news-details
ஞாயிறு மறையுரை
மே 10, 2026, பாஸ்கா காலத்தின் 6-ஆம் ஞாயிறு - திப 8:5-8, 14-17; 1பேது 3:15-18; யோவா 14:15-21 (பிரியாத உறவு... பிரியமுடன் ஒரு துணையாளர்!)

மானிட வாழ்வில்பிரிவுஎன்பது தாங்க முடியாத ஒரு பெருவலி. அது ஆன்மாவை அலைக்கழிக்கும் கலக்கத்தையும், ஆறாத ஏக்கத்தையும் தரக்கூடியது. நாம் உயிராக நேசிப்பவர்கள் நம்மை விட்டுச் செல்கிறார்கள் அல்லது பிரிகிறார்கள் என்றாலே, ஒருவிதத் திக்கற்ற நிலையும், ஆதரவற்ற உணர்வும் நம்மைச் சூழ்ந்து கொள்ளும். மனித உறவுகள் மட்டுமன்றி, சில நேரங்களில் நாம் நேசித்த பொருள்களும், வாழ்ந்த இடங்களும் கூட நம் உணர்வுகளோடு இரண்டறக் கலந்துவிடுகின்றன. அத்தகைய சூழலில் ஏற்படும் இழப்பு, நம்மை மீளாத்துயரின் ஆழத்திற்கு இட்டுச் செல்கிறது.

ஓர் உயிரையோ அல்லது ஒரு பொருளையோ பிரிவது என்பது இதயத்தில் ஒரு வடுவையும், வாழ்வில் ஈடுசெய்ய முடியாத ஒரு பெரும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிடுகிறது. குறிப்பாக, நம் வாழ்வில் நிபந்தனையற்ற அன்பையும் ஆழமான தோழமையையும் வெளிப்படுத்திய சொந்தங்களைப் பிரிந்தும் இழந்தும் நிற்கும்போது வழிகின்ற கண்ணீர் அந்த உறவின் உன்னதத்தைச் சொல்லும் அர்த்தமுள்ள சாட்சியம். “அந்த உறவு மீண்டும் எப்போது திரும்பும்?” என்று மனம் ஏங்கித் தவிப்பதும் துடிப்பதும் இயல்பே. நம் வாழ்வின் திசையையே மாற்றிய அல்லது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பிரிவு, காலத்தால் ஈடுசெய்ய முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. ஏனெனில், அத்தகைய இழப்புகளுக்கு உலகியல் சார்ந்த எந்த ஆறுதலும் நிகராகாது!

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு நமக்கு ஒரு மாபெரும் வாழ்வியல் ஆறுதலை வழங்குகிறார். அவர் தம் சீடர்களைத் தனிமையில் தவிக்கவிடவில்லை; மாறாக, காலங்கள் கடந்தும் அவர்களோடு நிலைத்திருக்கும் ஒரு தெய்வீக உறவை இன்றைய நற்செய்தியின் வழியாக உறுதிப்படுத்துகிறார். அவர் நமக்காக ஏற்படுத்திய அந்த உறவு, ஒருபோதும் பிரியாதது; நமக்குத் துணையாக வரும் அந்தத் துணையாளர், நம்மை ஒருபோதும் கைவிடாதவர்.

இன்று நாம் உயிர்ப்புக்காலத்தின் ஆறாம் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இந்த ஞாயிறு நமக்கு விடுக்கும் மையமான அழைப்பு யாதெனில், “உங்களை நான் திக்கற்றவர்களாக விடமாட்டேன் (யோவா 14:18) என்பதுதான். இறைவனின் உடனிருப்பு எப்போதும் நம்மோடு நிழலாகத் தொடர்கிறது என்பதை ஆழமாக உணர்ந்து, நம்பிக்கையோடு வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளவே இன்றைய திருவழிபாடு நம்மைத் தூண்டுகிறது.

இயேசு தம் சீடர்களுடன் அமர்ந்து பகிர்ந்துகொண்ட அந்த இறுதி இராவுணவின் பிரியாவிடை உரையைக் கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக இன்றும் நாம் நற்செய்தியாக வாசிக்கிறோம். தாம் தந்தையிடம் செல்லப்போவதை இயேசு முன்னறிவித்த அந்தத் தருணம், சீடர்களை ஆழ்ந்த சோகத்திலும் சொல்லொண்ணாத் துயரிலும் ஆழ்த்தியது. “ஆண்டவர் எங்கே போகிறார்? (14:5) அவர் பிரிந்த பின் நமக்கென்று யார் இருப்பார்? அவர் இல்லாத எதிர்காலம் எப்படியிருக்கும்?” என்ற கேள்விகள் அவர்களை வாட்டியிருக்கக் கூடும். ஏனெனில், இயேசுவின் உடனிருப்புதான் அந்தச் சீடர்களை ஒரு குடும்பமாக இணைத்தது; அவர்களின் துன்பங்களில் அரணாக நின்றது; மனமுடைந்து போகாமல் அவர்களுக்குத் தெம்பூட்டியது.

