திருப்பலி முன்னுரை
ஆண்டவர்மீது
நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் நிலைத்திருக்க, ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த இறைவன் மீண்டும் விண்ணுக்கே திரும்புகிறார். ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு நாற்பது நாள்கள் தம்முடைய சீடர்களைத் தயார்படுத்துகிறார்; அவர்களை உருவாக்குகிறார்; திடப்படுத்துகிறார்; உறுதிப்படுத்துகிறார்; தூய ஆவியின் வல்லமையைப் பற்றி எடுத்துரைக்கின்றார். இவை
அனைத்தையும் செய்துவிட்டு தம்முடைய சீடர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று விண்ணகம் செல்கின்றார்.
சீடர்கள்
வானத்தை அண்ணாந்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது,
‘கவலைப்படாதீர்கள்! நான் மீண்டும் வருவேன். நான் வருவதற்கு முன்பாக உங்களோடு உடனிருக்க தூய ஆவியார் வருவார். அவர் உங்களை உண்மையை நோக்கி வழிநடத்துவார்’ என்று
கூறுகின்றார். உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கும் ஆற்றலைக் கொடுத்துச் செல்கின்றார். திருமுழுக்கின்
வழியாக இந்த மகத்தான ஆற்றலைப் பெற்ற இயேசுவின் சீடர்களாகிய நாம் துணிவுடன் நற்செய்தியை அறிவிப்போம். இயேசு என்ற ஒப்பற்ற பெயரின் மகத்துவத்தை இந்த உலகம் அறியச் செய்வோம். “உலக முடிவுவரை நான் எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன்” என்று
மொழிந்த வாக்குமாறாத தெய்வத்தின் உடனிருப்பை உணர்வோம். திருத்தூதர்களைப்போல இயேசுவை அறிந்து அனுபவித்து அறிவித்துச் சாட்சிய வாழ்வு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக
முன்னுரை
இயேசுவின்
விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் மண்ணுலகைச் சார்ந்தவற்றை நாடாமல் விண்ணுலகைச் சார்ந்தவற்றை விரும்பித் தேடுவோம். இயேசு நமக்கு விட்டுச்சென்ற அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகளை நமதாக்குவோம். இயேசுவோடு வாழவும், அவரது உடனிருப்பில் நிலைக்கவும் அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
இயேசு
விண்ணேற்றம் அடையும் முன் தம்முடைய சீடர்களைப் பணிவாழ்வுக்குத் தயார்படுத்துகின்றார். தேர்ந்து தெளியும் ஆற்றலையும், பகுத்தறியும் ஞானத்தையும், உறுதியோடு பணிசெய்வதற்கு ஆற்றலையும் தரும் தூய ஆவியை வாக்களித்ததை உறுதிப்படுத்துகின்றார். நம்மோடு பயணித்து, உத்வேகம் தந்து வழிநடத்தும் தூய ஆவியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. அன்புத்
தந்தையே இறைவா! உமது இறையரசுப் பணியைச் செய்வதற்காக நீரே தேர்ந்துகொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர், துறவியர் அனைவரும் காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப கருத்தாய் பணி செய்வதற்குத் தேவையான ஞானத்தையும், உடல் மற்றும் மனநலனையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. பாசமுள்ள
ஆண்டவரே! விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் எங்களுடைய வாழ்க்கையாலும் வார்த்தையாலும் நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தை விண்ணகமாக மாற்றவும், நம்பிக்கையின் தூதுவர்களாக வாழவும் தேவையான வரத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அமைதியின்
ஆண்டவரே! உலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போர், தீவிரவாதம் அனைத்தும் ஒழிந்து அமைதி ஏற்படவும், நாங்கள் யாரையும் அடிமைப்படுத்தாமல் அனைவருக்கும் மதிப்புகொடுத்து, சமத்துவமான சமுதாயத்தை அமைக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. உன்னதரான
ஆண்டவரே! திரு அவையின் தூண்களாக இருக்கும் எம் இளையோர் உலகப் போக்கின்படி வாழாமல், மனசாட்சியின்
குரலுக்குச் செவிகொடுத்து வாழவும், உம்மீதான நம்பிக்கையில் வளரவும், நல்மதிப்பீடுகளை இவ்வுலகில் விதைத்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.