோடும் ஞானத்தோடும் நற்செய்தியை அறிவிக்க பெந்தகோஸ்து பெருவிழா நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நாள் ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறிய நாளாகும். அச்சத்திலும்
குழப்பத்திலும் இருந்த திருத்தூதர்கள்மேல் இறங்கிய தூய ஆவியார் அவர்களை உறுதியும் ஞானமும் நிறைந்த சாட்சிகளாக மாற்றினார்.
அதே
தூய ஆவி இன்றும் நம்முடைய வாழ்விலும் செயல்பட்டு, அன்பிலும் அமைதியிலும் நம்பிக்கையிலும் நம்மை வளரச் செய்கிறார் என்பதை உணர்வோம். தூய ஆவி நம் மனங்களில் அமைதியை அருள்பவராகவும், துயர நேரங்களில் ஆறுதல் அளிப்பவராகவும், குழப்ப நேரங்களில் ஞானத்தை அருள்பவராகவும், நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் சாட்சிய வாழ்வு வாழ துணிவு அளிப்பவராகவும் இருக்கின்றார்.
நமது
வாழ்வில் அச்சம், கலக்கம், பயம் இவையெல்லாம் நீங்கப்பெற்று உறுதியோடும் துணிவோடும் வாழக்கூடிய அருளைத்தர நெருப்பு நா வடிவில் இறங்கி
வரும் தூய ஆவியார் நமக்கு மூச்சுக்காற்றாய் இருந்து நம்மை இயக்குகிறார். இத்தகு மகத்துவமிக்க, வல்லமை நிறைந்த தூய
ஆவியின் குரலுக்குச் செவிகொடுத்து, தூய மக்களாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக
முன்னுரை
சீடர்கள்
இயேசு இறந்தபின் அச்சத்தோடும் கலக்கத்தோடும் அன்னை மரியாவோடு மேலறையில் ஒன்றாய் குழுமி இருந்த வேளையில், அவர்கள் அனைவரையும் ஆட்கொண்ட தூய ஆவியார் பல்வேறு மொழிகளில் பேசும் ஆற்றலையும், நற்செய்தியை விளக்கிக் கூறும் ஞானத்தையும், துணிவோடு எடுத்துரைக்கும் வல்லமையையும் வழங்குகிறார். நாமும் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
திருமுழுக்குப்
பெற்ற நாம் அனைவரும் தூய ஆவியைப் பெற்றதால்தான் ‘இயேசுவே ஆண்டவர்’ என வாயார முழக்கமிடுகிறோம்,
அவரை அறிவிக்கிறோம். தூய ஆவியோ ஒன்றுதான், ஆனால், அதன் கனிகள், கொடைகள் பலவகைப்பட்டவை. தூய ஆவியின் வரங்களைப் பெற்றவர்கள் பொதுநன்மைக்காக உழைக்கவேண்டும் எனும் அழைப்பை விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. தூய
ஆவியை எமக்களித்த இறைவா! திரு அவையின் தலைவர்கள் அனைவரும் தூய ஆவியின் துணையால் தீமைகளை எரித்திடும் சுடராகவும், இருளை அகற்றி ஒளியைக் கொடுக்கும் தீபமாகவும் திகழ்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. வானகக்
கொடைகளை வழங்கிவரும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூய ஆவியை எழுந்தருளச் செய்து, சமுதாயத்தில் நற்செய்தியின் தூதுவர்களாக வாழத் தேவையான கொடைகளையும்
வரங்களையும் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
3. அருள்கொடை
வள்ளலே எம் இறைவா! புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் நாட்டுத் தலைவர்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், பிளவுகளை அகற்றி சமத்துவத்தை ஏற்படுத்தவும், ஊழலற்ற ஆட்சியை வழங்கிடவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. தூய
ஆவியை எமக்களித்த இறைவா! எம் பங்கிலுள்ள இளைஞர், இளம் பெண்களுக்கு ஆசியளியும். அவர்கள் நன்மை தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றலைப் பெற்றிடவும், உலகப் போக்கின்படி செல்லாமல், உண்மை நெறியில் நடக்கவும் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.