news-details
சிறப்புக்கட்டுரை
“மனித குரல்களையும் முகங்களையும் பாதுகாத்தல்”( 60-ஆம் உலக தகவல் தொடர்பு நாளுக்காகத் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் செய்தி)

அன்புக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே!

நமது முகங்களும் குரல்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மை வாய்ந்தவை. இவை மீண்டும் உருவாக்க இயலாத அவரதுதான்மையைவெளிப்படுத்துகின்றன. இவை அவர் பிறரோடு உறவுகொள்ளும் விதங்களின் கூறுகளை நிர்ணயிக்கின்றன. நம் முன்னோர் இதனை நன்கு அறிந்திருந்தனர். ஒரு மனிதனை வரையறுக்க பழங்காலக் கிரேக்கர்கள்புரோசோபோன் (Prosopon) முகம் என்ற சொல்லைப் பயன்படுத்தினர். இச்சொல்லின் மூலச் சொல்லானது, தனக்கு முன்னால், தன் பார்வையில்படும்படி இருப்பதையும், அதன் இருப்புத் தன்மையையும், அதனோடு உறவுகொள்ளுதலையும் குறித்துக் காட்டுகிறது. அதற்கு மாறாகஆள் (per-sonare) என்னும் இலத்தீன் மொழிச் சொல், ஒலி என்பது ஏதோ ஒரு சத்தத்தையல்ல; மாறாக, ஒருவருடைய குரலோசையைத் தவறின்றிஇது அவரது குரலேஎனக் குறித்துக்காட்டுகிறது.

முகங்களும் குரல்களும் புனிதமானவை. தமது உருவிலும் சாயலிலும் நம்மைப் படைத்த கடவுள், தமது திருவார்த்தையால் நம்மை உயிருடன் உண்டாக்கியபோது, நமக்குத் தனித்தனியான முகங்களையும் குரல்களையும் கொடுத்தார். ஆண்டுகள் பலவாக, இறைவாக்கினர்களின் குரல்கள் வழியாக ஒலித்த இறைவனின் வார்த்தை காலம் நிறைவேறியபோது மனிதர் ஆனார். நாமும் இந்த வார்த்தையைக் கேட்டும் கண்டும் இருக்கிறோம் (1யோவா 1:1-3). கடவுள் தமதுதான்மையையே நமக்கு வெளிப்படுத்துகிறார். ஏனெனில், கடவுளின் திருமகனாகிய இயேசுவின் குரல் மற்றும் முகத்தின் வழியாக இவற்றை நாம் அறியச்செய்கிறார்.

நாம் படைக்கப்பட்டபோதே ஆண்களும் பெண்களும் தம்மோடு உரையாடுபவர்களாக இருக்க கடவுள் விரும்பினார். புனித நீசா நகர் கிரகோரியார் (குறிப்பு 1) கூறுவதுபோல, “தமது இறையன்பின் பிரதிபலிப்பை நமது முகங்களில் அவர் பதித்துள்ளார். இதனால் நாம் நமது முழுமையான மனிதத்தன்மையை அன்பின் வழியாக வாழ முடியும். எனவே, மனித முகங்களையும் குரல்களை யும் பாதுகாப்பது படைப்பில் நமது முகங்களிலும் குரல்களிலும் கடவுள் பதித்துள்ள அழிக்க முடியாத இறைவனின் அன்பைப் பாதுகாப்பது ஆகும்.”

மனிதராகிய நாம் ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட உயிர் - வேதியியல் விதிகளால் உருவாக்கப்பட்ட இனம் அல்ல; நாம் ஒவ்வொருவரும் மாற்றியமைக்க முடியாத தனித்துவமான அழைத்தலைக் கொண்டுள்ளோம். இந்த அழைத்தல் நமது வாழ்வின் அனுபவங்களிலிருந்து தோன்றி, பிறரோடு நாம் கொள்ளும் உறவாடல்களில் வெளிப்படும்.

