news-details
சிறப்புக்கட்டுரை
ஆரோக்கியமான வாழ்க்கைக்கான மருத்துவர் சீட்டு

மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் தினமும் ஒரு விசித்திரமான காட்சியை நாம் காண்கிறோம். கையில் பழைய மருத்துவக் கோப்புகள், முகத்தில் கவலை, கண்களில் நம்பிக்கை, இதயத்தில் ஒரு மௌனமான வேண்டுதல்.

டாக்டர், நான் நன்றாக ஆகிவிடுவேனா?” இந்த ஒரு கேள்விக்குள் எத்தனை அச்சங்கள் அடங்கியிருக்கின்றன! எத்தனை கனவுகள், எத்தனை பொறுப்புகள்! எத்தனை சொல்லப்படாத வேண்டுதல்கள்!

மருத்துவர் நோயைக் கண்டறிகிறார். சில பரிசோதனைகள், சில அறிவுரைகள். இறுதியில் ஒரு மருத்துவர் சீட்டு. அந்தச் சிறிய வெள்ளைத்தாளில் எழுதப்பட்டிருப்பது வெறும் மருந்துகளின் பெயர்கள் அல்ல; வாழவேண்டும் என்ற மனிதனின் ஆழ்ந்த ஆசைக்கு அளிக்கப்படும் நம்பிக்கையின் பதிலாகும்.

ஆனால், இன்று நம் வாழ்க்கையை நோக்கிப் பார்த்தால், உடலுக்கு மட்டுமல்ல; மனத்திற்கும், உறவுகளுக்கும் ஆன்மாவிற்கும் சிகிச்சை தேவைப்படுவதை உணர்கிறோம். உடல் சோர்வடைவதற்கு முன் மனம் சோர்வடைகிறது. நோய் வருவதற்கு முன் நம்பிக்கை குன்றுகிறது. தூக்கம் வருவதற்கு முன் எண்ணங்கள் துரத்துகின்றன. நண்பர்கள் அதிகரிக்கின்றனர்; ஆனால், நெருக்கம் குறைகிறது. வீடுகள் பெரிதாகின்றன; ஆனால், உரையாடல்கள் சிறிதாகின்றன.

அமைதியைத் தேடும் மனங்களுக்கு, அர்த்தத்தைத் தேடும் இளைய தலைமுறைக்கு, அன்பைத் தேடும் உறவுகளுக்கு, நம்பிக்கையைத் தேடும் மனித இதயங்களுக்கு எழுதப்பட்ட ஒரு வாழ்க்கை மருத்துவர் சீட்டு.

நோயறிதல்

நோயாளியின் பெயர்: மனிதகுலம்

வயது: நவீன நாகரிகம்

முக்கியக் குறைகள்: மன அழுத்தம், ஒப்பீடு, தனிமை, அவசரம், அன்பு குறைவு

மருத்துவர் சீட்டு

நன்றி உணர்வு: தினமும் காலை ஒரு மாத்திரை. கண் திறந்தவுடன் குறைகளை எண்ணாதீர்கள். கிடைத்தவற்றை எண்ணுங்கள். நன்றியுணர்வு என்பது மனத்தின் எதிர்ப்புச்சக்தியை உயர்த்தும் இயற்கை மருந்து.

அன்பு: அளவில்லாமல் எடுத்துக்கொள்ளலாம்இந்த மருந்திற்குப் பக்கவிளைவுகள் இல்லை. கொடுப்பவரும் குணமடைவார்; பெறுபவரும் மகிழ்வார்.

மன்னிப்பு: காயம் ஏற்பட்ட உடனே மன்னிக்காமல் வைத்திருக்கும் கோபம், மற்றவரைக் காட்டிலும் நம்மையே மெதுவாகக் காயப்படுத்துகிறது.

அமைதி: இரவு உறங்குவதற்கு முன் 15 நிமிடம். சில நேரங்களில் மனத்திற்குத் தேவைப்படும் சிறந்த சிகிச்சை பதில்கள் அல்ல; அமைதியே!

குடும்ப உரையாடல்: தினமும் ஒரு முறை. ஒரே வீட்டில் வாழ்வது உறவல்ல; ஒருவரை ஒருவர் உண்மையாகக் கேட்பதே உறவு.

நடைப்பயிற்சி: தினமும் 30 நிமிடம்: உடல் நகரும்போது சிந்தனைகளும் தெளிவடைகின்றன. சில நேரங்களில் நாம் நடப்பது பாதையில் அல்ல; நம்மை நோக்கியே.

சிரிப்பு: தேவைக்கேற்ப மனிதன் கண்டுபிடித்த மிகச்சிறந்த இயற்கை மருந்துகளில் ஒன்று.

செபம்: ஆயுள் முழுவதும் தொடரவும். மருத்துவம் உடலைத் தொடும்; செபம் உள்ளத்தைத் தொடும். சில காயங்களை மருந்துகள் ஆற்றாது; இறைவனின் உடனிருப்பு ஆற்றும்.

பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள்

பிறரை ஒப்பிட்டு உங்கள் மதிப்பை அளக்காதீர்கள்.

அலைப்பேசித் திரையைக் காட்டிலும் மனித முகங்களை அதிகம் பாருங்கள்.

வெற்றியை மட்டுமல்ல, மன அமைதியையும் தேடுங்கள்.

உடல்நலத்தைப் போலவே மனநலத்தையும் கவனியுங்கள்.

அன்பைச் சேமிக்காமல் பகிருங்கள்.

மீள் பரிசோதனை

ஒவ்வோர் இரவும் உங்களையே கேளுங்கள்:

இன்று யாரையாவது மகிழ்ச்சிப்படுத்தினேனா?

யாருடைய வேதனையையாவது கேட்டேனா?

என் மனத்திற்கு ஓய்வு கொடுத்தேனா?

இறைவனுக்கு நன்றி கூறினேனா?

இறுதிக் குறிப்பு

இந்த மருத்துவர் சீட்டில் எழுதப்பட்ட மருந்துகள் எந்த மருந்தகத்திலும் கிடைக்காது. ஆனால், அவை ஒவ்வொரு மனித இதயத்திலும் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ளன. நன்றி உணர்வைத் திறந்து பயன்படுத்துங்கள். அன்பை அளவின்றிப் பகிருங்கள். மன்னிப்பைத் தாமதிக்காதீர்கள். அமைதியைத் தேடுங்கள்.

இறைவனை நம்புங்கள்; அப்போதுதான் வாழ்க்கை வெறும் நாள்களைத் தள்ளிச்செல்லும் பயணமாக அல்லாமல், குணமடைந்து மலர்ந்து அர்த்தம் பெறும் ஒரு புனிதப் பயணமாக மாறும்.

உடலுக்கு மருந்து தேவைப்படுவதுபோல, வாழ்க்கைக்கும் சில நல்ல பழக்கங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை முறையாக எடுத்துக்கொண்டால், வாழ்க்கையே ஆரோக்கியமாகிவிடும்.