news-details
சிறப்புக்கட்டுரை
முதியோரைக் குறிவைக்கும் ‘சைபர்’ஆபத்து! (வலையும் வாழ்வும் – 45)

“என்ன மூப்பு, உம்ம பத்தி எல்லாவனும் ஏதேதோ சொல்லுரானுவ. எடுத்தியருனா குடுத்திடும். எதுக்குத் தேவ இல்லாத சண்ட சச்சரவு...”

மிக்கேல் தன் சொந்தக்காரன் என்றாலும் தன்னைத் திருடன் என்று முடிவே செய்துவிட்டது யாகப்பனுக்குப் பிடிக்கவில்லை. அமைதியாகவே ஊர்க் கூட்டத்தில் உட்கார்ந்திருந்தார். யாகப்பனை ஒரு காலத்தில் ‘கடல் ராசானுதான் எல்லாரும் சொல்வார்கள். கடல் பற்றிய அறிவு அவரைப்போல யாருக்கும் இருந்ததில்லை. 1964 இராமேஸ்வரம் புயலால் பாதிக்கப்பட்டு, தனுஷ்கோடியிலிருந்து பாம்பன் வந்து தொழில் பாக்குற குடும்பம்தான் யாகப்பனுடைய குடும்பம். கரையான்கள் சேர்ந்து மண்கோபுரம் கட்டுவதுபோல யாகப்பனுடைய குடும்பம் சேர்ந்து ஒரு பெரிய மீன்பிடி படகு ஒன்றை வைத்து தொழில் பார்த்துக்கொண்டிருந்தது. யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை; ஒருநாள் இலங்கைக் கடற்படை, எல்லைகடந்து மீன் பிடித்ததற்காக யாகப்பனுடைய படகைப் பறிமுதல் செய்து, ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கியது.

படகை இழந்தது என்பது, பறவை ஒன்று தன் சிறகை இழந்த வேதனையைக் கொடுத்தது. அன்று உடைந்துபோன அந்தக் குடும்பம் இதுவரை எழுந்திருக்கவே இல்லை. ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக அவர் கையில் இருந்தது ஒரு சிறிய பழைய படகு ஒன்றுதான். கடல் தொழிலுக்குப் போகும் ஆள்களையும், வலை போன்ற பொருள்களையும் ஏற்றிக் கொண்டு ஆழ்பகுதியில் நங்கூரமிட்டிருக்கும் பெரிய படகிற்குக் கொண்டு சேர்ப்பதற்கானது அது. ஒரு காலத்தில் கடல் ராசா, இன்று கடல் சேவகன். இந்தச் சூழலில்தான் யாகப்பனுக்கு இந்தத் திருட்டுப் பட்டம்.

என் போட்ல இருந்த ஜி.பி.எஸ். கருவிய அந்தக் கிழவன்தான் எடுத்தான்னு எல்லாரும் சொல்றானுவ. அந்தக் கிழட்டு மூதிகிட்ட மருவாதயா ஒப்படைக்கச் சொல்லுங்க என்று ஊர்க் கூட்டத்தில் பாதர் முன்னிலையில் கோபத்தில் கொப்பளித்தான் சைமன்.

அந்த ஜி.பி.எஸ்ஸை வச்சிக்கிட்டு நான் என்னய்யா பண்ணப் போறேன்? அத வித்துச் சாப்பிடணுங்குற நிலையில அந்த மாதா என்னய வச்சுக்கல என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். யாகப்பன் சார்பா பேசுறதுக்கு அங்கு யாரும் இல்லை. பிணம் இருக்கும் இடத்தில் கழுகுகள் கூடுவதுபோல, பணம் இருக்கும் மனிதர்களோடுதான் உறவுகளும் ஒட்டிக்கொள்கின்றன. யாகப்பனுக்கு அவமானமாக இருந்தது. தன் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஒன்று கூடியிருக்கிற இடத்தில், தன்னை அவமரியாதையாகப் பேசுவது ஏதோ போலிருந்தது. அந்த வேதனையை முகத்தில் காட்டிக்கொள்ளாமலேயே இருந்தார்.