மனிதரின் முகங்களையும் குரல்களையும் பாதுகாக்கும் இப்பணியைச் செய்யத் தவறினால், எப்போதும் நிலைத்திருக்கும் என அலட்சியமாக நாம் கருதும் மனிதப் பண்பாட்டின் அடித்தளத் தூண்கள் சிலவற்றை முழுமையாக மாற்றிட எண்ணிமத் தொழில்நுட்பம் அச்சுறுத்துகிறது. இது மனிதரின் குரல்கள், முகங்கள், அறிவு, ஞானம், உணர்வுநிலை, பொறுப்புணர்வு, இரக்கம், நட்பு போன்றவற்றைச் செயற்கை நுண்ணறிவு அமைப்பு முறையில் உருவகப்படுத்துகிறது. தகவல்களின் சுற்றுச்சூழல் அமைப்புமுறையில் தலையிடுதலோடன்றி, மனித தொடர்பாடலின் அடித்தளமான மனித உறவுகொள்ளுதலில் அத்துமீறிக் குறுக்கிடுகிறது. இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த சவால் மட்டுமல்ல; மாறாக, இது மானுடவியல் சார்ந்த சவாலாகும். நமது முகங்களையும் குரல்களையும் பாதுகாப்பது நம்மையே பாதுகாப்பதாகும். துணிவோடும் உறுதியோடும் அறிவுக்கூர்மையோடும் செயற்கை நுண்ணறிவும், எண்ணிமத் தொழில்நுட்பமும் அளிக்கும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வது என்பது, முக்கியப் பிரச்சினைகள், சிக்கல்கள், பேரிடர்கள் போன்றவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல

உங்கள் சிந்திக்கும் ஆற்றலைக் கைவிட வேண்டாம்

சமூக ஊடகங்களில் ஈடுபாட்டை அதிகரிக்க உருவாக்கப்பட்ட நெறிப்பாட்டு முறைகள் (Algorithms) பல்வேறு தளங்களில் உணர்ச்சிப்பூர்வமான உடனடிப் பலன்களைத் தந்தாலும் சிந்திக்கவும் புரிந்துகொள்ளவும் போதுமான நேரம் எடுக்கும் மனிதச் செயல்பாடுகளை மிகவும் பாதிக்கின்றன. இந்த நெறிப்பாட்டு முறைகள் மனிதரை எளிதில் ஒத்துப்போகும் அல்லது எளிதில் ஒத்துப்போகாத எண்ணிமக் குமிழிகளாகப் பிரித்து வைக்கின்றன. இந்த நெறிப்பாட்டு முறைகள் செவிமடுக்கவும், விமர்சித்துச் சிந்திக்கவும் மனிதருக்குள்ள ஆற்றலைக் குறைத்து, சமூக துருவப்படுத்துதலை அதிகரிக்கின்றன.

அனைத்தும் அறிந்தநண்பனாகவும்அறிவு அனைத்திற்கும் ஊற்றாகவும் ஒவ்வொரு நினைவகத்தின் காப்பகமாகவும் எல்லா அறிவுரைக்கும்தெய்வ வாக்காகவும்இன்று கருதப்படும் செயற்கை நுண்ணறிவை (AI) கேள்விக்குட்படுத்தாமல் சார்ந்திருப்பது இன்று தீவிரப்படுத்தப்படுகிறது. மேலும், இது நமது படைப்பாற்றலோடும் பகுப்பாய்வுத் திறனோடும் சிந்திக்கும் திறனையும், ஒரு கருத்தின் தொடரியலுக்கும் சொற்பொருளுக்குமிடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளும் மனித ஆற்றலையும் இது படிப்படியாக அழித்து விடுகிறது.

தொடர்பாடலின் செயல்பாட்டு மேலாண்மைக்குச் செயற்கை நுண்ணறிவு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்தாலும், காலப்போக்கில் நமது சிந்திக்கும் ஆற்றலைக் குறைத்து, செயற்கைப் புள்ளியியல் தொகுப்புகளைச் சார்ந்திருத்தலையும் அறியும் திறனையும் உணர்வாற்றலையும், தொடர்பாடல் திறன்களையும் குறைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகச் செயற்கை நுண்ணறிவு செயல்முறைகள், புத்தகங்கள், இசை, காணொளி போன்றவற்றின் தயாரிப்பைத் தன்வசப்படுத்தியுள்ளது. இது படைப்பாற்றல் கொண்ட தொழில்முறைகளை மாற்றியமைக்கும் ஆபத்தைத் தோற்றுவிக்கிறது. இதனால் எல்லா உற்பத்திகளும் செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்பட்டது (Powered by AI) என்ற பதாகையுடன் மனிதர்களைச் சிந்திக்க இயலாதவர்களாகவும், அன்பும் உரிமையும் இல்லாத செயலற்ற நுகர்வோராகவும் மாற்றுகின்றது. இந்நிலையில் மாமேதைகளின் தலைசிறந்த இசை, கலை, இலக்கியம், படைப்புகள் ஆகியவை இயந்திரங்களின் பயிற்சிக் களமாக மாறி, தமது மாண்பை இழந்துவருகின்றன.

