‘நல்லாசிரியர் யார்?’ நல்ல பண்புகளையும் குணங்களையும் பெற்றவரா? சிறந்த கற்பிக்கும் ஆற்றலைப் பெற்றவரா? இந்தக் குழப்பம் நிறையப் பேருக்கு உண்டு. என்னைக் கேட்டால், அறிவூட்டுதலாக இருந்தாலும் சரி, நல்ல பண்புகளை வளர்ப்பதாக இருந்தாலும் சரி, மாணவர்களின் மனநிலைக்கேற்ப, வகுப்பறைச் சூழலுக்கேற்ப, எப்போது, எது மாணவர்களுக்குத் தேவையோ, அப்போதெல்லாம் அதை அவர்களுக்குத் தயங்காமல் கொடுக்க முயற்சிப்பவரே ‘நல்லாசிரியர்’ என்பேன்.
வேர்கள்
செய்யும் சேவை வெளியில் தெரிவதில்லை. ஆனால், அவைதான் தாவரங்கள் உயிர்வாழ சத்துநீரை உறிஞ்சிக் கிளைகளுக்கும் இலைகளுக்கும் மேலே அனுப்புகின்றன. புயல் காற்றின் தாக்குதல்களிலிருந்து தாவரங்கள் சாய்ந்து விடாமல் பாதுகாக்கின்றன. பல தாவரங்களின் வேர்கள்
சத்துகளைச் சேமித்து மனிதர்களுக்கு உணவாக்குகின்றன. சில வேர்கள் மருந்தாகின்றன. வேர்கள் தாவரங்களுக்கு எப்படியோ, அப்படியே பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் பெற்றோரும் இச்சமூகமும், மாணவர்களின் உயர்வுக்கு நான்கு உறுதியான தூண்களாக நின்று அவர்களின் வளர்ச்சியைக் கட்டமைக்கவேண்டியது அவசியமாகிறது.
ஆசிரியரின் ஆற்றல்மிகு
செயல்திறன்
மாணவர்கள்
கற்றலில் ஆர்வமுள்ளவர்களாயிருப்பின் எதையும் மிகவும் எளிதில் கற்றுக்கொள்வர். ஆனால், கற்க வரும் எல்லாரும் ஆர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்
என்பதை எதிர்பார்க்க முடியாது. அச்சூழ்நிலையில் ஆசிரியர்கள்தான் வலியச்சென்று மாணவர்களை ஊக்குவித்தல்வேண்டும். இதைத்தான் ‘கற்பித்தலின் பயன்பாடுகள் ஆசிரியரின் செயல்பாடுகளை ஒட்டியே அமைதல் வேண்டும்’
என்று இலெவின், விதால் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.
ஆசிரியர்கள்
நன்கு கற்பிக்கத் திட்டமிடுதல் அவசியம். திட்டமிடுதலை நீண்டகால அடிப்படையில் அல்லது ஒவ்வொரு பாட வேளைக்கும் திட்டமிடுதல் அல்லது பாடப்பொருளைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு திட்டமிடுதல் என்பதாக அமைத்துக்கொள்ளலாம். ஆசிரியர்கள் வகுப்பறைகளில் ஒழுங்கு கட்டுப்பாட்டைச் சீரிய முறையில் பராமரிக்கவேண்டும். அதேவேளை, ஆசிரியர்கள் மாணவருடன் தமக்குள்ள உறவு இனிமையாக அமைவதைத் தொடர்ந்து அனுமதிக்கவேண்டும். அப்போதுதான் கற்றல், கற்பித்தல், செயல் எந்தத் தடங்கலும் இல்லாமல் நடக்கும். மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு நிவர்த்தி செய்துகொள்ள ஆசிரியர்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும்.
