“கத்தோலிக்கத் திரு அவை அறிவியலுக்கு எதிரானது அல்ல; மாறாக, உண்மையான அறிவியலைத் தழுவி, அதன் வழியாக இறைவனின் படைப்பை ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறது” என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். அண்மையில் வத்திக்கான் வானாய்வு மைய அறக்கட்டளை உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை, 1891-இல் திருத்தந்தை 13-ஆம் லியோ இந்த மையத்தை மறுசீரமைத்ததை நினைவுகூர்ந்தார். “திரு அவை உண்மையான அறிவியலை எதிர்க்கவில்லை; மாறாக, அதனை முழு பக்தியுடன் ஊக்குவிக்கிறது என்பதை உலகிற்குக் காட்டவே இது நிறுவப்பட்டது” என்றார். மேலும், மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஒளிகள், கடவுள் படைத்த வான்சுடர்களைக் காண்பதிலிருந்து நம்மைத் தடுப்பதாக வருந்திய திருத்தந்தை, “படைப்பைப் புரிந்துகொள்ளும் தாகமே இறைவனைத் தேடும் மனித ஆன்மாவின் ஏக்கம்” என்றும் சுட்டிக்காட்டினார்.