இயந்திரங்கள் என்ன செய்யும்? அல்லது அவற்றால் என்ன செய்ய இயலும்? என்று கேட்பதைவிட, நம்மிடமுள்ள ஆற்றல்மிக்க இயந்திரங்களை அறிவுத்திறனோடு பயன்படுத்தி மனித நேயத்தை வளர்க்க இயலுமா? எவ்வாறு அதைச் செய்ய முடியும் என்பதே இன்றைய முக்கியக் கேள்வியாகும். இன்று மனிதர்கள் போதிய உழைப்பு, அர்ப்பணிப்பு, ஆய்வு, தனிமனிதப் பொறுப்புணர்வு ஆகியவை இல்லாமல், அறிவு வளர்ச்சியின் பயன்களை அடைய முயன்றுவருகின்றனர். இருப்பினும், மனிதன் தன் படைப்பாற்றலைக் கைவிட்டு நமது அறிவின் ஆற்றல்களையும் கற்பனைத் திறனையும் இயந்திரங்களுக்குள் சரணடையச் செய்வது, கடவுளோடும் மனிதரோடும் உறவுகொள்ள நமக்குக் கொடுக்கப்பட்ட நமது திறமைகளைப் புதைக்கும் செயலாகும். இது நமது முகங்களை மறைக்கும் மற்றும் குரல்களை அமைதியாக்கும் செயலாகும்.

இருத்தல் அல்லது இருத்தல் போல நடித்தல் - எதார்த்தத்தையும் உறவுகொள்ளுதலையும் போலியாக உருவகப்படுத்துதல்

கணினித் திரையில் தரவுகளை நகர்த்தும்போதுநாம் தொடர்புகொள்வது உண்மையான மனிதரோடா? அல்லது மெய்நிகர் செல்வாக்குடைய தானியங்கி நிரல்களோடா?’ என்று நிர்ணயிப்பது மிகவும் கடினமாகிறது. வெளிப்படைத்தன்மை குறைவான இந்தத் தானியங்கி முகவர்களின் தலையீடு, மக்களின் பொது விவாதங்களையும் தேர்வுத் திறனையும் மிகவே பாதிக்கிறது. பெரிய மொழி மாதிரிகளின் (LLMs) அடிப்படையில் செயல்படும் தானியங்கி உரையாடிகள் (Chatbots) மனிதரின் எண்ணங்களை, உணர்வுகளை, நடத்தைகளை அவர்கள் அறியாமலேயே கையாளுதல் மூலம் ஒருவரை யோசிக்காமலேயே எதையும் ஒப்புக்கொள்ளவைக்கும் செயல்முறைகள் இன்று மனிதரின் தனிப்பட்ட தொடர்புகளில் ஆச்சரியத்திற்குரிய அளவில் இருப்பதைப் பார்க்கிறோம்.

உரையாடல் சார்ந்த சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளும் தன்மையும், நகலெடுக்கும் தன்மையைக் கொண்ட பெரிய அளவிலான மொழிமாற்றிகள் மனிதரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆற்றல் உள்ளவையாதலால், மனித உறவுகளைப் பாவனை செய்யவல்லனவாக உள்ளன. இந்த மனிதப் பண்பேற்றல் (Anthropomorphization) செயல்பாடுகள் நல்ல, ஆர்வத்தைத் தூண்டும் பொழுதுபோக்காக இருப்பினும், இது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களையும், பிறரை ஏமாற்றும் வகையிலும் செயல்படுகின்றன. தானியங்கி உரையாடிகள் பலரால் அதிகம்விரும்பப்படுவனவாகவும், எப்போதும் எல்லாருக்கும் எளிதில் அணுகக்கூடியனவாகவும் இருப்பதால், இவை நமது உணர்வு நிலைகளை மறைமுகமாக உருவாக்கும் கட்டடக் கலைஞர்களாகச் செயல்பட்டு, நமது தனிமனித நெருக்கத்தில் அத்துமீறி நுழைகின்றன.