மதிப்பீடு
செய்தல் ஆசிரியர் தொழிலுக்கு மிகவும் அவசியம். பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போதே வாய்வழியாகக் கேள்விகள் கேட்டு மதிப்பிடலாம். அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்வுகள் நடத்தி மதிப்பிடலாம். இம்மதிப்பீடுகளில் மாணவரின் பன்முகத் திறன்களைக் கணிக்கும் வகையில் கேள்விகளின் வடிவத்தை மாற்றி மாற்றி வடிவமைத்துக்கொள்ளலாம். ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரத்தில் படச்சுருள்கள், காட்சிவில்லைகள்
(Slide), விளக்கப்படங்கள்,
மாணவர்களே உருவாக்கிக் கொண்டு வரும் கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது, மாணவர்கள் ஈடுபாட்டுடன் வகுப்பறைச் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை ஆசிரியர்கள் நினைவில் கொள்ளவேண்டும். இன்னும் சில பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இச்சூழலில், கம்ப்யூட்டர் வகுப்பெல்லாம் சாத்தியமா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
வகுப்பறைகளில்
ஓர் ஆசிரியரே ஒரு பாடத்தைக் கற்பிப்பதைக் காட்டிலும், பல ஆசிரியர்கள் இணைந்து
குழுவாக நடத்தலாம். நமது பள்ளிகளுக்கு இன்றுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இது சாத்தியமில்லை என்றாலும், ஓர் ஆசிரியர் சொல்ல மறந்த கருத்தை மற்றோர் ஆசிரியர் மாணவர்களுக்குச் சொல்ல குழு கற்பித்தலில் வாய்ப்பிருக்கிறது. ‘லெக்சர் மெத்தட்’ என்று சொல்லக்கூடிய விரிவுரையாற்றல் முறை என்பதெல்லாம் பழைய பஞ்சாங்கம். கருத்தரங்கு, உரைக்கோவை (Symposium), கருத்துப்பட்டறை
(Work Shop) போன்ற
நவீன கற்பித்தல் முறைகளைக் கையாளும் போது மாணவர்கள் நன்கு பயன்பெறுவர். ஆசிரியர்களின் முழுமையான கரும்பலகைப் பயன்பாடு மாணவர்கள் அறிவு வெளிச்சத்தைப் பிரகாசமாகப் பெற விடியலாக அமையும்.
கல்வித்துறை
அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிடும் நூல்கள், கருவிகள் போன்றவற்றை ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்வது நலம். வகுப்பறைகளில் மாணவர்கள் சோர்வடையும்போது ஆசிரியர்கள் கலைவழி கற்பித்தல் முறையைக் கையாளலாம். ஆசிரியர்கள் தங்களிடமுள்ள குரல்வளம், நடிப்புத்திறன், நகைச்சுவை உணர்வைப் பயன்படுத்தும்போது மாணவர்கள் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுகின்றனர்.
ஆசிரியர்-பெற்றோர்
உறவு
பெரும்பாலான
பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்க்கும் காலத்திலும், பள்ளிக் கல்வி முடித்து விடுப்புச் சான்றிதழ் பெறும் நேரத்திலும், கையெழுத்துகள் இடவேண்டிய கட்டாயச் சூழ்நிலைகளிலும் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். பள்ளிகளில் கேட்கப்படும் பொருள்களை வாங்கிக் கொடுப்பதும், சீருடைகள் தைத்துக் கொடுப்பதும், தேர்ச்சி அறிக்கைகளில் கையெழுத்து இடுவதும், மதிப்பெண்கள் குறைத்துப் பெற்றால் கட்டாயப்படுத்தி டியூசன் சென்டருக்குக் பிள்ளைகளை விரட்டி விடுவதும்தான் கல்வி எனப் பெற்றோர் நினைத்துக்கொள்கின்றனர். அதுவும் நகரங்களில் வாழும் பெற்றோரைச் சொல்லவேண்டியதில்லை. அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கெனச் சிறிது நேரம் கூட ஒதுக்காமல் மனமகிழ்மன்றம், பற்பல களியாட்டங்கள், பொழுதுபோக்குகள், வெட்டிப்பேச்சுகள், சமூகத்தொண்டு என்கிற பெயரில் குடும்பத்தைக் கவனியாமை போன்றவற்றில் நேரத்தைச் செலவிடுகின்றனர்.
பள்ளி-வீடு ஆகியவற்றின் சுமூக உறவிற்கும் மாணவர்களின் தேர்ச்சித் திறனுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாக பிளொடன் என்கிற கல்வியாளரின் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதையெல்லாம் பெற்றோர் வசதியாக மறந்துவிடுகிறார்கள். பள்ளிக்கல்வி அனுபவங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்துவிடாமல், வெளியுலகில் மெய்யானதாக அமைய பெற்றோர் துணைபுரிய வேண்டும். இதைத்தான் பீட்டர் உட்சு என்ற அறிஞர், ‘நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைக் கற்றுத்தருகிறோம்; ஆனால், அவை அனைத்துமே வெளியுலகில் மெய்யற்றனவையாக ஆக்கப்படுகின்றன. அவற்றைப் பயனுள்ளவையாக்குவதில் பெற்றோரின் பொறுப்பு மிகப்பெரியது” என்கிறார்.
