ஏப்ரல் 12, 2026 அன்று, உரோமையில் கூடிய கல்தேய ஆயர் மன்றத்தினால் மேதகு போலிஸ் III நோனா முறைப்படி புதிய பாக்தாத் மறைமுதுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, திருத்தூதரகப் பீடத்துடனான முழுமையான பிணைப்பின் அடையாளமாக ‘திரு அவை உறவு’ (Ecclesiastical Communion) எனும் அங்கீகாரத்தைத் திருத்தந்தை வழங்கியுள்ளார். இது குறித்து திருத்தந்தை எழுதிய கடிதத்தில், ‘கிறிஸ்துவின் இதயத்திற்கு ஏற்ப இறைமக்களை வழிநடத்தவும், நம்பிக்கை மற்றும் அன்பில் அவர்களை உறுதிப்படுத்தவும் உமது மேய்ப்புப்பணி அமையட்டும்’ என வாழ்த்தியுள்ளார். பண்டைய நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் மறைச்சாட்சிகளின் தியாகத்தால் நிரம்பியுள்ள கல்தேயத் திரு அவை, நற்செய்திப் பணியில் தொடர்ந்து கனிகொடுக்கவேண்டும் எனத் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். புனித தோமா உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்த நாளில் இந்தத் தேர்வு நடைபெற்றது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு எனத் திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.