news-details
சிறப்புக்கட்டுரை
இது என்ன அரசியல்?

தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் வலுவான பலத்துடன் அமர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சியை நாம் விரும்பினோம் அல்லது எதிர்த்தோம் என்பது இப்போதைய அரசியல் ஆய்வுக்குத் தேவையற்ற ஒன்று என்றே கருதவேண்டியுள்ளது. நாடாளுமன்றச் சனநாயக முறைமை தந்த வெளியைப் பயன்படுத்தி ஆட்சியேற்றிருக்கும் இவ்வரசை வாழ்த்தி அமைவதைத் தவிர்த்து, குடிமக்களுக்கு வேறு என்ன மாற்று இருக்க முடியும்?

எண்பதுகளுக்குப் பின் மண்டைக்காடு மதக் கலவரத்தைத் தொடர்ந்து தமிழ் மண்ணில் வேகமாகக் காலூன்றத் தொடங்கிய காலம். ‘புரட்சித் தலைவர்என்று பாராட்டப்பட்ட எம்.ஜி.ஆரும், அவரைத் தொடர்ந்து அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட செல்வி செயலலிதாவும் தமிழ்நாட்டை ஆளும் பொறுப்பேற்ற காலம். இவ்விருவரும் ஆட்சி செய்த காலத்தை இன்றைய கட்சியினர் பலரும்தமிழ்நாட்டின் பொற்காலம்என்று போற்றிப் புகழ்ந்தாலும், மற்றுமோர் உண்மையை நாம் ஏற்றாகவேண்டும். இவ்விருவரின் ஆட்சியினூடே இந்து வகுப்புவாதம் மெல்ல மெல்ல தமிழ்நாட்டிற்குள் ஊடுருவுவதற்கான வெளியும் உருவாயிற்று என்பதனையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும்.

இவர்களின் மென்மைப் போக்கினால் தமிழ்நாட்டில் ஊடுருவிய வகுப்புவாதிகளுக்குப் பெரிய நியாயத்தை (Legitimacy) வழங்கிய பெருமையைச் சேர்த்தவர் கலைஞர். இந்நிகழ்வை எடுத்துக்கூறக் காரணம் ஒன்றுண்டு. ‘வகுப்புவாதம் தமிழ்நாட்டில் வலுவாகக் கால்பதித்து, தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றுமானால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்வியை அன்றைய மதுரைப் பேராயரிடம் ஊடக நண்பர்கள் எழுப்பியபோது, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா?  “சனநாயக முறைமையில் தேர்வு செய்யப்பட்ட அரசு எதுவாயினும் ஏற்றுக்கொள்வோம்என்றார்.

ஒரு சமயத்தின் தலைவர் தன் இறுதிக்காலம் வரை வகுப்புவாத நச்சு தமிழ்நாட்டில் புகுந்து விடக்கூடாது என்று துடிப்போடு போராடி வந்தவர்அப்போராளியின் பதிலே இன்று சனநாயக முறைமையில் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிக் கட்டிலில் ஏறியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பொருந்துமல்லவா!

என்ன தயக்கம்?

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியின் வெற்றி சனநாயக முறைமையில் அமைந்ததென்றாலும், இது சனநாயகத்தின் வெற்றியாகக் கருதிட முடியுமா? சனநாயகப் பண்புகள் அல்லது அதன் நுண்மையான விழுமியங்கள் இச்சனநாயக வழி தேர்தலில் முன்னெடுக்கப்பட்டனவா? என்ற கேள்வியும் எழுந்தால் அதனை எப்படி மறுக்க முடியும்?

முடிந்த தேர்தலைவிட்டு விடுவோம். தேர்தல் முடிந்து, நாம் எதிர்பார்த்த கட்சி வெற்றி பெறாதபோது, வெற்றி பெற்ற கட்சிக்குரிய பெரும்பான்மை கிடைக்காதபோது, மதச்சார்பற்ற கூட்டணி என்று  நாளும் உச்சரித்து, தோழமை கொண்டு அணி சேர்ந்திருந்த கூட்டணியின் தலைமைக் கட்சியைஅம்போஎன்று கைவிட்டு, .வெ..வைத் தழுவிக் கொண்டதில் என்ன தர்மம் இருக்கிறது?

