news-details
தலையங்கம்
சமூக ஊடகப் போராளிகளின் (Virtual Warriors) போலிப் பிம்பங்களும் பொய்யான கட்டமைப்புகளும்

இன்றைய இந்திய அரசியலிலும், உலகளாவிய சமூகக் கட்டமைப்பிலும்சமூக ஊடகங்கள்என்பது வெறும் தகவல் பரிமாற்றக் கருவியாக மட்டும் இல்லாமல், பொதுமக்களின் எண்ண ஓட்டத்தை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த தொழிற்சாலையாக உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல!

முன்பெல்லாம், ஒரு தலைவரின் தகுதி என்பது அவரது களப்பணி, தியாகம் மற்றும் கொள்கை விளக்கக் கூட்டங்கள் வாயிலாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இன்றுமெய்நிகர் போராளிகள் (Virtual Warriors) எனப்படும் எண்ணிமத் தொழில்நுட்பப் (டிஜிட்டல்) போராளிகள், ஒரு தனிமனிதனை ஒரே இரவில் மகாத்மாவாகவும், அடுத்த இரவிலே துரோகியாகவும் சித்தரிக்கும் வல்லமையைப் பெற்றுள்ளனர். இந்த மெய்நிகர் போர்வீரர்கள் கட்டமைக்கும் பிம்பங்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை? அவர்களின் சமூக-அரசியல் பொறுப்புணர்வு என்ன? என்பது குறித்த ஓர் ஆழமான விமர்சனப் பார்வையை நாம் கொண்டிருக்க வேண்டியது இன்று காலத்தின் கட்டாயமாகிறது.

 யார் இந்த மெய்நிகர் போராளிகள்? இவர்கள் ஓர் அரசியல் ஆளுமையை முன்னிறுத்துவதற்காக இணையதளங்களில் திட்டமிட்டுச் செயல்படும் ஒத்த நோக்கம் கொண்ட ஒரு குழு, ஓர் அமைப்பு. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும், தமிழ்நாட்டின் இன்றைய முதல்வருமான மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள், தனது இரசிகர்களை வெறும்இரசிகர்கள்என்று அழைப்பதை விடுத்து, அவர்களைமெய்நிகர் போராளிகள்என்று தனது பதவியேற்பு விழாவில் அறிவித்தபோது, இந்தச் சொல் இன்று சமூக-அரசியல் தளத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இவர்கள் சமூக ஊடகங்களான யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் தங்களின் தலைவருக்காக ஒரு தற்காப்பு அரணாகச் செயல்பட்டவர்கள்; இன்றும் செயல்படுபவர்கள். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முறியடிப்பதும், தங்களின் தலைவரை ஒரு குறையற்ற ஆளுமையாகக் காட்டுவதுமே இவர்களின் முதன்மையான பணி.

இன்றைய இளைஞர்கள்காட்சி அடிமைகளாக (Visual Addicts) மாறிப்போயினர். வாசிப்புப் பழக்கம் குறைந்து, வெறும் 30 வினாடிரீல்ஸ் (Reels) மற்றும்ஷார்ட்ஸ் (Shorts) மூலம் உலகத்தைப் புரிந்துகொள்ள முயலும் தலைமுறை இது. இந்தப் பலவீனத்தை மெய்நிகர் போராளிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு திரைப்பட நட்சத்திரத்தின் திரையில் தோன்றும் ஆவேசமான வசனங்கள், ஏழைகளுக்காக அவர் சிந்தும் கண்ணீர், அநீதியைத் தட்டிக்கேட்கும் சண்டைக் காட்சிகள் போன்றவை நடைமுறை வாழ்க்கையிலும் அவர் அப்படியே இருப்பார் என்ற ஒரு மாயையை உருவாக்குகின்றன.

