news-details
சிறப்புக்கட்டுரை
அ - சி - ங் - க - ம்

அசிங்கம் - ‘இது என்ன புதியதும் புதிருமான தலைப்பு?’ என்ற வினா வாசகர்களுக்கு எழுந்தால் அவ்வினாவில் வியப்பு எதுவும் இல்லை.

அண்மையில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள், அவர் மகன் மருத்துவர் அன்புமணியின் அரசியல் நடவடிக்கை பற்றிய கேள்விக்கு அளித்த பதிலில், ‘அசிங்கம் என்று ஒரே வார்த்தையில் பதில் கூறாமல்-சி-ங்--ம்என்று பிரித்துப் பிரித்துக் கூறிய பதிலே இது.

மருத்துவர் அய்யா, தான் பெற்ற மகனின் அரசியலுக்குஅசிங்கம்என்ற அடைமொழியைத் தந்தார். நமக்கு எழும் கேள்வியெல்லாம் அன்புமணியின் அரசியல் மட்டுமேஅசிங்கம்என்ற அடைமொழிக்குள் அடங்குமா?

கடந்த பல மாதங்களாக, அதுவும் கடந்த ஒரு மாதமாக நாம் அனுபவித்து வரும் தேர்தல் சூட்டில் குடிமக்கள் எத்தனை வகை அசிங்கங்களைக் கண்டு வருகின்றனர்கண்டும் காணாதிருக்கின்றனரா? அல்லது அரசியல் என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமோ? இதுதான் நியாயமான அரசியலோ? இதைத் தாண்டிய ஒரு நிலையை எதிர்பார்ப்பது அறியாமையின் விளைவோ? என்று கூட எண்ணத் தோன்றினாலும் வியப்பில்லை.

உலகில் தோன்றிய அரசமைப்புள் (Political System) குறைந்த அளவு குறைபாடுகளை உடையதாகச் சனநாயக அரசியலைக் குறிப்பிடுவர். குடிகளைக் குடிமக்களாக்கிய சனநாயகம், குடிகள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையில் (Fact) உருவானது. குடிமக்களை ஆற்றல்படுத்தும் கருவியுள் ஒன்றான தேர்தல், மிகப்பெரிய மதிப்பீட்டை உள்ளடக்கமாகக் கொண்டது. ஆனால், என்ன நடக்கிறது? சனநாயகத்தைக் கிஞ்சித்தும் நம்பாத அரசியல் கட்சிகள், சனநாயகத்தை உறுதி செய்யத் தரப்பட்ட தேர்தல் சனநாயகத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வதன் காரணம் என்ன?

பன்மையைப் போற்றும் சனநாயகத்தை, பன்மைச் சமூகங்களின் சமப்பங்கேற்பை உத்தரவாதப்படுத்தும் தேர்தல் சனநாயகத்தின் உள்ளார்ந்த மகோன்னத்துவத்தைப் புரியாமலே பெறும் வாக்குகளைக் குறிவைத்து நடத்தப்பெறும் தேர்தல் முறை அசிங்கமில்லையா?

மதம், இனம், மொழி என்ற அடையாள வழி மக்களை ஒருங்கிணைத்து, ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் போக்கைஅசிங்கம்என்று தானே அழைக்க முடியும்!?

மதரீதியாக மக்களை அணிதிரட்டி, மதப்பெரும்பான்மையில் உருவாகும் அரசு மதவாத அரசாகும் போது, அது மதப்பெரும்பான்மைவாத அரசாகத்தான் இருக்கமுடியுமென்றால், இப்போக்குச் சனநாயகத்திற்கே அசிங்கமில்லையா? இலங்கையில் சிங்களப் பேரினவாதமும் - இப்படிக் கட்டமைக்கப்பட்ட நாசியின் செர்மனி சொல்லும் கதையும் இதுதானே!

மதச்சிறுபான்மையினரைத் தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி, ஒடுக்கி வரும் நிலையைச் சமயசார்பற்ற சனநாயகச் சக்திகள் ஓயாது எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தபின்பும், கேளாக் காதினராய், தமிழ்நாட்டுக் கட்சிகள் பல கூடா வகையில் ஒன்றியத்தை ஆளும் கட்சியோடு கூட்டணி வைப்பது அழகா? அசிங்கமா? ஆதிக்கம், ஆட்சி அதிகாரம் எனும் இவற்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டொழுகுதல் அரசியல் அறமா? அசிங்கமா?

நடைமுறை வாழ்வில் சாதாரண மக்கள் வாழ்க்கையில் கட்டாயமாக, எவ்விதச் சமரசமுமின்றிக் கடைப்பிடிக்கும் ஒழுக்கநெறிகள் பல உள்ளன. தீமை கண்டு அஞ்சும் மக்கள் வாழ்கின்ற சமூகத்தில், இச்சமூகத்தை ஆளும் உரிமையைப் படைத்தவனே அருளியதாக எண்ணிக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கும் அரசியல் தலைவர்கள், மக்களின் பார்வையில் எப்போதும் ஏதோ ஒரு வெளியில் மக்கள் கண்களுக்குத் தெரிபவர்கள். சமூக ஊடக வழி உலகோர் கண்களில் எப்போதும் காட்சியளிப்பவர்கள். இவர்கள் ஒருவகை ஒளிவட்டத்தில் இருந்தபோதும், உண்மை எனும் உயர் பண்பு இவர்களில் வெளிப்படவே இல்லையே!

