news-details
சிறப்புக்கட்டுரை
மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு (வலையும் வாழ்வும் – 47)

“என்னங்க! ரெடியாயிட்டீங்களா? காப்பித் தண்ணி வேணும்னா போட்டுத்தரவா?”

தன் மகளோடு படுத்திருந்த வசந்தி தூக்கக் கலக்கத்தோடு பால்வெட்டுத் தொழிலுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த பாலனிடம் சோம்பல் முறித்துக்கொண்டே கேட்டாள்.

பதிலேதும் சொல்லாமல் தலையில் கட்டிப் பயன்படுத்தும் பேட்டரி லைட்டையும் இரப்பர் மர வெட்டுக்கத்தியையும் எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான் ரவிபாலன்.

ஊரில் எல்லாரும் அவனை ‘பாலன் என்றே கூப்பிடுவர். இரப்பர் மரத்திலிருந்து பாலெடுக்கச் சூரியன் உதிக்கும் முன்பே செல்லவேண்டும். அப்படி அதிகாலையிலேயே சென்றால்தான் வெட்டுவதற்குப் பதமாகவும், மரத்தில் அதிக பாலும் இருக்கும். பாலனுக்குச் சொந்த இரப்பர் மரங்கள் கிடையாது. செல்லத்துரையின் பொட்டல்விளையில்தான் அவனுக்கு வேலை. ஓர் இரப்பர் மரத்தைக் கீறவும், பால் சேகரிக்கவும் சேர்த்து ஐந்து ரூபாய் கிடைக்கும். ஒருநாளில் குறிப்பாக, காலையில் மட்டும் முந்நூறு மரங்களைக் கீறி இரப்பர் பால் சேகரிப்பான். சேகரித்துப் பதப்படுத்திய இரப்பர் சீட்டை இயந்திரத்தில் அடித்தெடுத்துக் கொடுக்க ஒரு சீட்டுக்கு மூன்று ரூபாய் என்று பாலனுக்குக் கொஞ்சம் வருமானம் வரும். ஆனாலும், காலைப் பனியில் கண்ணாடி விரியன் பாம்புகளுக்கிடையில் வேலை பார்ப்பது அவனுக்கு முதலில் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. பிறகு அதுவே பழக்கமாகிவிட்டது.

ரவிபாலன் இரப்பர் மரத்தின் பட்டையைக் கீறிப் பாலெடுக்கும் அந்த இலாவகமே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வேறு எங்கும் மரத்தில் காயம் ஏற்படாதவாறும், அதற்கு வலி தெரியாமலிருப்பதற்கும் இரப்பர் மரங்களோடு பேசிக்கொண்டே தோலுரிப்பான். அதைப் பார்ப்பதற்கு ஒரு தாய் குழந்தைகளோடு கொஞ்சி மகிழ்வது போலிருக்கும்.

அதிகாலையில் மூன்றரை மணிக்கு இரப்பர் பாலெடுக்கப் போனவன், வழக்கம்போல காலையில் ஒன்பதரைக்குதான் வந்தான்.

இன்னைக்கு அமுதாவுக்குப் பிறந்தநாள். ஸ்கூலுக்குப் போகும்போது உங்கள கேட்டா. ஸ்கூலுக்குக் கொடுத்தனுப்ப மிட்டாய் கூட வாங்கிக் கொடுக்கல என்று ஏதேதோ சொல்லிக்கொண்டே பழங்கஞ்சியையும், கொஞ்சம் தோலுரித்த சிறு வெங்காயத்தையும் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள் வசந்தி. பாலன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் பழங்கஞ்சியைச் சோறோடு அள்ளிக் குடித்தான்.

வசந்தி வீட்டுமுற்றத்தைப் பெருக்கிக்கொண்டே ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால், பாலன் அவற்றையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. வீட்டுத்திண்ணையில் வைக்கப்பட்டிருந்த பாய் ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டு விட்டத்தைப் பார்த்துப் படுத்துக்கொண்டான்.

