கோவை புனித பிரான்சிஸ்கன் காணிக்கை அன்னை சபையைச் (FSPM) சார்ந்த அருள்சகோதரி ஜெசிந்தா ஜான்சன் அவர்கள், குன்னூர் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைத் தாவரவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். புனித பிரான்சிஸ்குவின் ஆன்மிகத்தில் உரோமையில் பட்டயப் படிப்பு முடித்தவர். விவிலியம் மற்றும் இறையியலில் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர். அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்தாலும், எழுத்துப் பணியில் பேரார்வம் கொண்ட இவர் இதுவரை நான்கு பயனுள்ள நூல்களைப் படைத்துள்ளார். திருக்குறள் காட்டும் வாழ்வியல் விழுமியங்களை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப விளக்கும் வகையில், நமது ‘நம் வாழ்வு’ இதழில் ‘குறளும் வாழ்வும்’ எனும் தலைப்பில் புதிய தொடரை எழுத முன் வந்துள்ளார். பன்முகத் திறனும் ஆன்மிகப் பின்புலமும் கொண்ட அருள்சகோதரியை வாழ்த்தி வரவேற்கிறோம்.
முதன்மை ஆசிரியர்
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்
முதற்றே உலகு (குறள் 1)
குறள் விளக்கம்:
எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
சிந்தனை:
கடவுள் நம்பிக்கை உடையவர் ஆத்திகர்! கடவுள் நம்பிக்கை அற்றவர் நாத்திகர்! இந்த இரு குழுவினருக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவரை எப்படி அழைப்பது? சிலர் கடவுள் நம்பிக்கை அற்றவர் எனச் கூறிக்கொண்டாலும் வேதங்கள் சொல்லும் நற்செயல்கள் அனைத்தையும் வாழ்வில் கடைப்பிடிக்கின்றனர். ஆனால், கடவுள் நம்பிக்கை உடையவர்கள் பலர் சமயக் கொள்கைகளுக்கு மாறான வாழ்க்கை நடத்துகின்றனர். அதிலும் உச்சமாக ‘நானே கடவுள்’ என்ற நிலைக்குத் தன்னை உயர்த்துவோரும் உண்டு. குறள் ஒன்றில் திருவள்ளுவர் ‘இந்த உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது’ என்கிறார்.
இக்கருத்து, இந்தப் பூமியில் கடவுள் நம்பிக்கை உடையோர் பெரும்பான்மையாக இருப்பதால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
“நம் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நம் நடத்தை அமையாவிடில் நமது நடத்தைக்கு ஏற்றவாறு நம் நம்பிக்கை மாறிவிடும்” என்றார்
பேராயர் ஃபுல்டன் ஜான் ஃஷீன். ஆயரின் கூற்றுப்படி, கடவுள் நம்பிக்கை கொண்டவர் கடவுளின் வார்த்தைப்படி வாழாமல், தனது விருப்பப்படி வாழ்வாரெனில்
அவர் கடவுளை அடிப்படையாகக் கொண்டவரல்லர்; அவர் தன்னை முன்னிலைப்படுத்தி வாழ்பவராகிறார். கடவுளை அடிப்படையாகக் கொண்டவர் எச்சூழலிலும் கடவுளை முன்னிலைப்படுத்துவார்.
அண்மையில்
‘The chariots
of fire’ என்ற திரைப்படத்தைக் குறித்துக் கேள்விப்பட்டேன். பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கிய எரிக் லிட்டல் என்ற விளையாட்டு வீரரைப் பற்றியதுதான் அந்தத் திரைப்படம். அவர் எந்த அளவுக்குக் கடவுளைத் தன் வாழ்வில் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார் என்பதைத்தான் அப்படத்தின் இயக்குநர் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார். இவர்
ஓர் ஓட்டப்பந்தய வீரர். இரசிகர்களுக்காக அல்ல; நாட்டுக்காக அல்ல; புகழுக்காக அல்ல; சொந்த மகிமைக்காகவும் அல்ல;… கடவுளுக்காக ஓடினார். ஏனெனில், கடவுளை இவர் அடிப்படையாகக் கொண்டிருந்தார். 1924-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இவர் ஓடுவதாக இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. கிறித்தவ மிஷனரியான வீரர் எரிக் லிட்டலுக்கு இது பெரும் சோதனையாக அமைந்தது. ஓய்வுநாளில் கடவுளை மகிமைப்படுத்துவதா? அல்லது போட்டியில் கலந்துகொள்வதா? எனக் குழம்பினார். பின்னர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலிருந்து விலகினார். இதனைக் கேள்விப்பட்டவர்கள் அவரை 100 மீட்டர் போட்டியில் கலந்துகொள்ள வைக்க வெகுவாக முயன்றனர். வீரரோ தனது முடிவில் தெளிவாக இருந்தார். ‘கடவுள்தான் முக்கியம், அவரே என் அடிப்படை’
என உறுதியாக இறுதிவரை நின்றார். பின்
வேறொரு நாளில் நடைபெற இருந்த 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வதாக அறிவித்தார். 100 மீட்டர் ஓடப் பயிற்சி பெற்ற இவர் 400 மீட்டர் ஓட்டத்தில் வெல்வாரா? என்ற ஐயம் கொண்டிருந்தவர்கள் முன், இறையாசிரோடு ஓடி வெற்றிக் கனியைப் பறித்தார். எனவே, இறைவனை அடிப்படையாகக் கொள்வோம், அடி சறுக்காமல் வாழ்வோம்.