news-details
சிறப்புக்கட்டுரை
‘இறை ஊழியர்’ அன்னை ஸ்கொலாஸ்டிக்கா

இயேசுவின் திரு இருதய சபையின் நிறுவுநர் அன்னை ஸ்கொலாஸ்டிக்கா ஒரு மாபெரும் சகாப்தம். ஒரு புதிய வரலாறு. எண்ணற்றவரின் வாழ்வை, பயணத்தை, பாதைகளை இன்றும் மிக நெருக்கமாகப் பாதித்து வழிநடத்தும் உன்னதக் கொடை!

ஒரு குறுகிய காலத்தில் ஆண்டவன் மீதுள்ள அணையாத தாகத்தால் ஒரு மாபெரும் சபையை ஆரம்பித்துப் பணிசெய்தவர். இன்று தென்னகம் போற்றும் தேவதையாக எல்லார் முன்பும் உயர்ந்து, எண்ணற்றவர்களின் உள்ளத்தைக் கவர்ந்து நிற்கிறார். இவரது வாழ்வும் நற்பண்புகளும் அசாதாரணமானவை என்பது பலரும் பாராட்டும் நிதர்சனமான உண்மையும், மிகையேதும் இல்லாத தரவுமாகும்.

இந்தியத் துணைக் கண்டத்தின் தென்முனை குமரி மாவட்டம் எழிலானது; கடலும் குன்றுகளும் வயலும் குளங்களும் நிரம்பியது. இந்த அழகிய நிலத்தின் மையம் நாஞ்சில் நாடு. இயற்கை வளம் கொழிக்கும் இந்த நிலத்தில் உள்ளது அன்னை பிறந்த ஊரான பட்டரிவிளை. 1917-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் நாள் திருவாளர் சவரிமுத்து-சவரியாயி தம்பதியரின் நான்காவது கனியாக அன்னை பிறந்தார்.

அன்னையின் குடும்பம் பெரியது. ஏழு குழந்தைகள். பங்கு ஆலயத்தை அடுத்த, இதய ஆண்டவர் ஆட்சி செய்யும் அழகான இல்லம் இவர்களுடையது. இளமையிலிருந்தே கல்வி, ஆலயம், வழிபாடு, பிறருக்கு உதவுதல் போன்றவை அன்னையின் வாழ்வை அழகு செய்தன.

உயர் கல்வி முடிந்ததும் இறைவன் இவரை அழைத்தார். 1939-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்ற அன்னையைப் புனித அகுஸ்தினார் சபை அன்போடு அரவணைத்தது. 1941-ஆம் ஆண்டு முதல் வார்த்தைப்பாடு முடிந்தது. தொடர்ந்தது ஆசிரியர் பணி, நற்செய்தி அறிவிப்புப் பணி, ஆலயப் பணி, அன்புப்பணி. ஏழையர் பணியில் இறைவனைக் கண்டு இன்புற்று மகிழ்ந்தது அன்னையின் துறவு வாழ்வு.

தூய அகுஸ்தினார் சபைத் துறவியாக வாழ்ந்த காலத்திலேயே அன்னையிடம் மிளிர்ந்தது அசாதாரண தலைமைப் பண்பு. பள்ளியாடி தொடக்கப்பள்ளி இதற்கு ஒரு சிறந்த சான்று. திடீரென அங்குத் தொடங்கியது ஒரு பெரிய மாணவர் பிரச்சினை. ‘கிறித்தவப் பள்ளிகளில் மற்ற மதத்தினரைச் சேர்க்கக்கூடாதுஎன்று ஒரு புதிய சட்டம். பல பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதைத் தவிர்த்தார்கள். ஏற்கெனவே சேர்ந்தவர்கள் பள்ளியில் இருந்து விலகினார்கள். திணறியது பள்ளியின் தலைமை நிர்வாகம். உடனே அன்னையின் உதவியை அணுகினார்கள். விரைவில் மீண்டும் பள்ளியாடியில் பணியமர்த்தப்பட்டார் அன்னை. அன்னையின் பேச்சும் கனிவும் அனைவரையும் கவர்ந்திழுத்தன. சில வாரங்களிலேயே பிரச்சினைக்குத் தீர்வு கண்டார் அன்னை. அனைவரும் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினர். இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அன்னையின் உதவியால் பள்ளி மீண்டும் வேகமான வளர்ச்சியில் வெற்றி நடைபயின்றது.

புதிதாக வந்தது ஒரு பெரும் புயல். அதன் வேகம் கட்டுக்கடங்காதது. இந்திய விடுதலையும் ஐரோப்பியர் வெளியேற்றமும் இதற்குக் காரணங்கள். ஐரோப்பியர் அதிகமாக ஆக்கிரமித்திருந்த புனித அகுஸ்தினார் சபையில், இந்தியச் சகோதரிகளின் நிலை இரண்டாம் நிலை. வெளியேறலாம், வேறு சபையில் சேரலாம், இல்லை இருக்கும் நிலையில் தொடரலாம் என்ற ஒரு பரிதாப நிலை.

இறைவனை நாளும் நெஞ்சில் சுமந்து பணி வாழ்வு பற்றிப் பல கனவுகள் கண்ட இந்தியச் சகோதரிகளின் துறவு வாழ்வு பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. இந்தப் பேரிடி அன்னையின் உள்ளத்தில் ஏற்படுத்திய மீளாத் துயரம் பெரிதானது. புயலடித்தபோது தோன்றிய புதிய கனல்தான் புதிய சபை. அது அணையாத தீபமாக இன்று அவனியையே ஆட்கொண்டு இதய சபையாக, இதய ஆண்டவரின் அன்பு ஆட்சி, அரசு வளர உலகின் பல பாகங்களில் பணியாற்றி வருகிறது.  

(தொடரும்)