ரவிபாலன் தன் மனைவியிடம் பேசி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவன் என்று இரப்பர் மரங்களோடு பேசத்தொடங்கினானோ அன்றிலிருந்து தன் மனைவியிடமோ அல்லது யாரிடமோ பேசியதில்லை. சிலர் அவனுக்கு மனப்பிராந்தி என்றனர். வேறுசிலர் அவனுக்குப் பொட்டல்விளையில் தற்கொலை செய்துகொண்ட அந்த ஊமைப்பெண் பிடித்திருக்கிறாள் என்றனர். இந்த இரண்டு ஆண்டுகளில் பல மருத்துவர்களிடம் ரவிபாலனைக் கூட்டிக்கொண்டு காட்டிவிட்டாள் வசந்தி. ஆனால், எந்தப் பயனும் இல்லை. யாரெல்லாமோ ஏதேதோ கதைகளை அவிழ்த்துவிட்டார்கள். ஆனால், உண்மையில் ரவி பாலனுக்கு என்னதான் ஆனது என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

அடுத்த நாள் காலை மூன்றரை மணிக்கெல்லாம் வழக்கம்போல ரவிபாலன் கண்விழித்து இரப்பர் மரங்களோடு பேசத் தயாரானான்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நாடி பிடித்து உடல்நலக் குறிப்புகளைச் சொல்லிவந்த காலம் மாறி ஸ்டெதஸ்கோப் வந்ததுபோல, இன்று டிஜிட்டல் மயமாகியிருக்கிறது மருத்துவத்துறை. உலகம் எவ்வளவுதான் ஏ.ஐ. உலகத்தில் வளர்ந்திருந்தாலும், நோய்களும் நோயாளர்களும் குறைந்தபாடில்லை.

உலகம் முழுவதும் இன்று சுமார் 43 இலட்சம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. மருத்துவர்களுக்கான மற்றும் மருந்திற்கான தேவை 2030-இல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை ஒருபுறமிருக்க, உலகின் பல்வேறு இடங்களில் மருத்துவம் என்பது ஏழைகளுக்கு இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. எனவே, இந்த இடைவெளியைத் தவிர்க்க பலரும் செயற்கை நுண்ணறிவை மருத்துவத்துறைக்குப் பரிந்துரைக்கின்றனர். மருத்துவத்துறையில் இதுவரை இல்லாத வகையில் செயற்கை நுண்ணறிவு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

பெருமளவிலான மருத்துவத்தரவுகளைச் செயற்கை நுண்ணறிவு ஆய்வு செய்யும்போது, அது நோய் மற்றும் நோயாளர்கள் பற்றிய துல்லியமான தரவுகளை முன்கூட்டியே வழங்குகிறது. இதனால் நோய் தொடக்கநிலையிலேயே கண்டறியப்படுவதால் நோய்க்கான மருத்துவச்செலவு மிகவும் குறைகிறது.

செயற்கை நுண்ணறிவு என்பது வளர்ந்துவரும் ஒரு தொழில்நுட்பம். ஆராய்ச்சிகளும் பலதரப்பட்ட ஆய்வுகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. எனவே, முழுமையாகச் செயற்கை நுண்ணறிவை மருத்துவர் ஒருவருக்கு இணையாகப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், செயற்கை நுண்ணறிவு சில நேரங்களில் எவ்வித ஆதாரமும் இல்லாத தவறான தகவல்களை உண்மையானவை போல உருவாக்கலாம் அல்லது அது நாடு, இனம், நோய், பொருளாதாரம் தொடர்பான சார்புநிலை அடிப்படையில் (க்ஷயைள) பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம். எனவே, முழுமையாக ஏ.ஐ. தருகின்ற தரவுகளின் அடிப்படையில் மருத்துவம் பார்ப்பது என்பது ஆபத்தை விளைவிக்கலாம்.

மருத்துவத் தகவல்கள் தொடர்பாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏ.ஐ. பாட்களைப் பயன்படுத்தும் சூழல் ஒருபுறமிருக்க, மறுபுறம் சமூக ஊடகங்களில் செல்வாக்குச் செலுத்துவோர் (Social Media Influencers) மருத்துவக் குறிப்புகளையும், உடல்நலப் பிரச்சினைகளையும் எடைக்குறைப்புப் பற்றியும் பேசிவருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் இணையதளத்தில் பார்த்த உடல் எடையைக் குறைக்கும் முறையைப் பின்பற்றி, பல மாதங்களாக வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி வந்ததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மருத்துவர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரின் (Certified Nutritionist) வழிகாட்டுதல் இல்லாமல் தீவிரமான உணவு முறைகளைப் பின்பற்றுவது உயிருக்கே ஆபத்தானது என்பதை நாம் உணரவேண்டும்.

மருத்துவம் பற்றிய அடிப்படைச் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கு இணையம் அல்லது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம். ஆனால், மருத்துவரிடம் நேரடியாக உரையாடுவதும் ஆலோசனை கேட்பதுமே நலமான வாழ்வுக்கு வழி வகுக்கும்.