போரில் முதல் 24 மணி நேரத்தில் மற்றொரு நாட்டின் 1000 இலக்குகளைப் பாரம்பரிய உத்திகளால் துல்லியமாகத் தாக்க முடியும் என்பது இயலாத காரியம்; ஆனால், இது அமெரிக்கா-ஈரான் போரில் சாத்தியமானது. கடந்த நூறு ஆண்டுகளாகவே தானியங்கி ஆயுதங்கள் குறிப்பிட்ட அளவில் உதாரணமாக, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி நாட்டின் ‘பஸ் குண்டுகள்’ (Buzz bombs), கடல் கண்ணி (mines) வெடிகள், ஏவுகணைகள், இஸ்ரேல் நாட்டின் தற்காப்பு இரும்புக் கலசம் (Iron Dome) அமெரிக்காவின் பேட்ரியாட் (Patriot) வான் ஏவுகணை என்று பல வடிவங்களில் பயனிலிருந்து வருகின்றன.
உலக
வரலாற்றில் பல போர்கள் நடந்தாலும்,
2026-ஆம் ஆண்டின் வளைகுடா போர் வேறுபட்டிருந்ததை மக்கள் கண்டு வியந்து கலக்கமுற்றதை அறிவோம். இதன் வேகமும் துல்லியமும் பின்னணியில் ஏதோ ஒரு கருவியின் செயலாற்றல் இருப்பதைப் பார்க்கவும் முடிந்தது. இலக்குகளைத் தீர்மானித்தல், குறிவைத்தல், உளவாற்றல் (intelligence) மற்றும் உடனுக்குடன் போர் அழிவுகளைக் கணித்தல், தொடர்ச்சியாக இயங்கும் ஆற்றல், போரை நடத்தும் தலைமைக்கு இலக்குகளுக்கேற்ப ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்தல் என்பவைகளில் ஏ.ஐ. கருவிகள்
பங்காற்றின என்பதே இதன் இரகசியம்.
இலக்குகளை அறிய
மனிதன்
தேவையில்லை
2024-26 உக்ரைன்-இரஷ்யப்
போரில் ட்ரோன்களின் பயன்பாட்டிற்குப் பஞ்சமில்லையென்பதைப் பார்த்தோம். ஆயிரம் கி.மீ. தூரத்திலுள்ள
இரஷ்ய எண்ணெய் கிணறுகள், எரிவாயுக் கட்டமைப்புகளை உக்ரைன் ட்ரோன்கள் ஏ.ஐ. மூலம்
மனிதத் துணையில்லாமல் தானாகவே பயணித்துத் தாக்கியது இதற்குச் சான்றாகக் கூறப்படுகிறது.
இன்றைய
இராணுவத் தொழில்நுட்ப வளர்ச்சியை 2003-இன் ஈராக் போருக்கு ஒப்பிட்டும் பேசப்படுகிறது. அன்று ஓர் இலக்கைத் தாக்குவதற்கு 2000 உளவு அமைப்புகளின் வேலையை இன்றைய ஈரான் போர் முனையில் அமெரிக்காவின் ‘எபிக்ஃயூரி’ (Epic FUR) ஏ.ஐ.
துணையோடு இருபது இராணுவ வீரர்களைக் கொண்டு செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஏ.ஐ.
கருவிகளின்
அபார
வேகம்
‘கண்ணிமைக்கும் நேரத்தில்’
என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். பாரம்பரியப் போர் முறையில் பல வாரங்களெடுப்பதை ஏ.ஐ.
செயலாற்றல் தரவுகள் அடிப்படையில், மனிதர் நினைக்கும் (speed of thought) வேகத்தை மிஞ்சும்
அளவிற்கு உள்ளதாகவும், இயந்திரங்களின் இயக்கத்தை மனிதர் அப்படியே ஏற்றுக்கொள்ளும்படியாக இரப்பர்
ஸ்டாம்ப் (Rubber stamp)
செய்வது போன்று கூடயிருக்கலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
ஈரான்
போரில் அமெரிக்காவின் கை மேலோங்கியிருப்பதற்கு இராணுவத்தில் ஏ.ஐ.யின் பயன்பாடே
முக்கியக் காரணமென்று கூறப்படுகிறது. மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஈரான்-அமெரிக்கப் போரின் வீடியோக்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தினால்
(AI - Generated Fake Contents) போலியான ஒரு
வருட பழைய போட்டோக்களையும் தயாரித்து, சில நிமிடங்களில் சமூக ஊடகங்களில் பணமாக்கப்படுவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமன்றி, மக்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகக்
கூறப்படுகிறது. இதனை ‘டிஜிட்டல் உளவியல் பயங்கரவாதம்’ (Digital psychological terrorism)
என்கின்றனர்.
போரில் சைபர்-ஏ.ஐ.