சரி, நேரமாகுது. யாகப்பரே, எதா இருந்தாலும் பாதர் முன்னாடி உண்மையைச் சொல்லிடுங்க. நாளைக்கு உன்மேல போலீஸ் கேஸ் வந்தா நாங்க யாரும் வரமாட்டோம் என்று ஊர் பெரியவர் ஒருவர் தீர்ப்பெழுதாத குறையாகச் சொல்லிவிட்டு எழுந்தார்.

அன்று இரவு முழுவதும் யாகப்பனுக்குத் தூக்கமே வரவில்லை. கடற்கரை வலை பழுதுபார்க்கும் கூடத்திலேயே படுத்துக்கிடந்தார். அதிகாலை மூன்று மணி இருக்கும். கடலில் ஒரு வினோதமான மாற்றம் தெரிந்தது. காற்றின் வேகத்தில் கடல் அலைகள் கரையை நோக்கித் தள்ளப்படும் விதம் மாறுபட்டு இருந்தது. கடற்கரை ஓரத்தில் நின்றிருந்த அவருக்கு ஏதோ விபரீதம் வரப்போவது தெரிந்தது. தன் அனுபவ அறிவில் அச்சூழல் அவரின் இதயத்துடிப்பை எகிறச் செய்தது.

யாகப்பன் ஊர் முழுக்க ஓடிச் சென்று ஒவ்வொரு கதவாகத் தட்டினார். “எல்லாரும் எந்திரியுங்க! எல்லாரும் உயரமான இடத்துக்கு ஓடுங்க! ஆழிப் பேரலை வருது!” என்று கத்தினார்.

சைமனின் வீட்டு முன் நின்று, “சைமா! உன் படகை அப்புறப்படுத்து! பெரிய சுழி வருது, சீக்கிரம் ஓடு!” என்று எச்சரித்தார். முதலில் யாரும் நம்பவில்லை. சைமன் ஏளனமாக, “இந்தக் கிழவன் பைத்தியம் புடிச்சு அலையுறான் என்று சொன்னான். ஆனால், அடுத்த பத்தே நிமிடங்களில் கடல் உள்வாங்கத் தொடங்கியது. யாகப்பனின் கண்கள் பொய்யுரைக்காது என்பதை உணர்ந்த சில மீனவர்கள் பதறியடித்துக்கொண்டு உயரமான இடங்களுக்கு ஓடினர். பேரலை வந்து அந்தக் கிராமத்தையே புரட்டிப்போட்டது.

மறுநாள் காலை, கடற்கரையில் அனைவரும் கூடினர். சைமனின் பெரிய படகு நங்கூரமிட்ட இடத்திலிருந்து விலகி, பாம்பன் பாலத்தில் மோதிச் சிதைந்து கிடந்தது. கடல்கரைக்கு அடித்து வரப்பட்ட பல பொருள்களில் சைமனின் ஜி.பி.எஸ். சும் அடங்கும். பாதர் மெதுவாக யாகப்பனிடம் வந்து, “யாகப்பரே, உங்களைத் திருடன்னு இந்த ஊர் சொல்லிச்சு. ஆனா, நீங்க இன்னைக்கு எல்லாரையும் காப்பாத்தியிருக்கீங்க. எங்களுக்கு நீங்கதான் ஜி.பி.எஸ்.” என்றார். காட்டுப் பன்றி ஒன்றை விழுங்கிவிட்டு அசைய முடியாமல் கிடக்கும் மலைப்பாம்பைப்போல எதுவும் நடக்காததுபோல இவ்வளவு சேதத்தை அரங்கேற்றிய பிறகு அசைவின்றிக் கிடந்தது கடல்.

யாகப்பர் தாத்தாவைப்போல இன்றைய உலகில் முதியோரின் அனுபவம் பல வேளைகளில் உதாசீனப்படுத்தப்படுகிறது.  இணைய உலகம் முதியோருக்குப் பல வசதிகளைக் கொண்டு வந்தாலும், அதே உலகம் புதிய அபாயங்களையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, தொழில்நுட்பத்தை முழுமையாக அறியாத முதியவர்கள் பலர் போலியான அழைப்புகள், வங்கி மோசடிகள் மற்றும் ஆன்லைன் ஏமாற்றுகளின் இலக்காக மாறி வருகின்றனர்.

