“எனக்கு அந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவே யில்லை. யாரும் இல்லாத இடத்தில் நான் ஏன் தனியா இருக்கணும்? அதான் பெட்டியைத் தூக்கிட்டு வீட்ட விட்டு வந்துட்டேன்.”
திருச்சி இரயில்வே ஸ்டேசனில் தன் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த யாரோ ஓர் இளம் பெண்ணிடம் தன் துயரக் கதையைக் கூறிக்கொண்டிருந்தாள் அறுபத்தைந்து வயதான பார்வதி பாட்டி.
ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த அந்த இளம்பெண் படிப்பதை விட்டுவிட்டு, பாட்டி கூறிக்கொண்டிருந்த கதையில் மூழ்கிப் போனாள்.
“புள்ளைங்க எல்லாம் சென்னையில செட்டிலாயிட்டானுங்க. என்னையும் வீட்ட வித்துட்டு அங்க வந்திடுங்கன்னு சொல்லுறானுங்க. நான் இத்தனை வருசம் வாழ்ந்த வீட்ட விட்டுப்புட்டு ஊரு பெயரு தெரியாத அந்த இடத்துக்கு எப்படிப் போவேன்? என் பெயருல இருக்கிறதே அந்த வீடு மட்டும்தான்; அதை எப்படி விப்பேன்?” என்று தன் வேதனைக் கதையைப் பச்சரிசியில் புள்ளிக்கோலம் போடுவதுபோலத் தெளிவாகத் தொடர்புபடுத்தி சொல்லி முடித்தாள்.
பாட்டி கூறிய கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்குப் பாட்டியை அவள் பிள்ளைகள் யாருக்கும் பிடிக்கவில்லையென்றும், பாட்டியின் சொத்தை அபகரிக்கவே பிள்ளைகள் திட்டம் போடுகிறார்கள் என்பதும் புரிந்தது.
“சரி பாட்டி, வீட்ட விட்டு வந்திட்டீங்க. இப்போ எங்கே போகப் போறீங்க?” என்று கேட்டவுடனேயே ‘ஓ’வென்று கதறி அழுதாள் பார்வதி பாட்டி.
“ஏன் பாட்டி அழுவுறீங்க? நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?” என்று பதற்றத்தில் கேட்டாள் அந்த இளம்பெண்.
கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு அப்படியே முகத்தில் கொஞ்சம் சிரிப்பைக் கொண்டுவர முயற்சித்தாள் பார்வதி பாட்டி. தன் முகத்தை முந்தானையால் துடைக்கும் போது அவள் கண்ணீர்த் துளிகளோடு கொஞ்சம் சோகமும் முந்தானையோடு ஒட்டிக்கொண்டது என்றே தோன்றியது.
என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை; திடீரென்று இருக்கையிலிருந்து எழுந்த பார்வதி பாட்டி, “நான் வீட்டுக்கு உடனே போகணும், என் பூனை இலட்சுமணனைத் தெரியாம என் ரூம்லேயே பூட்டிக்கிட்டு வந்திட்டேனு நினைக்கிறேன். அவன் என்ன சாப்பிட்டானோ தெரியலை. புள்ள என்ன பாடுபட்டிட்டிருக்கோ தெரியலை...” எனத் தன் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டாள் பார்வதி பாட்டி.
பாட்டியின் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்குப் பாட்டி சென்ற பிறகும் பாட்டியின் கதை, நாரை பறந்துபோன பிறகும் மரக் கிளைகள் ஆடிக்கொண்டிருப்பதுபோல, உள்ளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
‘பூனையைக் கூட பிரிந்து செல்ல மனமில்லாத பார்வதி பாட்டி வாழ்கின்ற காலத்தில் என் கணவனையும் பிள்ளைகளையும் பிரிந்து வந்திருக்கிறேனே?’ என்று ஒரு நிமிடம் எண்ணிப்பார்த்தாள் அந்த இளம்பெண்.