மதவாதச் சக்திகள் ஆதாயம் பெற்றுவிடக் கூடாது; பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஆளுநர் ஆட்சி மூலம் பாரதிய சனதா ஆட்சியின் ஆளுமை நுழையக்கூடும் என்ற அச்சத்தில் நியாயம் இருக்கலாம். திரு. ஜோசப் விஜய் என்ற மனிதருக்கு, இவர்களெல்லாம் கவலைப்படுவதுபோல் பாரதிய சனதாவைப் பற்றிய கவலை இருந்ததுபோல் தெரியவில்லையே! திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்டாலின் அவர்களைஅங்கிள் ஸ்டாலின்என்றும், இன்னும் பல அடைமொழிகளாலும் ஏளனம் செய்த ஜோசப் விஜய், தன் வாயினின்றுமோடிஎன்று ஒரு பெயரை ஒருமுறைகூட உச்சரித்திருப்பாரா? தன் கொள்கை எதிரியாக அறிவித்த விஜய், பாரதிய சனதாவின் எந்தக் கொள்கையை விமர்சித்தார்?

நாட்டின் இடதுசாரி இயக்கங்களும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அறிவுசீவிகளும் இந்நாட் டின் ஒருமைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக வளர்ந்து வரும் மதவாத அரசியலை, அவ்வரசியல் முன்வைக்கும் சவால்களைக் கண்டு கவலைப்பட்டுவரும் வேளையில், தமிழ்நாட்டை ஆளும்  அரசை, அவ்வரசை ஆளும் கட்சியைதீய சக்திஎன்று வர்ணித்துத் தேர்தலில் வீழ்த்திய .வெ..வின் ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியைக் கவிழவிடாது காக்கப் போவதாகப் பறைசாற்றி, காவலர் பணி மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியினரின் நிலைப்பாட்டைக் கேள்வியெழுப்பாமல் ஏற்றுக்கொள்ள முடியுமா?

இக்கட்சியினர் ஆதரவு இல்லையெனில் ஆளுநர் ஆட்சியாம்! ஆளுநர் ஆட்சியெனில் பா... ஆட்சியாம்! ஆட்சி கவிழ்ந்தால்  கவிழட்டுமே! கவிழ்ந்தால் மறுதேர்தல் நடக்கட்டுமே! பா... என்ற பூச்சாண்டி, ஆளுநர் ஆட்சி என்ற பூச்சாண்டி, மறு தேர்தல் என்ற பூச்சாண்டி!

கொள்கையெனும் முதலீடு எதுவுமற்ற ஒரு கட்சி; எவ்வித இலக்கும் நோக்குமற்ற ஒரு கூட்டம்; வெறும்மாற்றம்என்ற வெற்று முழக்கத்தை மட்டுமே முன்வைத்து அரசியல் செய்கின்ற ஒரு கூட்டம்; இச்சதி வலையில்தாமேஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்து, ‘சுயநல நோக்கோடுவீழ்ந்து கிடக்கின்ற அவலத்தைச் சந்தித்து வருகிறோம். இக்கட்சியின் தோற்றம் சந்தேகத்திற்குரியது. இக்கட்சியின் ஆட்சி, தமிழ்நாட்டின் மிகப் பெரிய சோகமாகத்தான் இருக்கும். இக்கட்சி அமைக்கும் ஆட்சி நிலைக்க இக்கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளித்ததாகச் சொல்லப்பெறும் காரணங்களுள் உண்மை கொஞ்சம்கூட இல்லை என்பதை வரலாறு சொல்லும்.

கொள்கைத் தெளிவுள்ளவராகக் கருதப்பெறும் திருமாவளவனின் பேச்சில் சறுக்கல் தெரிகிறது என்பதை அண்மை நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்ட நெடிய அரவணைப்பில் நடைபோடுவதாகச் சொல்லப்பெறும் இந்திய யூனியன் முசுலிம் லீக், மேற்கண்ட முழக்கங்களை முன்வைத்து அமைச்சரவையிலும் இடம்பெறுகிறது. தம் ஆதரவை உறுதிப்படுத்தும் இடதுகள், .தி.மு.. கூட்டணிக்குள் இடம்பெற்றால் ஆதரவு இல்லை என்ற ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. இந்நிலைப்பாடும் விந்தையானதே! தாமே ஓடோடிச் சென்று ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி மௌனித்திருந்தால், .வெ.. என்ன செய்திருக்கும் என்பதை அரசியல் அறிவே இல்லாதோர்கூட அறிவர். இவர்களின் ஆதரவு நிலையிலும் கூட .தி.மு..வைப் பிளவுபடச் செய்து, அவர்களின் ஒரு பிரிவின் ஆதரவை நாடியதும்விஜய் விரைந்தோடி சண்முகம் மற்றும் வேலுமணியை வாழ்த்தச் சென்றதையும் பார்த்தோமே!

