news-details
சிறப்புக்கட்டுரை
‘ரீல்சில்’ வாழும் வாழ்க்கை!

திரையில் ஆயிரம் கதைகள் ஓடுகின்றன; ஆனால், சொல்லப்படாத ஒரு கதை மட்டும் இதயத்தின் உள்ளே அமைதியாக வாழ்கிறது.

இன்று உலகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வேகத்தில் அதிகமாக ஓடிக்கொண்டிருப்பது மனிதன் அல்ல; அவனது விரல்கள்.

ஒரு திரையைஸ்க்ரோல்செய்யும் அந்தச் சில விநாடிகளில் நாம் சிரிக்கிறோம், ஆச்சரியப்படுகிறோம், பொழுதைக் கழிக்கிறோம். ஆனால், ஒரு நிமிடம் அமைதியாகச் சிந்தித்துப் பார்த்தால், நாம் உண்மையில் வாழ்கிறோமா? அல்லது திரையில் காட்டப்படும் வாழ்க்கையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறோமா?

இன்றைய இளையோரின் வாழ்க்கையில்ரீல்ஸ்என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது ஒரு பழக்கமாகவும், சிலருக்கு அது ஒரு தப்பிக்கும் உலகமாகவும் மாறிவிட்டது. ஒரு நிமிட வீடியோ நமக்குச் சிரிப்பைக் கொடுக்கலாம். ஆனால், அந்த வீடியோ முடிந்தபின் நம் இதயத்தில் இருக்கும் வெறுமையை அது நிரப்புகிறதா? நேரத்தைச் செலவிடுகிறோம் என்று நினைக்கிறோம்; ஆனால், பல நேரங்களில் நேரம்தான் நம்மை மெதுவாக எடுத்துச் செல்கிறது.

இன்று உண்மை முகத்தைவிடபில்டர்போட்ட முகமே அதிகமாகப் பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் எல்லாரும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் இருப்பது போலத் தெரிகிறார்கள். ஆனால், உண்மை வாழ்க்கை அப்படி இருக்கிறதா?

சில இளையோர் மன அழுத்தத்துடன் போராடுகிறார்கள். சிலர் தனிமையில் வாழ்கிறார்கள். சிலருக்குப் பேசவதற்குக்கூட யாரும் இல்லை. ஆனால், சமூக வலைதளத்தில் ஒருஸ்மைல்போதும் - எல்லாமே சரியாக இருப்பதுபோலத் தெரிகிறது.

ஒரு புகைப்படத்திற்குப் பலமுறை போஸ் கொடுக்கிறோம். ஆனால், நம்முடைய உண்மையான உணர்ச்சிகளுக்கு ஒருபோதும் நேரம் கொடுக்கிறோமா? திரையில் புன்னகை இருக்கலாம்; ஆனால், இதயத்தில் அமைதி இருக்கவேண்டும். சமூக வலைதளம் நம்மை இணைக்கிறது. ஆனால், சில நேரங்களில் அது நம்மை நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது.

இன்று ஓர் உணவகத்திற்குச் சென்றால், உணவைச் சாப்பிடுவதற்கு முன் அதைப் படம் எடுப்பது வழக்கமாகிவிட்டது. உணவை இரசிப்பதற்கு முன், அதுஸ்டோரிஆகப் போகிறதா? என்று பார்க்கிறோம்ஒரு காலத்தில் உணவு என்பது குடும்பத்தோடு பகிர்ந்த தருணம். இன்று அது புகைப்படமாக மாறிவிட்டது. நாம் உணவை உண்பதைவிட, வாழ்க்கையைக் காட்டிக்கொள்வதில் அதிக நேரம் செலவிடுகிறோம்.

இது இணைப்பைப்போலத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இது ஒரு தனிமையின் ஆரம்பமாக இருக்கலாம். நம்மைச் சுற்றி மக்கள் அதிகமாக இருக்கலாம்; ஆனால், நம்மைப் புரிந்துகொள்ளும் ஒருவர் இல்லாதபோதுதான் தனிமை உணரப்படுகிறது. இன்றைய இளையோரின் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்று ஒப்பீடு. மற்றொருவரின் வாழ்க்கையைப் பார்த்து, நம்முடைய வாழ்க்கையைக் குறைவாக நினைப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. யாரோ ஒருவர் வெளிநாடு செல்கிறார். யாரோ ஒருவர் புதிய சாதனையை அடைகிறார். யாரோ ஒருவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரிகிறார். அதைப் பார்த்து நம்முள் எழும் கேள்வி: ‘என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி?’