தங்கள்
பிள்ளைகளின் ஆசிரியர்கள் யார்? பிள்ளைகளின் கல்வி இடர்ப்பாடுகள் என்ன? அவர்கள் எவ்வாறு கற்கின்றனர்? கற்றல் சூழ்நிலை பள்ளிகளிலும், வீடுகளிலும் எவ்வாறு உள்ளது? நற்பழக்கங்கள் வேரூன்றி உள்ளனவா? தீயப் பழக்கங்கள் சூழ்கின்றனவா? பள்ளி மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பினைத் தங்கள் பிள்ளைகளால் பூர்த்தி செய்ய முடிகிறதா? இல்லையெனில், அவ்வாறாக ஏன் இல்லை? போன்றவற்றைப் பெரும்பாலான பெற்றோர் எண்ணிப் பார்ப்பதேயில்லை. இத்தகைய சூழ்நிலையில் பெற்றோர்-ஆசிரியர் உறவு சிறந்திருக்குமேயானால் இச்சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும். பெற்றோர்-ஆசிரியருக்கிடையே நிலவவேண்டிய உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்தே தமிழ்நாட்டுக் கல்வி இயக்குநரகம் பெற்றோர்-ஆசிரியர் கழகங்களை அமைத்து, அதற்கு நெறிமுறைகளை வகுத்து, பல்வேறு தருணங்களில் வழிகாட்டுகிறது. ஆனால், பல பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் பெயரளவிற்கு மட்டுமே செயல்பட்டு வருகின்றன என்பதுதான் வேதனைக்குரியதாகிறது.
ஆசிரியர்-மாணவர்
உறவு
பண்டைக்காலத்தில்
கல்வி கற்றல் ஆசிரியர் இல்லத்திலேயே நடந்தது. இன்று கல்வி கற்பிக்கப்படும் இடம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என்றும், கற்பதற்கும் கற்பிப்பதற்கும் உரிய தகுதிகள் இவை என்றும் வரையறுக்கப்பட்டுள்ளன. இம்மாறுபட்ட கல்விச்சூழலில் ஆசிரியர் - மாணவர் உறவு என்பது இன்றியமையாதது. கல்வித்திட்டத்தின் குறிக்கோள்கள் மாணவர் மனத்தில் நிறைவை ஏற்படுத்தி வருகின்றனவா? இல்லையெனில், அதைச் சீர்படுத்த எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்? என்று இன்று பல ஆசிரியர்கள் எண்ணிப்
பார்க்காததால் ஆசிரியர்- மாணவர் உறவு சீர்குலைகிறது.
அறிவைத்
தேடிவரும் மாணவர்கள் மத்தியில் அன்பைத் தேடிவரும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை ஆதரித்து அரவணைக்கவேண்டும். இக்கருத்தைத்தான் கல்விச் சிந்தனையாளர் ஆபிரகாம் மாஸ்லோ என்பவர், “மாணவரின் அடிப்படைத் தேவைகளின்படி முறைக்கட்டமைப்புகளின் எத்தேவை மாணவருக்கு உள்ளது என்பதும் முக்கியம்; அதைத் தெரிந்துகொள்ளாமல் மாணவருக்குக் கற்றுக் கொடுப்பதால் மாணவரின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாது” என்கிறார்.
அறிவுத்திறன்
குறைந்த மாணவர்கள் ஆர்வமுடன் கற்க முயலும்போது அவர்களை உற்சாகப்படுத்துகிறோமா? மாணவர்கள் தோல்வியுறும் பொழுது அவர்களுடன் சேர்ந்து வருத்தமடைகிறோமா? மாணவர்கள் வெற்றி பெறும்பொழுது அவர்கள் வெற்றியில் பங்கு கொண்டு மகிழ்கிறோமா? மாணவர்கள் திறன்கள் வெளிப்படுமாறு அவர்களை ஊக்கப்படுத்துகிறோமா? மாணவர்கள் தவறுகள் புரியும்பொழுது அதைப் பெரிதுபடுத்தாமல் பக்குவமாகத் திருத்த முயல்கிறோமா? மாணவர்கள் தங்களுடைய கல்வி மேம்பாட்டைத் தாங்களே தேர்வு செய்யக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கித் தருகிறோமா? போன்ற கேள்விகளை ஆசிரியர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொண்டே செயல்பட முயற்சிக்கும்போது, மாணவர்களிடம் நல்லுறவு தழைத்தோங்க வழி கிடைக்கிறது.
எல்லாராலும்
விரும்பப்படும் ஆசிரியர்களால் (Popular Teachers) மட்டுமே மாணவர்களிடம் நல்லுறவை
ஏற்படுத்த முடிகிறது. ஆசிரியர்-மாணவர் விகிதம் குறைந்துள்ள பள்ளிகளில், மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த முடிவதால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உறவு சிறந்து விளங்குகிறது. ஆசிரியரின் மேம்பட்ட கற்பித்தல் திறம் (Effective Teaching) மாணவர்
நல்லுறவுக்கு அடிப்படையாக அமைகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிப்பதையும் ஆசிரியர்கள் கருத்தில்கொள்ளவேண்டும்.