இந்தச் சூழலில், “நான் தந்தையிடம் போகிறேன் (14:12) என்று இயேசு கூறியது பெரும் ஆற்றாமை உணர்வைச் சீடர்களுக்குத் தந்தாலும், சீடர்களின் கலக்கத்தை உணர்ந்த இயேசு, தேனினும் இனிய ஒரு வாக்குறுதியை அவர்களுக்கு அளிக்கிறார்: “உங்களோடு இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார் (14:16). இந்த வாக்குறுதி என்பது வெறும் வெற்று வார்த்தையல்ல; அது ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்குத் தரும் மிக உயரிய பாதுகாப்பு உறுதிமொழி. இயேசு உடலால் மறைந்தாலும், தூய ஆவியின் வழியாகஇன்றும்நம்மோடு வாழ்கிறார் என்பதே இதன் ஆழமான மையப்பொருள்.

ஆகவே, தம்மை நம்பி இறையாட்சிப் பணி இயக்கத்தில் தங்களை முழுமையாக இணைத்துக்கொண்ட சீடர்களை ஒருபோதும் திக்கற்றவர்களாகத் தான் விடுவதில்லை என்பதை இயேசு மிக உறுதியாகக் கூறுகிறார். தந்தையிடமிருந்து தாம் அனுப்புகின்ற துணையாளர் அவரின் பிரிவை உணராவண்ணம் சீடர்களைத் தேற்றுவார்; ஒரு தாயைப்போல அருகிலிருந்து ஆறுதலளிப்பார்; கடினமான பாதைகளில் சோர்ந்துவிழாதபடி ஆற்றல் தருவார்; தங்களுக்காகப் பரிந்து பேசுவார்; எந்தவொரு சூழலிலும் முடிவெடுக்கத் திணறித் தடுமாறும்போது, அந்தத் துணையாளரே தெளிவான ஆலோசனைகளை வழங்கி வழிநடத்துவார். தாம் போதித்த உண்மைகளை அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி, தமது இறையாட்சிப் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அந்தத் தூய ஆவியானவரே உந்துசக்தியாகத் திகழ்வார் என இயேசு மாபெரும் நம்பிக்கையளிக்கிறார்.

இயேசு வாக்களித்த இந்தத் துணையாளரின் உடனிருப்பு வெறும் அக உணர்வு மட்டுமல்ல; அது செயலில் வெளிப்பட வேண்டிய ஒன்று. ஆண்டவருடைய விண்ணேற்றம் (பிரிவு) என்பது மீட்புத் திட்டத்தில் நிகழ்ந்தே தீர வேண்டிய ஒரு கட்டாயம். அந்தப் பிரிவிற்குப் பிறகு இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடரவேண்டிய பெரும் பொறுப்பு அவரைப் பின்பற்றிய சீடர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. இதனை இன்றைய முதல் வாசகத்தில் பிலிப்பு ஆற்றிய நற்செய்திப் பணி தெள்ளத் தெளிவாக நிரூபிக்கிறது. சமாரியருக்கும் யூதருக்கும் இடையே நீடித்த கடுமையான பகைமையையும் மீறி, இயேசு காட்டிய அதே அன்புப் பாதையில் பிலிப்பு பயணிக்கிறார். தூய ஆவியின் ஆற்றலால் ஈர்க்கப்பட்ட பிலிப்பு, பிணிகள் தீர்த்தும், தீய ஆவிகளை விரட்டியும் சமாரியாவிற்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறார்.

இவ்வாறு, இயேசுவின் உடல்சார்ந்த பிரிவு, தூய ஆவியின் வழியாக ஓர் உலகளாவிய நற்செய்திப் பணியாக உருவெடுக்கிறது. அன்னை தெரேசா கூறுவது போல, “ஆண்டவர் நம்மைப் பயன்படுத்துவதற்கு நாம் வெறும் கருவிகளாக மட்டுமே இருக்கிறோம். அந்தத் தூய ஆவியானவரே நம்மை இயக்கும் ஆற்றல்.பிலிப்புவைப் போல நாமும் அந்தத் துணையாளரின் குரலுக்குச் செவிசாய்க்கும்போது, நம் வாழ்வும் பிறருக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியாக மாறுகிறது.