இந்தியா ஒரு வேகமான மக்கள்தொகையில் மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. 2011-ஆம் ஆண்டில் 100 மில்லியனாக இருந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 2036-ஆம் ஆண்டிற்குள் 230 மில்லியனுக்கும் அதிகமாக, அதாவது இரண்டு மடங்கிற்கும் மேலாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சிறாரைப் போல முதியோரும் அதிகமாக இணையத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் வங்கிப் பரிவர்த்தனைகள், இணைய வழி ஷாஃப்பிங், உடல்நலப் பராமரிப்பு மேலாண்மை, பொழுதுபோக்கு, சமூக ஊடகங்கள் மற்றும் இதரச் செயல்பாடுகளுக்காக இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

முதியவர்கள் தனிமையில் இருப்பது, அவர்கள் ஒருவர்மீது வைக்கும் அதிகளவிலான நம்பிக்கை, நினைவாற்றல் குறைபாடு, ஏமாற்றத்தை வெளியே சொன்னால் பலரும் கிண்டல் செய்வார்களோ என்ற பயம், தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் போதிய அனுபவம் இல்லாதது போன்ற காரணங்களே சைபர் குற்றவாளிகள் முதியோரைக் குறிவைப்பதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. முதியவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட மொத்த சைபர் குற்ற வழக்குகளில் ‘அடையாளத் திருட்டு (identity theft) 33 விழுக்காடாகவும், ‘மெய்நிகர் ஆள்மாறாட்டம் (அதிகாரிகளைப்போல நடித்து நம்பவைப்பது - virtual impersonation) 62 விழுக்காடாகவும் உள்ளது. இந்தியாவில் பல முதியவர்கள் இத்தகைய குற்றங்களுக்கு இரையாவதற்கு டிஜிட்டல் விழிப்புணர்வு இல்லாமையே மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

உங்களுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட உள்ளது அல்லது ‘உங்கள் KYC காலாவதியாகி விட்டது என்று கூறி யாராவது போன் செய்தால், அதை நம்பாதீர்கள். வங்கிகள் ஒருபோதும் போனில் உங்களுடைய SMS அல்லது கடவுச்சொல்லைக் (Password) கேட்காது. அப்படி யாராவது கேட்டால், உடனடியாக இணைப்பைத் துண்டித்துவிடுங்கள். வாட்ஸ்அப் அல்லது எஸ்.எம்.எஸ்.  (SMS) மூலம் வரும் அரசின் இலவச உதவித்தொகை, பென்சன் உயர்வு அல்லது ‘விலை உயர்ந்த பரிசு விழுந்துள்ளது போன்ற செய்திகளை நம்பி அதில் இருக்கும் லிங்குகளைக் (Link) கிளிக் செய்யாதீர்கள். சில நேரங்களில் உங்கள் உறவினர் அல்லது தெரிந்தவர் போலப் பேசி, “நான் அவசரமாக மருத்துவமனையில் இருக்கிறேன், எனக்குப் பணம் அனுப்புங்கள் என்று மெசேஜ் வரலாம். பணம் அனுப்புவதற்கு முன், அந்த உறவினருக்கு நேரடியாகப் போன் செய்து பேசி உண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

முதியவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களில், குற்றவாளிகள் பெரும்பாலும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வங்கிப் பிரதிநிதிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் போன்ற அடையாளத்தோடு அல்லது பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் போல நடித்து ஏமாற்றுகிறார்கள். எனவே, முதியவர்கள் இணையதளங்களைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்; ஏனென்றால், சைபர் குற்றவாளிகள் பெரும்பாலும் அவர்களின் பயம் அல்லது அறியாமையைப் பயன்படுத்தி ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்.  முதுமையிலும் தனிமையிலும் தவிக்கும் முதியவர்கள் தங்கள் அனுபவத்தாலும் ஞானத்தாலும் இந்தச் சைபர் ஆபத்துகளை எதிர்கொள்ளத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.