மூத்த பத்திரிகையாளர் மணி, “சபிக்கப்பட்டவர்கள்தான் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசுவார்கள்” என்றார். நாம் சபிக்கப்பட்டவர்கள்; அதனால் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசலாம்.
தமிழ்நாடு
சிறப்பு வாய்ந்த இன வரலாறு, தாய்மொழி,
தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு கொண்ட மாநிலம். ஆனால், அவர்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகித் தனித்து இருக்கிறார்கள். இனமானம், மொழி, மண் பெருமை பேசுகிறார்கள். நாகரிக, கல்வி அறிவு கொண்ட தனித்த சமூகமாக உலகளவில் உயர்கிறார்கள். அவர்களைக் கட்டுக்குள், ஆரிய அடிமைத்தனத்தில் பூட்டவேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிடுகிறது. விளாடிமிர் லெனின், “ஒரு தேசத்தை அழிக்க விரும்பினால், முதலில் அத்தேச இளையோரின் சிந்தனைகளை அழியுங்கள்” என்றார்.
தமிழ்நாட்டு இளையோரின் மூளையை ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுச் சலவை செய்துவிட்டது.
2026 சட்டமன்றத் தேர்தலில்
காவிகள் ‘திராவிட எதிர்ப்பு அலை’ வீசியதாக மகிழ்ச்சியில் குதிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, ‘துக்ளக்’ சோ, குருமூர்த்தி, ‘தினமலர்’ இராம. சுப்பையர் ஆகியோரை வைத்து ‘தமிழகத்தில் மாற்றம்வேண்டும்’ என
நச்சுப் பிரச்சாரத்தைத் தொடங்கியது. ‘தின மலர்’,
‘தினமணி’ தற்போது
‘தினத்தந்தி’ வரை
பொய்ச் செய்திகளைத் தினம் மக்கள்
மனத்தில் விதைத்தது. சமூக ஊடகங்கள், புகழ் பெற்றோர், நடிகர்கள் வாயிலாக நச்சுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்தது.
சிறுபான்மை
மக்கள், திராவிடத்தின் பாதுகாப்பு அரணாக நின்றார்கள். திராவிடம் 60 ஆண்டுகள் வெல்ல முடியாத சக்தியாக எழுந்தது. நாக்பூர் பீடம் எம்.ஜி.ஆர். அவர்களைப்
போல ரஜினிகாந்த் அவர்களை முன்னிறுத்தியது. திட்டம் தோல்வியுற நடிகர் விஜய் அவர்களுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்தது. கேட்ட விசில் சின்னம் கொடுத்தது. கரூர் பெருந்துயர சி.பி.ஐ.
விசாரணைச் செய்தியினைக் கசிய விடாமல் இரகசியம் காத்தது. நடிகர் விஜய் அவர்களைச் சுற்றி வளைத்தது.
1991-ஆம் ஆண்டு
தமிழ்நாட்டில் நடைபெற்ற இராஜீவ் காந்தி படுகொலையால் தி.மு.க.
எதிர்ப்பு அலை வீசியது. அன்று 29.9% பெற்ற தி.மு.க. இரண்டு
தொகுதிகளில் வென்றது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த அலையும் இல்லை. தி.மு.க.
கூட்டணி 31.57% வாக்குகளைப் பெற்று, 74 தொகுதிகளைப்
பெற்றுள்ளது. தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முதல் முறையான தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. இங்கு திராவிட எதிர்ப்பு அலை வீசவில்லை. நடிகர் விஜய் ஆர்.எஸ்.எஸ். வீசிய மாயவலைக்குள் மாட்டிக்கொண்டார் என்பதே நிதர்சனம், உண்மை.
ஒரு
நண்பர் முகநூலில் பதிவிடுகிறார்: ‘தமிழ்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு, வீடுகளும் பொதுச்சொத்துகளும் அழிந்து போனால் நமக்கு என்ன பதை பதைப்பு ஏற்படுமோ, அப்படியான பதைபதைப்புதான் இன்றைய தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது சனநாயகத்தின்மீது நம்பிக்கைகொண்ட ஒருவனாக எனக்கு ஏற்படுகிறது.” இது சரியான, ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான உணர்வுதான்.
‘மாற்றம்’ என்ற ஒற்றை வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கூறி மக்கள் மனத்தில் பதிய வைத்தார்கள். ‘மாற்றம் வேண்டும்’
என்று கூறுபவர்களுக்கு, ‘அந்த மாற்றம் என்ன?’ என்ற அடிப்படைத் தெளிவுகூட தெரியவில்லை. அவர்களிடம் அது குறித்த சிந்தனைகள், செயல்பாடுகள் இல்லை. போகிற வாக்கில், பொத்தாம் பொதுவாக வாரிசு அரசியல், ஊழல், சட்டம்-ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை
எனத் தொடர் பிரச்சாரங்களை வைத்தார்கள். தமிழ்நாடு பிரதமர் மோடியின் மதுராந்தகப் பிரச்சார மேடையில் இருந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோர் (அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன்,
பியூஸ் கோயல்) வாரிசு அரசியல்வாதிகள் என்பதில் மிகையில்லை.