நிறைவாக, இன்றைய நாள் நமக்கு வழங்கும் இறைச்செய்தி என்ன? ஆண்டவர் இயேசு, “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால்...” (14:15) என்று தொடங்கும்போதே, அன்பு என்பது வெறும் வார்த்தைகளோ அல்லது உணர்ச்சிகளோ அல்ல; அது செயலில் வெளிப்பட வேண்டிய ஒரு மாபெரும் சக்தி என்பதை உணர்த்துகிறார். முதலில், நாம் இறைவனை நேசிக்கிறோம் என்பதற்கு மிகச்சிறந்த அடையாளம், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதுதான். புனித அன்னை தெரசா கூறியதுபோல, சிறிய காரியங்களைச் செய்தாலும், அவற்றை மிகுந்த அன்போடு செய்யவேண்டும். இறைக்கட்டளைகளை நம் அன்றாட வாழ்வில் செயல்படுத்துவதன் மூலமே நாம் உண்மையான சீடர்களாகிறோம். தாழ்ச்சியான கீழ்ப்படிதலே நம்மைத் தூய ஆவியின் வழிநடத்துதலுக்குத் தகுதியுள்ளவர்களாக்குகிறது.

இரண்டாவதாக, ஆண்டவர் இயேசு சீடர்களுக்கு வழங்கிய மிக உன்னதமான வாக்குறுதி, “உங்களுக்குத் துணையாளராம் தூய ஆவியைப் பெற்றுத்தருவேன்என்பதாகும். இந்தத் தூய ஆவியானவர்உண்மையை வெளிப்படுத்துபவர் (14:17). உலகம் பெரும்பாலும் குறுக்கு வழிகளையும், பொய்மையின் கவர்ச்சிகளையும் காட்டி நம்மைத் திசைதிருப்ப முயலும். அத்தகைய சூழல்களில், நாம் உலகப்போக்கின் பின்னால் செல்லாமல், நமக்குள் ஒலிக்கும் துணையாளரின் மெல்லிய குரலுக்குச் செவிசாய்க்கவேண்டும். உலகம் உண்மையை ஏற்க மறுக்கும் போதும், நாம் நேர்மையின் அடையாளமாகத் திகழவேண்டும். உண்மைக்காகத் துயரங்களை ஏற்கும்போது, அந்தத் தூய ஆவியானவரே நமக்குத் துணையாக நின்று ஆற்றல் தருகிறார். இறுதியில், அந்த உண்மையே நமக்கு விடுதலையையும் நிலையான வாழ்வையும் அளிக்கும் (8:32).

மூன்றாவதாக, இன்று நாம் வாழும் சூழலில், உறவுகளின் பிரிவாலும், எதிர்பாராத உயிரிழப்புகளாலும் நிலைதடுமாறி, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் பல சகோதர சகோதரிகளைச் சந்திக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியானவரைப் பெற்றிருக்கிறோம் எனில், அந்த ஆவியின் கனிகளை நம் வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும். அதாவது, துயருறுவோருக்கு ஆறுதல் அளிக்கும்துணையாளராகவும், திக்கற்றவர்களுக்குப்பாதுகாப்பாளராகவும், ஒடுக்கப்பட்டோருக்காக இறைவனிடம்பரிந்து பேசுபவராகவும்நாம் மாறவேண்டும் என்பதே அதன் பொருள். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பேதுரு அறிவுறுத்துவது போல, நாம் எப்போதும் கனிவோடும் மரியாதையோடும் நடந்து கொள்ளவேண்டும். தீமைக்குத் தீமை செய்யாமல், அநீதி இழைப்போரையும் கிறிஸ்துவின் மேலான அன்பால் வென்று, நம் செயல்கள் மற்றும் அணுகுமுறைகள் வழியாக உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அறிவிப்பதே நமது வாழ்நாள் கடமையாகும்.

இறுதியாக, “திக்கற்றவர்களாகஇனி நாம் கலங்க வேண்டியதில்லை. நமக்குள் குடிகொண்டு நம்மைத் தாங்கிப் பிடிக்கும் அந்தத் துணையாளரின் ஆற்றலோடு, நம்பிக்கையின் மக்களாகவும், கிறிஸ்துவின் அன்பிற்குச் சான்றுகளாகவும் உலகிற்கு முன்செல்வோம். எத்தகைய சோதனைகள் வந்தாலும், ஒருபோதும் பிரியாத நம் தெய்வீகத் துணையாளர், மிகுந்த பிரியமுடன் நம் ஒவ்வொரு காலடியையும் வழிநடத்தட்டும். அவரின் உடனிருப்பு இன்னும் வலுவாக நம்மில் வெளிப்படட்டும்.