அவள் பயணம் செய்ய வேண்டிய கொல்கத்தா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் மெதுவாக நடைபாதையை விட்டு சென்று கொண்டிருந்தது. ஆனால், அந்த இளம்பெண் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
மனித உறவுகளும், அறிவியல் தொழிற்நுட்பப் படிப்புகளும் ஒன்றுபோல்தான். அவை மாறிக்கொண்டே இருப்பவை. அந்த மாறுதல்களுக்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்ளவில்லையென்றால், நாம் இருக்கின்ற இடத்திலிருந்தே மாற்றப்படுவோம்.
தொழில்நுட்பம் நம் வேலையை எடுக்கப் போவதில்லை; மாறாக, தொழில்நுட்பம் தெரிந்தவர்கள், தொழில்நுட்பம் தெரியாதவர்களின் வேலையை எடுக்கப்போகின்றார்கள் என்பதுதான் உண்மை.
எனவே, வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு உலகில் நாம் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும்.
உலகில் மருத்துவம், தொழில்நுட்பம், கணிதம், இராணுவம், பாதுகாப்பு, ஊடகம், கல்வி, வேளாண்மை, மேலாண்மை என்று எல்லாத் துறைகளிலும் ஏ.ஐ.யினுடைய பயன்பாடு அதிகரித்திருக்கின்றது. ஏ.ஐ.யின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் அதற்கான வேலைவாய்ப்பும் பெருகியிருக்கிறது எனலாம்.
ஏ.ஐ. துறையில் என்ன படிக்கலாம்? எங்குப் படிக்கலாம்? என்பதை இங்குக் காண்போம்.
1. MBA / PG Diploma in AI & Business Analytics (ஏ.ஐ. பிசினஸ் அனலிட்டிக்ஸில் எம்.பி.ஏ. / பி.ஜி. பட்டயப் படிப்பு)
பிசினஸ் மேனேஜ்மென்ட் மற்றும் காமர்ஸ் பின்னணியில் வருகிறவர்கள் இப்படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். ஐஐடி (IIT), ஐஐஎம் (IIM) போன்ற கல்வி நிறுவனங்களில் இதைப் பயிலலாம்.
2.
MCA / M.Tech in AI and Machine Learning (ஏ.ஐ. மற்றும் மெஷின் லேர்னிங்கில் எம்.சி.ஏ. / எம்.டெக்.):
ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி மற்றும் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இதைப் பயிலலாம்.
3. B.Sc / B.Tech in AI and Data Science (ஏ.ஐ. மற்றும் டேட்டா சயின்ஸில் பி.எஸ்.சி. / பி.டெக்.):
டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், அமெட் பல்கலைக்கழகம், புனித சேவியர் கல்லூரி மற்றும் என்ஐடி போன்ற இடங்களில் இதைப் பயிலலாம்.
4. A.I. Bootcamps (ஏ.ஐ. பூட்கேம்ப்கள்):
ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாம்பே போன்றவற்றில் குறுகியகாலப் படிப்பாக இவை உள்ளன. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் தங்கள் திறனை மேம்படுத்த இது உதவும்.
5.
Online AI Certification Programs (ஏ.ஐ. சான்றிதழ் படிப்புகள்):
உடாசிட்டி (Udacity), சுயம் பிளஸ் (Swayam Plus), கோர்ஸ்செரா (Coursera) போன்ற தளங்களில் இத்தகைய குறுகிய காலச் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. தொடக்க நிலையில் இருப்பவர்கள் ஏ.ஐ. பற்றிய அடிப்படை அறிவைப் பெற இத்தகைய இணையதளப் படிப்புகளைப் படிக்கலாம்.
‘ஏ.ஐ. தெரியாதவர்கள், ஏ.ஐ. தெரிந்தவர்களிடம் தங்கள் வேலையை இழப்பார்கள்’ என்று கூறப்படுகிறது. எனவே, பெருகிவரும் ஏ.ஐ. தொடர்பான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு இளையோர் தங்களையே தகுதியானவர்களாக மாற்றிக்கொள்ளவேண்டும்.