நமது மனித உறவுகளின் தேவையைத் தொழில்நுட்ப வளர்ச்சி தவறாகப் பயன்படுத்துதல் தனி மனித வாழ்க்கையில் துயரமான விளைவுகளுக்கு இட்டுச்செல்வதோடு சமுதாயத்தின் சமூக, கலாச்சார, அரசியல் கட்டமைப்புகளையும் அழிப்பதாகும். மனித உறவுகளுக்குப் பதிலாக, செயற்கை நுண்ணறிவினால் செயல்படும் கருவிகள் நமது எண்ணங்களைப் பட்டியலிட்டு, நம்மைச் சுற்றிப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி உலகை உருவாக்குகிறது. இதனால் நம்மைச் சுற்றியுள்ளவை எல்லாமேநமது சாயலாகவும் பாவனையாகவும்தோன்றச் செய்கின்றன. இதனால் நாம் நம்மிலிருந்து வேறுபட்டவர்களையும், நாம் கட்டாயம் உறவுகொள்ள வேண்டிய பிறரையும் சந்திக்கும் வாய்ப்புகள் பறிபோகின்றன. மற்றவர்களை நேரில் அரவணைத்துச் செல்லாதபோது உறவுகள், நட்புகள் இருக்க இயலாது.

மற்றுமொரு மிகப்பெரும் சவால் என்னவெனில், புதிதாகத் தோன்றும் செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளால் சார்பு நிலையும் பாகுபாடும் எழுகின்றன. இதனால் எதார்த்த நிலையை நமக்குத் தருபவரின் அல்லது நம்மிடமிருந்து பெறுபவரின் மனநிலைக்கேற்ப மாற்றப்பட்ட பார்வையில் எதார்த்தத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது. செயற்கை நுண்ணறிவின் உருப்படிவங்கள் அவற்றை உருவாக்குகின்றவர்களின் பார்வைக்கும் நோக்கத்திற்கும் ஏற்ப அமைகின்றன. இவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தரவுகளிலிருந்து ஒரே மாதிரியான படிவார்ப்பு அமைப்புகளையும், முன்சார்பு எண்ணங்கள் கொண்ட சிந்தனை முறையையும் நம்மீது திணிக்கின்றனர். வெளிப்படைத் தன்மையில்லாத நெறிப்பாட்டுமுறைச் செயல்பாடுகளாலும், சமூகம் சார்ந்த தரவுகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாதபோதும், நமது சிந்தனைகள் சூழ்ச்சித் திறத்துடன் கையாளப்பட்டு, நம்மைச் சரியில்லாத வலைப்பின்னல்களில் சிக்கவைக்கின்றன. இதனால் ஏற்கெனவே உள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளையும் அநீதியையும் அதிகமாகத் தீவிரப்படுத்துகின்றன.

இதனால் பெரும் ஆபத்து அடுத்துள்ளது. இத்தகைய ஒப்புருவாக்குதல் மிகவும் ஆற்றல் கொண்டது. செயற்கை நுண்ணறிவு உண்மையான எதார்த்தத்திற்கு இணையான, போலியானஎதார்த்தங்களைஉருவாக்கி நம்மை ஏமாற்ற வல்லது. இது நமது முகங்களையும் குரல்களையும் அபகரிக்கிறது. நாம் பல்வேறு பரிணாமங்கள் கொண்ட இன்றைய உலகில் உண்மைக்கும், புனைக் கதைகளுக்குமுள்ள வேறுபாட்டைக் கண்டுபிடிப்பது நாளுக்கு நாள் கடினமாகி வருகின்றது.

இந்தத் துல்லியமற்றத்தன்மை இப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துகிறது. புள்ளியியல் நிகழ்த் தரவுகளையே தருகின்ற இந்தச் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகள் முழு உண்மைக்குப் பதிலாகத் தோராயமான கணிப்புகளையே தருகின்றன. இவை உண்மைக்கு மாறான மாயையை உருவாக்குகின்றன. தரவுகளின் மூலங்களைச் சரிபார்க்கத் தவறுதல், நிகழ்விடங்களில் அறிக்கை தயாரிப்பதில் ஏற்படும் நெருக்கடிநிலை, நிகழ்விடங்களில் செய்தி மற்றும் தரவுகளைச் சேகரிப்பதிலும், அவற்றைச் சரிபார்ப்பதிலும் உள்ள சிக்கல்கள் முதலியன தவறான தகவல்களைத் தரும் பேராபத்தைக் கொண்டுள்ளன. இதனால் மனிதரிடையே அவநம்பிக்கை, குழப்பம், பாதுகாப்பின்மை போன்றவை தோன்றச் செய்கின்றன.                          

(தொடரும்)