நேரடிப்
போர் மோதலுக்கு முன் (Kinetic operations)
களநிலவரத்தை நிதானிப்பதில் இன்றைய சைபர் தொழில்நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. சைபர் என்பது ஓர் ஆயுதமல்ல; சூழலைப் பற்றிய தகவல்களை வடிவமைத்து, போரை முன்னெடுத்துச் செல்ல உதவும் தொழில்நுட்பம்.
அண்மைக்காலப்
போர்களில், போர் தொடங்குமுன் எடுக்கும் முக்கிய யூகங்களுக்கு ஏ.ஐ. சைபர்
உளவு, ஹேக்கிங் (espionage and hacking) நுட்பங்கள் உதவின
என்றும் கூறப்படுகிறது. போக்குவரத்து சந்துமுனை கேமிராக்கள் முதல் கணினி இணையதளம் மற்றும் கைப்பேசி கோபுரங்கள் வரை சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் துல்லியமான தாக்குதல், அச்சுறுத்தல்களைத் தவிர்த்தல் என்ற போரின் போக்கிற்கு சைபர் ஏ.ஐ. தொழில்நுட்பத்
திறனே காரணம் என்கின்றனர்.
முழுமையான செயல்பாட்டை
இயந்திரங்களிடம்
விடலாமா?
ஏ.ஐ. ஒரு தொழில்நுட்ப
அமைப்பாக மனிதர் முடிவுகளை எடுக்க உதவும் கருவி. இது மனிதத் திறனுக்கு மாற்று அல்ல என்பதுதான் அனுபவம். ஏ.ஐ. மூலம்
கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் புதிய தரவுகளை உருவாக்கி முன்கணிப்பை மேம்படுத்தும் திறன்பெற்றது. இதில் ‘கணித்தல்’
என்பது முடிவுகளை எடுக்க உதவும் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. இவ்வாறு எடுக்கும் முடிவுகளால் ஏற்படும் விளைவுகளைச் சந்தித்தல், அதற்கான தீர்வுகளை அறிதல் என்பவைகளுக்கு ஏ.ஐ. பொறுப்பேற்க
இயலாத நிலையில், மனிதரின் முக்கியத்துவம் ஈடு செய்ய முடியாததாகப் பார்க்கப்படுகிறது.
ஏ.ஐ.
அழைத்துச்
செல்லும்
பாதை
இன்று
ஏ.ஐ.யின் ஒவ்வொரு
மேம்பட்டத் திறனும் ஏதோ ஒருவகையில் இராணுவத் தேவைக்கென்பதாகவே பார்க்கப்படுகிறது. ஏ.ஐ. தொழில்நுட்பம்
என்பது தரவுகள் சேமிப்பு முதல் சோதனை வரை மக்களின் நடைமுறைத் தேவைக்கு மட்டுமின்றி, இராணுவப் பயன்பாட்டிற்கும் என்றாகி விட்டது.
தொடக்கக்
காலத்தில் வணிகத் தேவைக்கென்று அன்றாடத் தரவுகள் அடிப்படையில் உருவெடுத்தவையே நாம் பயன்படுத்தும் உலகப் புகழ்பெற்ற மாடல்களான சேட்ஜிபிடி (openAI), க்ளாட் (Anthropic), லாமா
(Meta) என்பவை.
ஆனால், இன்று இவை இராணுவத் தேவைகளுக்கு மாற்றியமைக்கப்பட்டு வருவது நமக்குத் தெரிவதில்லை. உலகளவில் பயனில் உள்ள கணினிப் பார்வை (computer vision) தொழில்நுட்பம் ஒவ்வொரு
நாளும் மேம்படுத்தப்பட்டு, இராணுவத் தேவைக்கேற்ப மேலும் உயர்தர வடிவில் விஞ்ஞானம் மாற்றியமைத்துத் தருகிறது.
இன்று
நடக்கும் அமெரிக்கா - ஈரான் போர் செயலாற்றலில் பன்மடங்கு வேறுபட்டிருப்பதன் காரணம் ஏ.ஐ. தொழில்நுட்பமே
என்கின்றனர். நிமிடத்திற்கு நிமிடம் தரையின் நிகழ்வுகள் அனைத்தும் செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் மூலம் துல்லியமாகப் படம்பிடித்துப் போரை நடத்த உதவியதன் விளைவுகளை நாமே காண முடிந்தது. இதே தொழில்நுட்பம் மீண்டும் மக்களைக் கண்காணிக்கப் (surveillance) பயனில் வருவதும், இதின் பின்னிருப்பது இலாபமீட்டும் பெரும் நிறுவனங்கள் என்பதும் நடைமுறை.
இவ்வாறு
ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகளவில்
மேலோங்கி வளர்வது, ஒட்டுமொத்த உலகச் சமுதாயத்திற்கும், தனிமனிதச் சுதந்திரத்திற்கும் ஆபத்தை விளைவிக்குமா என்ற அச்சம் எழுகிறது.