நண்பரின் அமைதியான, அழகான குடும்பம். ஒரு பையன், ஒரு பெண். எப்போதும் புன்சிரிப்பு மாறாத அந்தப் பெண் குழந்தையின் முகத்தை இன்றளவும் மறக்க முடியவில்லை. கல்லூரிப் படிப்பு முடிந்த கையோடு திருமணம் நடந்தது. மாப்பிள்ளை ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். மளமளவென்று பதவி உயர்வும் பெற்றிருந்தார். லக்னோவுக்கு மாற்றல் வந்தது.
வாரம்
முழுமையும் கடும் வேலை. சனி, ஞாயிறு வந்தவுடன் ஊர்சுற்றல். புது மனைவியும் அவருடைய
சுறுசுறுப்புக்கு ஈடு கொடுத்து வாழப் பழகிக்கொண்டார். எல்லாம் ஒரே ஒரு வருடம்தான்.
ஒரு வார விடுமுறைக்கு டேராடூன் போனார்கள். விடுமுறை முடிந்து இரவோடு இரவாக மலையிலிருந்து
காரில் கீழே இறங்கினார்கள். கார் விபத்துக்கு உள்ளானது. பக்கத்திலிருந்த மனைவியை -
அந்தப் புன்னகைப் பூவைப் பறிகொடுத்தார். காரை ஓட்டி வந்த அவர் பலத்த காயங்களோடு உயிர்
தப்பினார். ஓர் இனிய குடும்பம் இடையிலேயே சிதைந்துபோனது.
இந்த
இளைஞர் மட்டுமல்ல, இன்று பல பெற்றோர், பிள்ளைகளும் இன்று மிகவேகக் குணத்தோடு (Hyper active) வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். பிறக்குமுன்
பள்ளியில் இடம், வேகமாக வளர்வதற்காக உணவுத் திணிப்பு, படித்து முடிக்குமுன் செல்போன்,
ஸ்கூட்டர், பைக், சம்பாதிக்கும் முன் செலவு. கடன் தொல்லை. பொறுமையில்லாத, நிதானமில்லாத,
விட்டுக்கொடுக்க மனமில்லாத நிலையில் காதல், குடும்ப வாழ்க்கை. நினைத்துப் பார்க்கும்
முன் விவாகரத்து. பள்ளிப்பருவத்திலேயே இனக் கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம்
தெரியாதபோதே காதல், கல்யாணமாகாத தாய், தனிமையில் குழந்தையோடு தவிக்கும் மனைவி. வேகம்
வேகமாகப் பணம் தேடும் அவசரம். கடன், ஊழல், ஏமாற்று வேலைகள், பின்னால் வம்புகள்!
நாம்
மேலே பார்த்ததைப் போல அவசரக்காரர்கள் தங்களை மட்டும் கெடுத்துக்கொள்வதில்லை; தங்களைச்
சுற்றி தங்களைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, மக்கள், பிள்ளை, நண்பர்கள் என்று
எல்லாரையும் அவதிக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். ஒரு வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடிப்படை
நல்ல சிந்தனையும் ஆக்கப்பூர்வமான செயல்களும்தான். சிந்தித்துச் செயல்படவேண்டும்; செயல்பாட்டின்
விளைவை மதிப்பிடவேண்டும்.
இன்று
நம்மிடையே சிந்திக்கவும் மறுத்து, செயல்படவும் மறுத்து, அரைத் தூக்கத்தில் வாழ்பவர்கள்
ஏராளமாக உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். இனிப்பும் கொழுப்பும் நிறைந்த உணவு; தொலைக்காட்சிப்பெட்டிக்கு
முன்னால் நிரந்தரத் தவம்; அப்போதும் அரைத் தூக்கம். இல்லாவிட்டால் செல்போன் உரையாடல்.
விடியலை ஒரு நாளும் பார்த்திராத காலை தூக்கம். இதன் விளைவு? தொடரும் பசி, மிகை எடை,
இளமையில் சர்க்கரை நோய், இதய நோய், கால் வலி, கை வலி... அமெரிக்காவில் தலையான சுகாதாரச்
சிக்கலே மிகை எடை சார்ந்த சிக்கல்தான் என்கிறார்கள். நம்மைச் சுற்றியும் மிகை எடை இளைஞர்களுக்கும்
இளம் பெண்களுக்கும் பஞ்சம் ஒன்றுமில்லை. நம்மிடம் செயல் வேகம் இருக்கிறது. இளமை வேகம்
சக்தி வாய்ந்தது. எதையும் சாதிக்க வல்லதுதான். ஆனால், இந்தச் செயல்வேகம் காட்டாறாக
மாறிப்போனால் பயனில்லை. அது சிந்தனை அணைக்கட்டில் அடங்கி நின்று நிதானித்துச் செயல்படவேண்டும்.
இளையோரின்
அதிவேகச் செயல்பாடுகள் பற்றி ஏராளமான உளவியல், நரம்பியல், மூளையியல் சார்ந்த ஆய்வுகள்
நடைபெற்று வருகின்றன. பிறவியிலேயே இந்தக் குறைபாட்டுடன் சிலர் வந்து சேரக்கூடும். அவர்களைச்
சிறு வயதிலேயே சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். இவர்களுக்கு உளவியல், நரம்பியல்
சார்ந்த மருத்துவ வசதிகள் நிறையவே கிடைக்கின்றன. ஆனால், நம்மில் பெரும்பாலோர் சமூகச்
சூழலில் இருந்துதான் இந்த அவசரப் பயணத்தைக் கற்றுக்கொள்கிறோம். நிதானச் சிந்தனை, நிதானச்
செயல், நிதான மதிப்பீடு, செலவு, சேமிப்பு, நல்லுறவு. நம்மால் இந்தப் பழக்கத்தை நிச்சயம்
வளர்த்துக்கொள்ள முடியும். சவால்தான்... சந்திப்போம், வெற்றி பெறுவோம்! இன்றைய உலகம்
அவசர கதியில் அவதிப்படுகிறது. அதன் அசுர வேகத்தில் சிக்கிக்கொள்ளாமல் நாம் ஒவ்வொரு
நாளும் நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுவோம்.