பொய்கள் ஒருமுறை சொல்லப்பட்டால் அது பொய்; ஆயிரம் முறை சொல்லப்பட்டால் அது உண்மைஎன்ற கோயபல்ஸ் தத்துவத்தின் நவீன வடிவமே இந்த மெய்நிகர் பிம்பக் கட்டமைப்பு. ‘நாசிஆட்சியாளர்கள் குறிப்பாக, நாசி - ஜெர்மனியின் பிரச்சார அமைச்சராக இருந்த ஜோசப் கோயபல்ஸ் இத்தகைய தந்திரங்களைப் பயன்படுத்தி ஹிட்லரை அனைத்து ஆற்றலும் கொண்ட பேராளுமையாகக் காட்டினார்; எதிரிகளைத் தேசத் துரோகிகளாகச் சித்தரித்தார்.

தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் ஆளுமைத்திறன் கொண்டவராகவே இருந்தாலும், இதுவரை உண்மை வாழ்க்கையின் சமூக - அரசியல் வாழ்வியல் தளத்தில் எவ்வித நிர்வாக அனுபவமும் இல்லாதபோது, திரையில் அவர் காட்டும் பிம்பத்தை வைத்து மட்டுமே ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகத் தகுதியானவர் என்று மக்கள் நம்பவைக்கப்படுவது சனநாயகத்தின் மிகப்பெரிய சரிவாகும்.

இந்தியா ஒளிர்கிறது, ‘குஜராத் மாடல்எனும் முழக்கங்கள் வாயிலாக இந்திய அளவில் பிரதமர் மோடியும், ‘மாற்றம் வேண்டும், ‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் வருகிறேன்எனும் முழக்கங்கள் வாயிலாக, தமிழ்நாடு அளவில் தற்போது விஜய் அவர்களும் இந்த மெய்நிகர் போர்வீரர்களின் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர்.

2014-இல் நரேந்திர மோடியின் வருகையின்போதுதகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) என்பது ஒரு புதிய ஆயுதமாக அறிமுகமானது. ‘குஜராத் மாடல்என்பது ஒரு வளர்ச்சிக்கான குறியீடாகச் சித்தரிக்கப்பட்டு, சமூக ஊடகங்கள் வழியாக அது இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. அதே வழிமுறையை இன்று தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் கையாண்டுள்ளார்.

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் மிகக் குறைவான நாள்களே நேரடியாகக் களப்பணியாற்றினார். ஆனால், திரைக்குப் பின்னால் இருந்த 85,000 இரசிகர் மன்றங்களும், ஆயிரக்கணக்கான மெய்நிகர் போராளிகளும் இடைவிடாது உழைத்தனர். மதுரையில் ஒரு சாதாரண இறைச்சிக் கடை உரிமையாளரான மதார் பதுருதீன், எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி செல்வாக்குமிக்க ஜாம்பவான்களை வீழ்த்த முடிந்தது என்றால், அதற்குப் பின்னால் இருந்த ஒரே சக்தி சமூக ஊடகங்களில் கட்டமைக்கப்பட்ட விஜய்யின் பிம்பம் மட்டுமே!

ஊடக நேர்காணல்கள், நேரடிப் பத்திரிகையாளர் சந்திப்புகள் என எதுவுமே இல்லாமல், மக்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், ஒருவழிப் பாதையாகச் சமூக ஊடகங்களில், திரைகளில் மட்டுமே உரையாற்றுவது ஒரு தலைவரை வியக்கத்தக்கவராகவும் தெய்வீகமானவராகவும் காட்டக்கூடியது. விஜய் இதையே செய்தார். அவரது ஒருசெல்ஃபிவீடியோ 24 மணி நேரத்தில் 90 மில்லியன் பார்வைகளைப் பெறுவது என்பது ஒரு தன்னிச்சையான நிகழ்வு அல்ல; அது திட்டமிடப்பட்ட ஓர் எண்ணிமத் தொழில்நுட்ப (டிஜிட்டல்) மேலாண்மை.

இங்கே, மெய்நிகர் போராளிகளின் சமூக-அரசியல் பொறுப்புணர்வும் உண்மைத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்படுவது தவிர்க்க இயலாதது. இவர்களின் மிகப்பெரிய ஆபத்தே அவர்களின்உண்மைத்தன்மைஇன்மைதான். ஒரு தலைவரைப் பற்றி வரும் எதிர்மறையான செய்திகளைத் தகர்ப்பதற்கும், போலியான வெற்றிக் கதைகளைப் பரப்புவதற்கும் இவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்ட அல்லது தீவிரமாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் முன்வைக்கும் வாதங்களில் தர்க்கத்தைவிட உணர்ச்சிவசப்படுதலே அதிகமாக இருக்கும்.