1976-இல் தி.மு.க. மீது
28 ஊழல்
குற்றச்சாட்டுகளை விசாரிக்க சர்க்காரியா விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ‘2ஜி’ அலைக்கற்றை விவகாரத்தில் ரூபாய் 1.76 இலட்சம் கோடி அரசுக்கு இழப்பு என 2010-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு, ஆ. ராஜா, கனிமொழி
கைது என நீண்டது. முடிவில்
சர்க்காரியாவும், நீதிபதி ஓ.வி. ஷைனியும்
‘குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை’ எனத்
தீர்ப்பு எழுதினர். இந்தியாவிலேயே பா.ச.க.வுக்குப் பெருந் தலைவலியாக உள்ள தி.மு.க.வை மோடி, அமித்ஷா
ஆகியோர் ஊழல்வாதிகள் என்கிறார்கள். விசாரணை அமைப்புகளைக் கையில் வைத்துள்ள பா.ச.க.
பேசுவதோடு சரி, செயலில் எதுவும் செய்வதில்லை.
சட்டம்-ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் நடமாட்டம், உபயோகித்தல் என்பதில் பா.ச.க.
ஆளும் 16 மாநிலங்களைவிட
தமிழ்நாடு குறைந்த நிலையில் உள்ளது. இதை ஒன்றிய அரசின்
புள்ளி விவரங்களிலிருந்து அறியலாம். இது குறித்த பொது விவாதத்திற்கு யாரும் வரமாட்டார்கள். போகிற போக்கில் அடிப்படை ஆதாரமற்ற விவரங்களை வாரி விடுவார்கள். தி.மு.க.
கூட்டணிக்கு எதிராக இருந்த ஐந்து அணிகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுக் கதையைத் தேர்தல் களத்தில் பிரதிபலித்தார்கள்.
தமிழ்நாடு
தனிநபர் வருவாய், வாழ்க்கைத் தர உயர்வு, தொழில்
வளர்ச்சி, மருத்துவக் கட்டமைப்பு, பள்ளிக்கல்வி உயர்வு, உயர்கல்வி வளர்ச்சி என்பதில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான வளர்ச்சி திட்டமிட்டு மறைக்கப்பட்டது. மத நல்லிணக்கம், சமூக
நல்லிணக்கம் என்பதில் அடங்கிய பொது அமைதி மறைக்கப்பட்டது. ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். தன் சித்து விளையாட்டைத் தமிழ்நாட்டில் நடத்திவிட்டது.
நடிகர்
விஜய் அவர்களுக்கு வாக்களித்த பலரின் பதில் இவ்வாறாக இருந்தது: “இவர்களே
மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?
ஒரு புதியவருக்கு வாக்களித்து, வாய்ப்பளித்துப் பார்ப்போம்” என்கின்றனர்.
ஆட்சி
அதிகாரம் என்பது சோதனை ஓட்டம் என்பதாக அவர்களின் சிந்தனை இருக்கிறது. விலைமதிப்பில்லாத வாக்கின் அருமை தெரியவில்லை. தங்கள் பிள்ளைகளைப் போலவே, பெற்றோரும் விளையாட்டுப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். வேட்பாளர் பெயர், ஊர், பின்னணி தெரியாது; குற்றப் பின்னணியில் அ.தி.மு.க. கட்சிக்கு அடுத்த
நிலையில் த.வெ.க.
கட்சி வேட்பாளர்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் 108 பேர் இக்கட்சியில் ‘திடீர்’ வேட்பாளரானதும் காலக் கொடுமை!
தேர்தல்
முடிவுகளில் சென்னை உள்பட்ட பெருநகரங்களில் த.வெ.க.
கட்சி சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. கிராமப்புறத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதிகளில் தி.மு.க.
கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உதாரணமாக, திருப்பூர் தெற்கில் நகர்ப்புற வாக்காளர்களால் த.வெ.க.
கட்சி ஏறக்குறைய 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறது. மாறாக, கிராமப்புற வாக்காளர்கள் அதிகமுள்ள திருப்பூர் வடக்கில் இக்கட்சி ஏறக்குறைய 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகொள்கிறது. அ.தி.மு.க.வின் அசைக்க
முடியாத கோட்டை செல்வி ஜெயலலிதா அவர்களும் சில நேரங்களில்
நிற்க நினைத்த வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் அ.தி.மு.க இன்று தோற்கிறது.
எந்த
அலையும் வீசாத தேர்தல் என்றாலும், வாக்காளர்கள் மனநிலை ‘மாற்றிப் பார்ப்போம்’ என்ற
மாயநிலையில், சினிமா மோகத்தில் இருந்தது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தமிழ்நாட்டு மக்களின் தனித்த பண்பாட்டையும், சமத்துவ சமதர்ம கோட்பாட்டையும், ‘எல்லாம் அனைவருக்கும்’ என்ற
சிந்தனையையும், மழுங்கடிக்கப் போட்ட செயல்திட்டம் பாதியளவு நிறைவேறிவிட்டது. அறிவார்ந்த சிந்தனைகளுக்குத் தேவை இல்லை. ஆக்கப்பூர்வமான விவாதங்கள் வேண்டவே வேண்டாம். கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தங்கள், செயல்திட்டங்கள் எதுவுமில்லை. ஆளுமை வழிபாடு, தனிநபர் துதிபாடல், பிம்ப அரசியல், ஆர்ப்பரிப்புகள், குழு மனப்பான்மை
கொண்டாட்டங்கள் எனத் தொடர்ந்த தேர்தல் திருவிழா இது. தேர்தல் களத்தில் த.வெ.க.
கட்சியினர் ஆடிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் இப்புதிய முதல்வரின் ஆட்சியிலும் தொடருமா
என்பதே நம் கேள்வி.