அண்மை நிகழ்வொன்றை இந்த அசிங்கப் பண்பிற்கு எடுத்துக்காட்டாய் காட்ட முடியும். அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுதி வரைவுக்கான அரசியல் சாசனத் திருத்தச் சட்ட அறிமுகத்திற்குப் பின் எத்தனையோ தந்திரங்கள் இருந்தன என்று பார்க்கையில், ஆளுங் கட்சியினரின் அசிங்க, அறமற்றப் போக்கினை நாம் அறியமுடியும்.

முதிர்ந்த அரசியலாளருக்குரிய எச்சாயலுமின்றி, எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ள முடியுமோ அவ்வளவு கேவலமாக ஆள்வோர் நடந்துகொண்ட போக்கைக் காணமுடிந்தது. ஏற்கெனவே 2023-இல் நிறைவேறிய பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவைக் கிடப்பில் போட்டுவிட்டு, தொகுதி வரையறைக்கான அரசியல் சாசனத் திருத்தச் சட்டத்தைப் பெண்கள் இடஒதுக்கீட்டோடு இணைத்து ஒன்றிய அரசு நடத்திய நாடகத்தைச் சரியாகக் கணித்த எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து முறியடித்தனர்.

தொகுதி வரையறையின் மூலம் தென்னகம் பாதிக்கப்படும் என்பதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பைக் காட்ட, ஒன்றிய அரசின் காவலர்களாம் பிரதமரும் உள்துறை அமைச்சரும் கிடைத்தத் துருப்புச் சீட்டை எடுத்து, நன்றாகவே விளையாடினர். பா... அரசின் நரித்தனம் அம்பலமாகவே, ‘எதிர்க்கட்சிகள் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தனர்; பெண்களின் சனநாயகப் பங்கேற்பின் எதிரிகள் இவர்கள்என்றெல்லாம் பொய்யாகப் பேசி, அவதூறு செய்து வருகின்றனர்.

தொகுதி வரையறை மூலம் வட மாநிலங்களில் குறிப்பாக, உத்திரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை கடுமையாக உயரும் என்பதைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சுட்டிக்காட்டியதால், இரண்டு நாள்களுக்கு முன், உத்திரப்பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாதலை எதிர்ப்பதாகப் பேசுகிறார்கள். இது என்ன அரசியல்?

தமிழ்நாட்டின் உதயநிதி சில வருடங்களுக்கு முன் சனாதனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த போது, ‘தமிழ்நாட்டு ஆளும் கட்சி, இந்துகளுக்கு எதிரானதுஎன்று திட்டமிட்டு பரப்புரை செய்தனர்.

நமது ஊரகங்களில், அண்டை வீடுகளில்கூட இவ்வளவு தூரம் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்மைகளை நாம் காண்பதில்லை. அன்றாட வாழ்வில் இரு நபர்களுக்கிடையே அல்லது இரு சமூகங்களுக்கிடையே பகை எழுவதும், பகை முரண்களால் சச்சரவு எழுவதும் உண்டு. இம்முரண்களில் உருவாகும் சஞ்சலங்கள் எளிதில் தீர்ந்து போவதையும், தீர்க்கப்பட்டு விடுவதையும் நாளும் நாம் காணும் நடைமுறைகளே. ஆனால், ஒரு நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றிருக்கும் தலைவர்கள் குடிமக்களிடையே சண்டை மூட்டுவதும், அந்தச் சண்டை எனும் தீயை அணையாமல் காத்து, அதில் அரசியல் இலாபம் காண முயல்வதும் அசிங்கமில்லையா?

இவ்வகையான அரசியல் அசிங்கங்களை நாம் நாளும் சந்தித்து வருகின்றோம். அண்மை வரவான விஜய் அவர்களைஜோசப்விஜய் என்று அடையாளப்படுத்திய மதவாதிக்கு அன்று ஒரு நோக்கம் இருந்தது. விஜய்க்கும்ஜோசப்ஆதாயமானதால் தன் பெயரைஜோசப்என்று அழுத்திக் கூறினார். ஜோசப் ஒரு கிறித்தவப் பெயராக இருந்தமையால் கிறித்தவர் வாழும்கிழக்கைதெரிவு செய்கிறார். கிழக்கில் கிறித்தவத் தேவாலயத்தில் இட்ட முழந்தாளின் ஈரம் காயும்முன்னே திருச்செந்தூருக்குத் தனி விமானப் பயணம், அப்படியே மகாராஷ்டிரத்தின் சீரடி பாபா தரிசனம்... ஜோசப் இப்போது கிறித்தவர் மட்டுமல்லர்; சர்வ சமய யோகி! இது என்ன அரசியலோ?

நமது நாட்டில் நம் தலைவர்கள் நடத்தும் கூத்துகளை வெறும்அசிங்கம்என்று கேலிசெய்து, அதன் பின்னுள்ள அரசியலைக் கண்டும் காணாதிருப்பது மாபெரும் தவறு. இதைச் சாதாரணமாக எண்ணி விட்டுவிடமுடியாது; விட்டுவிடவும் கூடாது.