தொடர்பு கொள்வதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், அது நடந்துவிட்டது என்ற மாயைதான்என்கிறார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. மெய்நிகர் போராளிகள் மக்களுக்கும் தலைவருக்கும் இடையே ஒரு நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதாகக் கூறினாலும், உண்மையில் அவர்கள் ஒரு திரையையே உருவாக்குகிறார்கள். அந்தத் திரைத் தலைவரின் குறைகளை மறைத்து, மிகைப்படுத்தப்பட்ட நிறைகளை மட்டுமே காட்டுகிறது.

தேர்தல் களத்தில் வெற்றி பெறுவது ஒரு கலை என்றால், ஆட்சி செய்வது ஒரு பொறுப்பு. ‘ஜோசப் விஜய் எனும் நான்...’ என மெய்நிகர் போராளிகள் ஒருவரை அரியணையில் அமர்த்தலாம்; ஆனால், அந்த இருக்கையில் அமர்ந்திருப்பவர் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், அதே சமூக ஊடகங்கள் அவரை வீழ்த்தவும் தயங்காது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

மெய்நிகர் உலகம் என்பது ஒரு கண்ணாடி மாளிகை போன்றது. அது அழகாகத் தெரிந்தாலும், உண்மையான வெயிலின் வெப்பத்தையோ அல்லது மழையின் குளிர்ச்சியையோ அது தராது. ஒரு தலைவரின் தகுதியைத் தீர்மானிக்க வேண்டியது அவரது கொள்கை அறிக்கைகளும், களப்பணிகளுமே தவிர, அவரது யூடியூப் பார்வைகளோ அல்லது இன்ஸ்டாகிராம் தொடர்பாளர்களோ அல்ல.

நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் எனக்கு மேலானவன்; அவரிடமிருந்து நான் நிறையவே கற்றுக்கொள்கிறேன்என்றார் இரால்ப் வால்டோ எமர்சன். இன்றைய இளையோர் மெய்நிகர் திரைகளைக் கடந்து, உண்மையான அரசியலைக் கற்கவேண்டும். மெய்நிகர் போராளிகள் கட்டமைக்கும் பொய்ப் பிம்பங்களில் வீழ்ந்து கிடக்காமல், ஒரு தலைவரின் உண்மைத் தன்மையை உரசிப் பார்க்கும் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது இளையோருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே!

வெற்றி என்பது ஒரு தொடக்கமே தவிர முடிவல்ல. திரை ஈர்ப்பு கொண்ட திரு. விஜய் போன்ற புதிய தலைவர்களுக்கும், அவர்களது மெய்நிகர் போராளிகளுக்கும் இருக்கும் சவால் இனிமேல்தான் தொடங்குகிறது. எண்ணிமத் தொழில்நுட்ப (டிஜிட்டல்) உலகில் கிடைத்த வெற்றி, உண்மை உலகப் பிரச்சினைகளான வேலையின்மை, விலைவாசி உயர்வு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு போன்றவற்றில் எதிரொலிக்கிறதா என்பதை வரலாறு உற்று நோக்கும். மெய்நிகர் போர்வீரர்கள் வெறும் பிம்பங்களை மட்டுமே உருவாக்குபவர்களாக இல்லாமல், சமூக மாற்றத்திற்கான உண்மையான தூதர்களாக, இறைவாக்கினர்களாக, சமூகப் போராளிகளாக, களப் பணியாளர்களாகக் களமாட வேண்டிய தருணம் இது!

ஆகவே, உள்ளத்தில் உரக்கக் கூறுங்கள்...

பொய்மைமறுநாள் மிளிராது;

உண்மைநெடுநாள் உறங்காது!

பொய்மை மறைத்தாலும் உண்மை அழியாது;

சங்காய் முழங்கும் அதன் குரல் அடங்காது!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்