மாணவர்-சமூக
உறவுகள்
“நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள்; நாட்டையே முன்னேற்றிக் காட்டுகிறேன்” என்றார்
சுவாமி விவேகானந்தர். இளையோரின் சக்தி மகத்தானது என்று அவர் முழுமையாக நம்பினார். ஆனால், இன்றுள்ள சமூக அமைப்பு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மிகப்பெரிய தடைக்கல்லாக உருவெடுத்திருக்கிறது. குற்றச்செயலில் ஈடுபடுபவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், பெரும்பாலோர் நன்கு படித்தவர்களாகத்தான் இருக்கின்றார்கள். காரணம் என்ன? அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காகவே மாணவரைச் சுற்றியுள்ள அனைத்துச் சக்திகளும் அவர் தலையில் பொறுக்க முடியாத அளவிற்குச் சுமைகளை ஏற்றி வைக்கிறோம். ‘பூவின் தலையில் பூமியையே சுமக்க வைக்கிறோம்’ என்றுதான்
சொல்லவேண்டும். மதிப்பெண்களுக்காகத் தனது மகிழ்ச்சியான தருணங்களை மாணவர் கொண்டாடக்கூட அனுமதிக்காமல் கொள்ளையடித்து விடுகிறோம்.
சிறுவயதில்
ஏற்படும் மன அழுத்தத்தால் மனம்
மரத்துப்போய், மனிதநேயம் அற்றுப்போகிறான். தன்னை அழுத்தும் சமூகத்தின் மீது கோபம் கொண்டு ஒருவித பழிவாங்கும் எண்ணத்தோடு வளரும் அவன் பெரியவனானதும் குற்றம் புரிவதைத் தவறாகவே நினைப்பதில்லை. இதுதான் உண்மை. பள்ளியில் இயங்கும் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. போன்ற
இயக்கங்கள் மாணவர்கள் நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ள உதவி புரிகின்றன. ஆனால், ஏதோ ஒரு கட்டாயத்திற்காகப் பெயரளவிற்குத்தான் மாணவர்கள் அவற்றில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இயக்கங்களில் மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் பங்குகொள்ளச் செய்யும் ஒரு தூண்டுகோலாக, தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கு விளையாட்டு வீரர்களுக்கு ‘கட் ஆப்’ மதிப்பெண்களில் சலுகை வழங்குவதைப்போல், இயக்கங்களில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கும் அரசு கருணை காட்டலாமே!
குடிகாரத்
தந்தை, குடும்பச்சண்டை,
ஒழுக்கக்கேடான பெற்றோர் மாணவரின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறார்கள். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணிகள் ‘படிப்பதால் என்ன பயன்?’ என்கிற அவநம்பிக்கையை மாணவர்களுக்குள் ஏற்படுத்துகிறது. புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்களால் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க அரசாங்கங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டாமா? திரைப்படங்கள் வலிந்து புகுத்தும் பாலியல் வக்கிரங்கள், வன்முறைக் காட்சிகள், இரட்டைப் பொருள் தரும் வசனங்கள், ஹீரோயிசம் போன்றவை மாணவனின் மனத்தைத் திசைத்திருப்பித் தவறான பாதைக்குக் கொண்டு செல்கின்றன.
நாட்டின்
இரத்தநாளங்கள் இளைஞர்கள். அவர்களின் குருதியில் மதுவையும் பெத்தட்டினையும் அபினையும் ஹோகெய்னையும் கலக்கும் போதைத்தரகர்கள் தேசத்துரோகிகள் அல்லாமல் வேறென்ன! சாதி சங்கங்களும், மத அமைப்புகளும் தங்கள்
சுயநலத்துக்காக, தீவிரவாதச் சிந்தனைக்கு இட்டுச்செல்வதை நிறுத்திக்கொள்ளாத வரையில், மாணவர் சக்தி என்கிற மகத்தான சக்தி மண்ணோடு மண்ணாக மடிந்துபோவதை யாராலும் தடுக்க முடியாது.
கல்வி
நிறுவனங்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சமூக அமைப்புகள் போன்றவை மாணவர்களின் உயர்வுக்கு உதவிபுரியும் எஃகுத் தூண்களாக உருமாறவேண்டும். நாட்டில் அப்படியொரு நிலை வந்தால் அறிவர் அப்துல்கலாம் கண்ட கனவைப்போல ‘இந்தியா வல்லரசாகும்’ நாள்
வெகு தூரத்தில் இல்லை.