மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை
நீடுவாழ் வார் (குறள் 3)
குறள் விளக்கம்
அன்பரின்
அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்,
இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சிந்தனை
ஒரு
சிறு மெழுகுதிரியை இரவில் எடுத்துக்கொண்டு ஒருவர் படிக்கட்டில் ஏறிச் செல்லும்போது,
“எங்கே என்னை எடுத்துச் செல்கிறாய்?” என்று மெழுகுதிரி கேட்டது. பதிலாக “வீட்டின் மேற்தளத்திற்கு
என்னோடு வா; கப்பல்கள் துறைமுகத்தை அடைய வழி காண்பிக்கப் போகிறேன்” என்றார் அவர்.
“என் ஒளி மிகச்சிறியது. கப்பல்களைப் பார்க்க முடியாதே” என்றது திரி.
“அதனை
நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று ஆறுதல் கூறி, ஒளி பிரதிபலிக்கும்
கண்ணாடி முன் மெழுகுதிரியை வைத்தார். அதன் ஒளியோ கடலில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு
ஒளிவிட்டுக் கொண்டிருந்தது.
நாம்
இறைவனின் மெழுகுதிரிகள். இறைவனோடு இணைந்து அவர் விரும்பும் வகையில் பிரகாசிப்பதே நமது
பணி.
இறைவன்
எப்பொழுதும் நம் உள்ளமாகிய மலரில் பிரசன்னமாக இருக்கிறார். அவரின் அடி பணிந்து வாழ்பவர்கள்
எந்தக் குறைவுமின்றி நிறைமகிழ்வுடன் இவ்வுலகில் பிரகாசித்து வாழ்வர்.
“நான்
திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள்; ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால்
அவர் மிகுந்த கனி தருவார்; என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது” (யோவா 15:5).
இறைவனை
நம் உள்ளத்தில் இருத்தி, அவரோடு இணைந்த வாழ்வு வாழவேண்டும். இறைவனைப் பிரிந்து வாழ்ந்தால்
நாம் வேரற்ற கிளையாகத் துண்டிக்கப்படுவோம்.
எப்படி
இறைவனாகிய கண்ணாடியில் பட்டு ஒளி பிரகாசிக்கிறதோ அல்லது செடியோடு இணைந்த திராட்சைக்
கொடி செழித்து வளர்கிறதோ அதுபோல் இறையுறவில் வளமான மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.
இதனையே
நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், “ஒன்றோடொன்று தொடர்புடைய அயலார், ஆண்டவர்,
இயற்கை என அடிப்படையான மூன்று உறவுகளில் வேரூன்றி நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது
மனித வாழ்வு” என்று ‘புகழனைத்தும் உமதே’ என்னும் சுற்று மடலில் எண்-66-இல் குறிப்பிட்டுள்ளார்.
இறைவனை
இதயத்தில் வைத்து, அருகில் இருப்போருடன் அன்பைப் பொழிந்து, இயற்கையோடு ஒன்றிணைந்து
வாழவேண்டும் என்று கூறுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகவே,
இறைவனோடு இணைந்திருப்போம்; இன்பமாக வாழ்வோம்.