ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) நாடாளுமன்ற உறுப்பினர்களை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை லியோ, சித்தாந்தங்களைக் கடந்து பொதுநலன் சார்ந்த அரசியலை முன்னெடுக்குமாறு வலியுறுத்தினார். இரண்டாம் உலகப் போரின் சாம்பலிலிருந்து உருவான ஐரோப்பிய ஒன்றியம், பல நூற்றாண்டுகாலப் பிரிவினைகளை முறியடித்து, ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்டது என்பதை அவர் நினைவுகூர்ந்தார். ‘ஒற்றுமை என்பது மோதல்களைவிட மேலானது’ என்று குறிப்பிட்ட திருத்தந்தை, ‘அதிகாரத்தைப் பிடிக்கும் மோதல்கள் இறுதியில் அழிவுக்கே வழிவகுக்கும்’ என்று எச்சரித்தார். ‘அரசியல் என்பது தர்மத்தின் உயரிய வடிவம்’ என்று குறிப்பிட்ட அவர், ‘எதார்த்தத்தைச் சிதைக்கும் சித்தாந்தங்களுக்குப் பின்னால் செல்லாமல், மக்களின் உண்மையான தேவைகளை நிறைவேற்றும் இலட்சியக் கனவுகளைக் கொண்டிருக்கவேண்டும்’ என்றார். மேலும், ‘மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே குறைந்து வரும் நல்லிணக்கத்தைச் சுட்டிக்காட்டிய அவர், டிஜிட்டல் யுகத்திலும் மக்களுடன் நேரடித் தொடர்பைப் பேணுவதே மக்கள் அரசியலுக்குச் சிறந்த மருந்தாகும்’ என்றார். கண்ணியமான வேலைவாய்ப்பு, குடும்பம் தொடங்குவதில் உள்ள அச்சத்தைப் போக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் சவால்கள் குறித்துத் திறந்த மனத்துடன் செயல்படவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.