ஆனால், நாம் மறந்துவிடுவது ஒன்று: சமூக வலைதளங்களில் யாரும் தங்களது கண்ணீரைப் பகிர்வதில்லை. அவர்கள் காட்டுவது அவர்களின் சிறந்த தருணங்கள் மட்டுமே. நம்முடைய உண்மையான வாழ்க்கையைப் பிறரின்ஹைலைட்வீடியோவுடன் ஒப்பிட ஆரம்பித்தால், நம் மன அமைதி மெதுவாக மறைந்துவிடும். பிறரின் வாழ்க்கையைப் பார்த்து உங்கள் மதிப்பைத் தீர்மானிக்காதீர்கள்; கடவுள் உங்களுக்காகத் தனித்த பாதையை உருவாக்கியிருக்கிறார்.

இன்றைய தலைமுறை மிகவும் திறமையானது. அவர்கள் கனவுகள் கொண்டவர்கள், மிக வேகமாகக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களுக்குள் ஓர் அமைதியான தேடலும் இருக்கிறது. அது அன்புக்கான தேடல். அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தேடல்.

அது யாராவதுநீ முக்கியமானவன்என்று சொல்லவேண்டும் என்ற தேடல். சில நேரங்களில்லைக்எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மனத்தில் வெறுமை இருக்கலாம். ஏனெனில், மனித இதயம் தொழில்நுட்பத்தால் நிரம்பாது. அது உறவுகளாலும் அன்பாலும் இறைநம்பிக்கையாலும்தான் நிரம்பும்.

இளையோருக்கு இன்று தேவைப்படுவது வெறும் பொழுதுபோக்கு அல்ல; ஒரு திசை, ஒரு நம்பிக்கை, ஓர் உள்ளார்ந்த அமைதி. மனிதன் வெளியில் வெற்றியைத் தேடுகிறான்; ஆனால், அமைதி உள்ளத்தில் மட்டுமே கிடைக்கும்.

எவ்வளவு டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்தாலும், மனித இதயம் தேடுவது உண்மையான உறவுகளையும், நேர்மையான உரையாடல்களையும்தான். ஒரு முறை போனை விட்டு விலகி அமர்ந்து பாருங்கள். மழை பெய்யும் சத்தத்தைக் கேளுங்கள். அம்மாவுடன் பேசுங்கள். நண்பரிடம் உண்மையாகநீ எப்படி இருக்கிறாய்?’ என்று கேளுங்கள். அந்தத் தருணங்களில்தான் வாழ்க்கை நம்மைத் தொடுகிறது.

சில நேரங்களில் நாம் தேடும் அமைதி, இணையத்தில் கிடைக்காது; அது அமைதியான வேண்டுதலில் கிடைக்கும். இன்றைய இளையோருக்கு ஒரு நிமிட அமைதியும், ஒரு சிறிய இறைநேரமும் மிகவும் அவசியம். திரையை அணைக்கும்போதுதான், இதயம் பேசத் தொடங்குகிறது.

இறைவன் மனிதனை உருவாக்கியது ஒரு திரைக்காக அல்ல; ஓர் உறவுக்காக! நாம் உலகத்தோடு இணைந்திருக்கலாம்; ஆனால், இறைவனோடு இணைந்திருக்கிறோமா? திருவிவிலியம் கூறுகிறது: “அமைதியை உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் தருவது போல அல்ல (யோவா 14:27). இந்த வசனம் இன்று இளையோருக்கான ஒரு பதில். உலகம் பொழுதுபோக்கைத் தரலாம், புகழைத் தரலாம், கவனத்தைத் தரலாம். ஆனால், உண்மையான அமைதியை இறைவன் மட்டுமே தர முடியும்.

ரீல்ஸ்வாழ்க்கையை அலங்கரிக்கலாம்; ஆனால், அவை வாழ்க்கையை முழுமையாக மாற்றி விடக்கூடாது. நாம் பார்க்கும் ஒவ்வொரு திரைக்கும் அப்பால், ஓர் உண்மையான உலகம் இருக்கிறது. அங்கு உறவுகள் இருக்கின்றன, அங்கு உணர்ச்சிகள் இருக்கின்றன, அங்கு இறைவனின் அமைதி இருக்கிறது. நம் வாழ்க்கையின் மதிப்பு எத்தனைலைக்குகள்கிடைத்தது என்பதில் இல்லை; மனத்தில் எவ்வளவு அமைதி இருக்கிறது என்பதில்தான் இருக்கிறது. திரையை அணைத்துவிட்டு, இதயத்தைத் திறந்து பாருங்கள்;… உலகம் இன்னும் அழகாகத் தெரியும்.