பாரதிய சனதாவின் ஆதரவை ஏற்பதும், .தி.மு..வை ஏற்பதும் வேறு வேறல்லவே! பாரதிய சனதா கட்சியினர் ஆதரவை விஜய் ஏன் ஏற்கவில்லை? அக்கட்சியினரிடம் எண்ணிக்கை இல்லை, எண்ணிக்கை பலம் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

சட்டமன்றத்தில் பாரதிய சனதா இல்லை என்பது மகிழ்வைத் தரும் செய்தியே! குறிப்பிட்ட எண்ணிக்கை இருந்திருப்பின் விஜய் அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டிருக்கும். ஏற்கெனவே கூறியது போன்று .தி.மு..வின் ஆதரவைப் பெறுவதற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. பாரதிய சனதாவின்நட்புக் கட்சிஎன்று தி.மு.. கூட்டணியால் ஏற்கெனவே பட்டம் கட்டப்பட்ட எடப்பாடியாரின் .தி.மு..வை இரண்டாக்கி ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியென்பது ஏற்கெனவே நாடு முழுவதும் பாரதிய சனதாவின்  நடவடிக்கைகளுள் ஒன்றுதானே! தனக்கு முழுப் பெரும்பான்மை இல்லாத நிலையில், கொள்கையற்ற .தி.மு..வை ஆசைகாட்டி, இரண்டாகப் பிளக்கச் செய்து, ஆட்சியைத் தக்கவைக்கும் செயல் கீழ்த்தரமானது.

தோல்வியடைந்த தி.மு.. கூட்டணி, வலுவான கூட்டணி என்று சொல்லப்பட்ட கூட்டணி. இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல; தேசிய அளவில் கூட்டப்பட்டஇந்தியாகூட்டணியின் ஒரு பெரிய அங்கம். தி.மு.. கூட்டணிக் கட்சிகள் கொள்கைக் கூட்டணிகள் என்று மக்களால் நம்பப்பட்டு வந்த நிலையில், ஒரு புதிய மாற்றுக் கட்சியொன்று அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை என்பதற்காக இதுவரை காத்து வந்த அரசியல் நிலைப்பாட்டை ஏதோ ஒரு காரணம் கண்டுபிடித்து  நகர்ந்து செல்வது அரசியல் நாகரிகம் அல்ல. தேசிய அளவில் மதவாத எதிர்ப்பு சக்திகளின் பலத்தை வலுவிழக்கச் செய்யும் செயலாகும்.

புதிய தோற்றமாம் .வெ..வின் ஆதரவு நிலைக்கு எத்தனையோ காரணங்களைத் தி.மு..வின் கூட்டணிக் கட்சிகள் கூறலாம். ஆனால், இக்கட்சிகளின் நகர்வு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனிமைப்படுத்திவிடும். கூட்டணிக் கட்சிகளின் அரவணைப்பில் கொள்கை பலத்தோடு உறுதியாக நின்ற திராவிட முன்னேற்றக் கழகம் தனிமைப்படுவது தமிழ்நாட்டில் திராவிட அரசியலுக்கு உகந்ததல்ல.

தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதும் அல்ல; எனினும், வடவாரியத்தின் எதேச்சதிகாரப் போக்கை, மொழித் திணிப்பை, கூட்டாட்சியை மறுப்பதை, மாநிலங்களைப் பாகுபடுத்துவதை, மதத் தீவிரவாதத்தை எதிர்த்தல் எனும் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்ப்பதில் ஸ்டாலின் காட்டிய தீவிரம் பாராட்டிற்குரியது. தேர்தலில் தானெடுக்கும் போராட்டத்தை டெல்லிக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டி இவர் நடத்திய போர் முழக்கம் புதுமையானது. எனவேதான் தமிழ்நாட்டுத் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய சனதாவின் அனைத்துப் பெருமுகங்களும் தோற்றுப் போயின. ‘தேசிய சனநாயகக் கூட்டணிஎன்று பெருமையோடு அழைத்துக்கொண்ட இக்கூட்டணி அடையாளம் தெரியாமல் காணாமற்போயிற்று.

தமிழ்நாட்டுத் தேர்தல் இப்படியொரு நம்பிக்கையை அளித்தாலும், தேர்தல் முடிந்த நிலையில் .வெ.. எனும் கட்சியின் ஆட்சி நீடிக்க, தி.மு..வின் கூட்டணிக் கட்சிகள் ஏதோதோ காரணம் கூறி ஆதரவளித்த செயல் வெறும் வரலாற்றுப் பிழையேகூட்டணிக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவு கொள்கை வழிப்பட்டதல்ல; இவர்கள் ஆதரவு இல்லையெனில் .வெ.. எனும் கட்சியின் எக்கொள்கை மரித்துப் போகும் என்று இவர்கள் அஞ்சினர்?